Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

ஆசாத் சாலி அவர்கள் இலங்கை அரச படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு எதிராக

முஸ்லிம் சமூகத்தின் குரலாக மட்டுமல்லாது ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக பேசிவரும் ஆசாத் சாலியின் கைதானது, கருத்துச் சுதந்திரத்தின் மீதும், ஜனநாயக வரையறைகள் மீதும் நிகழ்த்தப்பட்டுள்ள பாரிய அத்துமீறலாக அமைந்துள்ளது.

இன்று காலை முன்னாள் கொழும்பு மாநகர பிரதி மேயரும் முஸ்லிம் சமூக அரசியல் செயற்பாட்டாளருமான ஆசாத் சாலி அவர்கள் இலங்கை அரச படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமையானது, இலங்கை அரசானது முஸ்லிம் மக்களை ஒடுக்குகின்ற நடவடிக்கையை தீவிரப்படுத்தி, முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் அம்மக்களுக்கு குரல் எழுப்புகின்ற சமூக அரசியல் குரல்களை அச்சுறுத்தி நசுக்குவதற்கும் தயார் நிலையில் உள்ளதை அப்பட்டமாக வெளிக்காட்டி உள்ளது. ஒடுக்கப்படுகின்ற மக்கள் சார்பில் குரல் கொடுப்பவர்களின் குரல்களை நசுக்குகின்ற இத்தகைய நடவடிக்கையினை இலங்கை முஸ்லிம்களுக்கான புலம்பெயர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

தேசிய சிறுபான்மை இனங்களுக்கு எதிரான பாரபட்சம், ஜனநாயக மறுப்பு, கருத்துச் சுதந்திர நிராகரிப்பு, ஊழல்,அதிகார துஷ்பிரயோகம் போன்ற பண்புகளைக் கொண்டு இயங்கி வரும் இன்றைய இலங்கை அரசு, இவற்றுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களையும், ஜனநாயக வரைமுறைகளுக்குள் தமது உரிமைகளுக்காக பேசுபவர்களையும் அரச பலாத்காரத்தின் மூலமாகவும், அச்றுத்தல் மூலமாகவும் அடிபணியச் செய்து அவர்களை மௌனிக்கச் செய்யும் கைங்கரியத்தில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமே ஆசாத் சாலியின் இன்றைய கைது நடவடிக்கையாகும்.

அண்மைக்காலமாக நாட்டில் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெற்றுவரும் வன்முறைகள், அடக்குமுறைக் கூறுகள் தொடர்பில் ஆசாத் சாலி அவர்கள் குறிப்பிடத்தக்க வகையில் தனது பங்களிப்பினை வழங்கியுள்ளார். அவரது உணர்ச்சி பூர்வமான ஒரு சில கருத்துக்கள் தொடர்பில் எமது பார்வை மாறுபட்டு இருந்தாலும் கூட, முஸ்லிம்களின் வாக்குகளால் அரசியல் அதிகாரத்தினைப் பெற்று, முஸ்லிம்களை நசுக்கி அடக்கி ஒடுக்குகின்ற இன்றைய இலங்கை அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கின்ற பெயரளவிலானான முஸ்லிம் அரசியல் தலைவர்களைவிட, ஆசாத்சாலி அவர்களின் சமகாலப் பங்களிப்பு முக்கியமானது. முஸ்லிம் சமூகத்தின் குரலாக மட்டுமல்லாது ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக ஏனைய தமிழ், சிங்கள முற்போக்கு சக்திகளுடன் இணைந்து ஒரு பொதுத் தளத்தில் செயற்பட்டு வரும் ஆசாத் சாலியின் கைதானது கருத்துச் சுதந்திரத்தின் மீதும், ஜனநாயக வரையறைகள் மீதும் நிகழ்த்தப்பட்டுள்ள பாரிய அத்துமீறலாக அமைந்துள்ளது. ஆசாத்சாலி மீதான இந்த திட்டமிட்ட கைது நடவடிக்கையானது ஜனநாயகத்தையும், கருத்துச் சுதந்திரத்தையும் நேசிக்கின்ற அனைத்து மக்களாலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

கடந்த வாரம் வெளியான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் மனித உரிமை ஆர்வலர் அமைப்பு அறிக்கை விமர்சகர்களையும் அதிருப்தியாளர்களையும் இலங்கை அரசாங்கம் துன்புறுத்துவதாகவும், சிறையில் அடைப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தது. அத்துடன் அவ்வறிக்கையில் பின்வரும் கோரிக்கைகளை இலங்கை அரசை நோக்கி முன்வத்தும் இருந்தது.

*மக்களின் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம், அமைதிகரமாக ஒன்று கூடுவதற்குள்ள சுதந்திரம், சங்கமாக ஒருங்கிணைந்து செயல்படுவதற்குள்ள உரிமை போன்றவற்றை இலங்கை அரசு மதிக்கவும், பாதுகாக்கவும், பூர்த்தி செய்யவும் வேண்டும்.

*ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள், மனித உரிமை ஆர்வலர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் கருத்து சுதந்திரத்தை பயன்படுத்திய ஏனையோர் அச்சுறுத்தப்பட்டது, தடுத்துவைக்கப்பட்டது, துன்புறுத்தப்பட்டது, கொல்லப்பட்டது உட்பட்ட தாக்குதல்கள் இலங்கையில் நடந்துள்ளன என்பதை அரசாங்கம் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும்.

*ஒருவர் கொண்டுள்ள அபிப்பிராயம் அல்லது வெளியிடும் அபிப்பிராயம் எதுவாக இருந்தாலும் சரி அவருக்கு எதிராக தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் துன்புறுத்தலும் நடப்பதை இனி கொஞ்சமும் சகித்துக்கொள்ளப்போவதில்லை என்று இலங்கை அரசு தெளிவாக பிரகடனம் செய்ய வேண்டும்.

அம்னெஸ்டி இண்டர்நேஷனல் மனித உரிமை ஆர்வலர் அமைப்பு அறிக்கையை இலங்கை அரசு ஏற்க வேண்டுமென கோருவதும், அதனை நடைமுறைப்படுத்த அனைத்து அரசியல் சமூக சக்திகளும் இன, மத, அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அரசியல் முக்கியத்துவம் உணரப்படல் வேண்டுமென இச்சந்தர்ப்பத்தில் நாம் வலியுறுத்துகிறோம்.

ஜனநாயகத்தையும் கருத்துச் சுதந்திரத்தினையும் நேசிக்கின்ற அனைத்து மக்களையும் அரசியல், சமூக நிறுவனங்களையும் ஆசாத் சாலியின் கைது தொடர்பான எதேச்சாதிகார நடவடிக்கைக்கு எதிராக அணிதிரளுமாறும், தமது கண்டனங்களையும் பதிவு செய்யுமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இலங்கை முஸ்லிம்களுக்கான புலம்பெயர் முன்னணி

02 – மே - 2013