Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

நல்லாட்சி அரசாங்கம் அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்கு சட்டத்தை ஆயுதமாக கையிலெடுத்துள்ளது!

நல்லாட்சி அரசாங்கம் அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்கு சட்டத்தை ஆயுதமாக கையிலெடுத்துள்ளது என முன்னிலை சோசலிச கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.  அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகரவை பொலிஸார் கைது செய்துள்ளமை குறித்து  கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

லஹிரு விரசேகர, மாணவர் போராட்டங்களின் போது நீதிமன்ற உத்தரவினை மீறியதாகத் தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கம் சட்டப் புத்தகங்களை திருப்பி எந்த சரத்துக்களை காண்பித்தாலும், இதன் பிரதான நோக்கம் மாணவர் போராட்டங்களை தடுப்பதாகும்.

மாணவர் தலைவர்களை அமைதிப்படுத்தி கல்வியை விற்பனைப் பண்டமாக மாற்ற அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தரப்பிற்கு சட்டம் ஒரு விதமாகவும் ஏனையவர்களுக்கு வேறு விதமாகவும் அமுல்படுத்தப்படுகின்றது.

நீதிக்காக போராடும் தரப்பினர் ஒடுக்கி அடக்கப்படுகின்றனர். நீதியை நிலைநாட்டவும் மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கைது செய்யப்பட்டுள்ள மாணவர் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென புபுது ஜாகொட கோரியுள்ளார்.