Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

தருவதாக கூறிய ஜனநாயகத்தை கேட்டு போராடியவர்கள் மீது அரசு வன்முறை!

குமார் குணரட்ணத்தை விடுதலை செய்யக் கோரியும், அவரின் பிறப்புரிமையை அங்கீகரிக்கக் கோரியும் போராட்டம் ஒன்று இன்று  நடைபெற்றது. இப்போராட்டம் பகல் 12 மணிக்கு, மருதானை தொழில்நுட்ப கல்லூரி சந்தியில் ஆரம்பித்து காலிமுகத் திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தை நோக்கி நகர்ந்தது. ஜனாதிபதி செயலகத்துக்கு சில நூறு மீற்றர்களுக்கு முன்பாக போலீஸ் அதிரடிப்படையினால் தடுக்கப்பட்டு, போராட்டக்காரர்கள் மீது  நீர் தாரை பிரயோகம் செய்யப்பட்டதுடன் தடியடிப் பிரயோகம் செய்யவும் முயற்சிக்கப்பட்டது. 

இன்றுடன் குமார் குணரத்தினம் கைது செய்யப்பட்டு 77 நாட்கள் ஆகிவிட்டன. மைத்திரி - ரணில் கூட்டரசு கடந்த தேர்தலில் மகிந்தாவை வெற்றி கொள்வதற்க்காக பல வாக்குறுதிகளை அளித்ததன் பேரிலேயே மக்கள் இவர்களை ஆட்சியில் அமர்த்தினர். குறிப்பாக அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனவர்களளை கண்டு பிடித்தல், அரசியலில் ஈடுபட்டதனால் உயிராபத்து காரணமாக நாட்டை விட்டு வெளியேறியவர்கள் எந்த தடையும் இன்றி நாடு திரும்பலாம் என பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆட்சிப்பீடத்தில் அமர்ந்து ஒரு வருட காலத்திற்கும் மேலான நிலையில் கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படுவதற்க்கான அறிகுறிகள் தென்படுவதாக இல்லை.

குமாரின் உடனடி விடுதலையினைக் கோரியும், மேற்குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும் ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் குடும்பங்களுடன் கலந்து கொண்ட இன்றைய ஆர்ப்பாட்டம் மருதானை தொழில்நுட்ப கல்லூரி சந்தியில் ஆரம்பித்து ஜனாதிபதி மாளிகையினை நோக்கி வானுயர கோசங்களை முழங்கியவாறு நகர்ந்தது.

ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஜனாதிபதி மாளிகையினை அண்மித்த வேளையில் வீதிதடைகள் போடப்பட்டு, கலகம் அடக்கும் படையினர் குவிக்கப்பட்டு, ஊர்வலம் தடுத்து நிறுத்தப்பட்டது. வீதித் தடையினை உடைத்து கொண்டு முன்னேற முயன்ற வேளையில்  தண்ணீர்த் தாங்கிகள் மூலம் நீர்த்தாரகை பீச்சி அடிக்கப்பட்டது. ஊர்வலத்தின் முன்னால் நின்நவர்கள் பல அடிகள் தூரம் தூக்கி வீசப்பட்டனர். அரசு உறுதி செய்வதாக கூறிய ஜனநாயகம் இது தானோ?