Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

அரசின் நோக்கத்தை முறியடித்து, முஸ்லிம்களுக்காக குரல் எழுப்புகின்ற சமூக சக்திகளுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் தரத்தக்க வகையில் பக்க பலமாக இருப்போம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஆசாத் சாலியின் கைதானது, ஒரு தனிமனிதனுக்கு எதிரானதல்ல. இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் சுயாதீனமான அரசியல் குரலை அடக்கி நசுக்குவதற்கு இலங்கை அரசு இப்போது பயங்கரவாத தடைச் சட்டத்தினை ஆசாத் சாலி மீது மீது பிரயோகித்துள்ளது.

ஆசாத் சாலியின் குரலை நசுக்கும் அரசின் முடிவும், இரும்புப்பிடியான ஆதிக்க அத்துமீறலும் சமகாலத்திலும் எதிர்காலத்திலும் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும், விடப்படக் காத்திருக்கும் செயல்களுக்கு எதிராக, முஸ்லிம் சமூகத்திற்குள் இருந்து விடுதலை, சுதந்திரம், சமத்துவம், நீதி, மனிதாபிமான அடிப்படையில் எழுகின்ற குரல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கத் தயங்கோம் என்கிற அடக்குமுறை சமிக்ஞையாகவும் முஸ்லிம்களை நோக்கிய எச்சரிக்கையுமாகவே அர்த்தம் காணவேண்டும்.

இலங்கை அரசின் இன, மத, கலாச்சார, பொருளாதார ஒடுக்குமுறை வடிவம் இப்போது முஸ்லிம்கள் மீது திருப்பப்பட்டுள்ளது என்பதை தெளிவாகக் காட்டும் சான்று இது! இதுவரை தமிழ் மக்கள், மலையக மக்கள் மீதும் அவர்களது அரசியல் போராட்டங்களை ஒடுக்குவதற்காகவும், ஆளும் இலங்கை அரசு பிரயோகித்து வந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முதன்முதலாக ஆசாத் சாலி மீது இலங்கை அரசு பிரயோகித்துள்ளது. இதனை இலகுவாக முஸ்லிம் மக்கள் கடந்து போய் விட முடியாது.

முஸ்லிம்களின் அரசியல் உரிமை, சமூக இருப்பிற்கான அரசியல் குரல் மர்ஹும் அஷ்ரப் அவர்களின் மறைவுடன் மங்கி மறைந்துபோய் வீழ்ச்சியும் தளர்ச்சியும் கண்டிருந்தது. முஸ்லிம்களுக்குள் தோன்றிய சிறு சிறு அரசியல் கட்சிகளும் அத்தலைமைகளும் பாராளுமன்ற அதிகாரத்தைக் கைப்பற்றுவதே முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளைக் காப்பதற்கான மார்க்கம் என சொந்த மக்களை திசைதிருப்பி வந்திருக்கின்றன.

முஸ்லிம்களுக்குள் அதிகமான கட்சிகளும், அதிகமான முழு, அரை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் மீது ஆளும் இலங்கை அரசும் அதன் ஆசியுடனான பௌத்த சிங்கள இனவாத அமைப்புகளும் கட்டவிழ்த்து நடாத்தி வந்த அத்துமீறல்களையும் தாக்குதல்களையும் இந்த அரசியல் தலைமைகளால் தடுத்து நிறுத்த முடியவுமில்லை. இச்செயலினை துணிச்சலுடன் சொந்த மக்கள் நலன் சார்ந்து நின்று தமது கண்டனத்தையும் அரசியல் எதிர்ப்பினையும் வெளிப்படுத்தக்கூட முடியவில்லை.

இந்தச் சூழலில், தமக்காகக் குரல் எழுப்ப தமது சமூக அகத்திற்குள் இருந்து யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு மிக்க கேள்விக்கு விடையாக, முன்னணி அரசியல் தளத்திற்கு துணிச்சலுடன் வந்து குரல் எழுப்பியவர் ஆசாத் சாலி அவர்கள். அந்த வரலாற்றுப் பாத்திரத்தை அவர் வகித்தார் என்பதற்காகவே, இன்றைய இலங்கையின் ஆளும் அரசு அவரைக் கைது செய்து, இருட்டுச் சிறையில் அடைத்து தடுத்து வைத்திருக்கிறது.

சொந்த மக்களின் இருப்பு அச்சுறுத்தப்படும் சூழ்நிலையில் அந்த மக்களின் உணர்வாக இருந்த ஒரு மனிதன் வஞ்சிக்கப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற நிலையில் முஸ்லிம் சமூகம் தீர்க்கமாகவும் தெளிவுடனும், துணிச்சலுடனும் ஆசாத் சாலியின் விடுதலைக்கும், நீதி நியாயம் சகவாழ்வு சமத்துவமிக்க அவரது குரல் இலங்கை அரசின் அரங்கில் தொடர்ந்தும் ஒலிப்பதற்கும் தமது முழுப் பங்களிப்பினையும், ஆதரவினையும் வழங்கவேண்டிய நேரமிது!

பயங்கரவாதத் தடைச்சட்ட நீடிப்பிற்கும், அதன் இருப்பிற்கும் எந்தவிதமான கேள்வியும் பார்வையும் இன்றி இதுவரை ஆதரவு தெரிவித்து வந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அந்தச் சட்டத்தின் கொடுரத்தன்மை குறித்து அக்கறையற்றிருந்த முஸ்லிம் சமூகம், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் உள்ளடக்கம் குறித்தும் ஒடுக்குவோருக்கு வசதியாக இச்சட்டம் எப்படிப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதனை சிந்திப்பதற்கான தருணம் வந்துள்ளது. முஸ்லிம்களை ஒடுக்கி அடக்கி வைத்திருப்பதற்கு பயங்கரவாதத் தடைச்சட்டம் இனி பக்கபலமாகவும் ஒடுக்குமுறை வடிவமாகவும் இருக்கப் போகிறது.

யார் ஒடுக்குகிறார்களோ, யார் அடக்குமுறையைப் பிரயோகிக்கிறார்களோ அவர்களை நோக்கி கருணை மனுக்கோரிக்கை முன்வைப்பதும், அவர்களை நோக்கி கெஞ்சிக் கேட்பதும், ஆசாத் சாலியின் விடுதலையையும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமையை காப்பதற்குமான வழிமுறையாக இருந்து விடப்போவதுமில்லை. இன்னொரு வகையில் இப்படிச் செயற்படுவதே ஆசாத் சாலியின் துணிச்சலான குரலையும், முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விடுதலை உணர்வையும் முஸ்லிம்களுக்குள்ளிருந்து தன்னெழுச்சியாக மேற்கிளம்பும் சுதந்திரமான அரசியல் பாதையையும் அதன் வீரியத்தினை பின்னிழுப்பதற்கான வழிமுறையாகவே மாறிவிடும். நாம் ஜனநாயக தளத்தில் அதன் எல்லைப்பாடுகளுக்குள் செய்ய வேண்டிய பணிகள் எவ்வளவோ உள்ளன. அவற்றினை செய்வதே நமது கடமையாக இருக்க வேண்டும்.

நமது அரசியல் தலைமைகளின் கையாலாகாத்தனமும் அவர்களின் திரிசங்கு நிலையும் நம் எல்லோருக்கும் தெரிந்தவைதான். இவர்களைக் கடந்தும் மறந்தும், இலங்கை வாழ் முஸ்லிம் மக்களும் புகலிட நாடுகளில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களும் செய்ய வேண்டிய பணிகள் நிறையவே உள்ளன. ஆசாத் சாலி மீதான அரசின் திட்டமிட்ட கைதினை எதிர்ப்பதற்கும், முஸ்லிம்களின் அரசியல் சமூக கலாச்சார பொருளாதார உரிமைகளை இராணுவச் சப்பாத்துக் காலின் கீழ்போட்டு நசுக்கும் இலங்கை அரசின் செயற்பாடுகளை எதிர்கொள்வதற்கும் பரந்துபட்ட வகையில் தமது அடையாள எதிர்ப்பினை ஜனநாயக ரீதியில் முஸ்லிம் சிவில் சமூகம் வெளிப்படுத்தியே ஆகவேண்டும். ஆசாத் சாலியின் விடுதலைக்கு முஸ்லிம் சிவில் சமூகம் கூட்டாகக் குரல் எழுப்புவது இன்று அவசியமாகி உள்ளது.

* ஆசாத் சாலியின் விடுதலையை முன்னிறுத்தி வெகுஜனப்போராட்டங்களைத் தொடங்குவோம்.

* அரசின் நோக்கத்தை முறியடித்து, முஸ்லிம்களுக்காக குரல் எழுப்புகின்ற சமுக சக்திகளுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் தரத்தக்க வகையில் பக்க பலமாக இருப்போம்.

* தேசியஇ சர்வதேச ரீதியான அழுத்தங்களை ஏற்படுத்தவதற்கான அனைத்து வழிமுறைகளையும் மேற்கொள்வோம்.

* முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், இலங்கையில் பல்லின, பல்கலாசார அடையாளங்களைப் பேணுகின்ற அரசாங்கம் ஒன்றின் தேவைக்காக சிங்களஇ தமிழ் முற்போக்கு சக்திகளுடன் கை கோர்த்து முன் செல்வோம்.

* சரணாகதி அரசியற் பாதையில் இருந்தும், மஹிந்த ஆளும் குழுமத்தின் காட்டாட்சி அரசியலுக்கு துணை நிற்கும் அதிகார மயக்கத்தில் இருந்தும், முஸ்லிம் சமூகத்தின் சுயாதீனமான அரசியல் குரலை மீட்டெடுப்போம்.

முஸ்லிம் சமூக அகத்திற்குள் இருந்து முஸ்லிம்களுக்காகக் குரல் எழுப்பும் சமூக சக்திகளை ஒடுக்க அரசு மேற்கொள்கின்ற திட்டத்தை முறியடிப்பது இன்றைய நமது முக்கிய பணிகளில் ஒன்றாக உள்ளது. நமது மக்களின் வாழ்வையும் இருப்பையும் உத்தரவாதப்படுத்துவதற்கு முஸ்லிம்களின் குரல் ஐக்கியப்பட்டு தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் ஒலிக்கவேண்டிய வரலாற்றின் முக்கிய தருணம் இதுவெனவும் நம்புகிறோம்.

இலங்கை முஸ்லிம்களுக்கான புகலிட முன்னணி

Exile Front of Sri Lankan Muslim