Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

மலையக தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்காக மூவின மக்களையும் இணைத்து போராட்டம்

மலையக தொழிலாளர்களுக்கான 2,500 ரூபா இடைக்கால கொடுப்பனவை தோட்ட கம்பனிகள் வழங்காமல் மாற்று திட்டத்தை முன்வைக்க முயற்சிப்பதாக முன்னணி சோசலிஷ சட்சியின் தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் அமைப்பாளரும் செயலாளருமாகிய துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார். ஹற்றனில் கடந்த  (29/06/2016) புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கூட்டு ஒப்பந்தம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், குறித்த உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கான பேச்சுவார்தை இழுபறி நிலையில் காணப்படுகின்றது. இதனால் பொருளாதார நெருக்கடியில் உள்ள தொழிலாளர்களுக்கு இடைகால தொகையாக 2500 ரூபா வழங்க இணக்கம் காணப்பட்டது.

எனினும் தோட்ட கம்பனிகள் இடைக்கால கொடுப்பனவை வழங்காது மாற்று திட்டத்தை முன்வைக்க முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மலையக தொழிலாளர்களின் வாக்குகளில் நாடாளுமன்றம் சென்றுள்ள அமைச்சர் திகாம்பரம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க விரும்புவதில்லை.

மாறாக சுகபோக வாழ்க்கை வாழ்வதையே விரும்புகின்றனர் என தெரிவித்த அவர், மலையக அரசியல்வாதிகளும் தொழிலாளர்களின் பிரச்சினையில் குளிர் காய்வதாகவும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தோட்ட தொழிலாளர்கள் ஏனைய சமூகத்தை போல சகல உரிமை உடையவர்களாக வாழ்வதற்கு ஒரு நாள் சாம்பளமாக 1000 ரூபாவும், காணி மற்றும் வீட்டு உரிமையும் வழங்கபட வேண்டும் என துமிந்த நாகமுவ வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு கோரி தமிழ் சிங்கள் முஸ்லிம் மக்களை ஒன்றிணைத்து போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும், அதற்கு அனைத்து சமூக அமைப்புகளும், தோட்ட தொழிலாளர்களும் இணைந்து கொள்ள வேண்டுமெனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.