Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

மின்சாரக் கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டங்களுக்கு NDMLP ஆதரவு!

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் அன்றாடப் பாவனைப் பொருட்களுக்கும் தொடர்ந்து விலைகளை அதிகரிக்கச் செய்து மக்களின் வயிறுகளில் அடித்து வரும் அரசாங்கம் இப்போது மின்சாரக் கட்டணத்தை அதிக அளவிற்கு உயர்த்தியதன் மூலம் மக்களின் தலைகளில் ஓங்கி அடித்துள்ளது.

இவ் அநீதியான மின்சாரக் கட்டண உயர்வுக்கு எதிராக எழுந்துள்ள மக்களின் எதிர்ப்பு முற்றிலும் நியாயமானதாகும். தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் முன்னெடுத்து வரும் மின்சாரக் கட்டண உயர்வுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு இயக்கத்தில் எமது புதிய – ஜனநாயக மாக்சிச- லெனினிசக் கட்சி இணைந்து நிற்கிறது. எதிர்வரும் 21ம் திகதி தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ள மின்சாரக் கட்டண உயர்வுக்கு எதிரான வேலை நிறுத்தம் மற்றும் எதிர்ப்பு இயக்கங்களுக்கு எமது கட்சி தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்து அவற்றில் பங்கும் கொள்கிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் கடந்த எட்டு ஆண்டுகளில் தன்னைத் தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் சார்பான அரசாங்கம் என்றே கூறி வருகிறது. அதற்குச் சப்பைக் கட்டும் வகையில் சில தொழிற்சங்கத் தலைவர்களையும் தொழிற்சங்கப் பெயர்களையும் பயன்படுத்தி அவ்வப்போது வேடிக்கை தரும் ஆர்ப்பாட்டங்களை கூலி கொடுத்தும் நடாத்தி வருகிறது.

ஆனால் நாட்டின் ஏகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் தலைகள் மீது தொடர்ந்தும் விலை உயர்வு கட்டண அதிகரிப்புச் சுமைகளை ஏற்றி மக்களின் அன்றாட வாழ்க்கையை நிலைகுலைய வைத்து வருகிறது. அந்தவகையில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி மக்களை இருட்டில் தள்ளி உள்ளது. இலங்கை மின்சார சபைக்கு குறுகிய காலக் கடனாக பதின்மூவாயிரத்து எழுநூறு கோடி ரூபா (137 பில்லியன் ரூபா) இருந்து வருகிறது. அதேவேளை நீண்டகாலக் கடனாக 2012ம் ஆண்டு முடிவில் இருபத்தியொன்பதினாயிரத்து அறுநூறு கோடி, ரூபா (296 பில்லியன் ரூபா) இருந்து வருகிறது. இவற்றுடன் மின்சாரத்திற்கான உற்பத்திச் செலவையும் சேர்த்தே மக்களின் மீது தாங்க முடியாத கட்டண உயர்வை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது.

மின்சார உற்பத்திக்கு அதிகளவிற்கு எண்ணெய் பயன்படுத்தப்படுவதும், நீர் மின்சார உற்பத்தி உட்பட ஏனைய வழிமுறைகள் கவனிக்கப்படாது விடப்படுவதுமே உற்பத்திச் செலவு அதிகம் எனக் கூறப்படுவதற்குரிய காரணமாகும். அத்துடன் மின்சார உற்பத்தி கம்பனிகளின் அதிக லாபத்திற்கான அழுத்தங்களும் கட்டண அதிகரிப்பில் தாக்கம் செலுத்துகின்றன. மக்களதும் தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகளதும் கடும் எதிர்ப்பைச் சமாளிக்கும் வகையில் ஜனாதிபதி தலையிட்டு பதினொரு லட்சம் வீட்டுப் பாவனையாளருக்கு சலுகைக் கட்டணக் குறைப்புச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது வழமையான ஏமாற்று நடவடிக்கைகளில் ஒன்றேயாகும். ஒன்றைக் குறைத்து மற்றதில் கூட்டிக் கொள்ளும் வழிமுறையே பின்பற்றப்பட்டுள்ளது. இவை வெறும் கண்துடைப்பு நடவடிக்கைகளேயாகும்.

எனவே தற்போதைய மின் கட்டண உயர்வு கைவிடப்படுதல் வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும். தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் மக்கள் சார்பு பொது அமைப்புகளின் கலந்தாலோசனைகளுடன் மின்சாரக் கட்டண உயர்வு மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்பதே நியாயமான வழிமுறையாகும். அதேவேளை பெரும் கம்பனிகள், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வணக்கத்தலங்கள் போன்றவற்றுக்கான மின்சார சலுகைக் கட்டணங்கள் மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்படுவது அவசியமாகும். எல்லாவற்றையும் சேர்த்து தாங்கமுடியாத கட்டணத்தை மக்கள் மீது சுமத்துவதை உடன் நிறுத்த வேண்டு என்பதே எமது கட்சியின் கோரிக்கையாகும்.

–18.05.2013

பொதுச்செயலாளர்

புதிய – ஜனநாயக மாக்சிச – லெனினிசக் கட்சி