Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மகிந்த வெலிஓய சென்றார்; கொக்குத் தொடுவாய் மக்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கையின் வடக்கே, முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலிஓய (மணலாறு) பகுதியில் கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள தமிழ்க் குடும்பங்கள், தங்களுக்குச் சொந்தமான வயல் காணிகளை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றுகோரி இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

1983-ம் ஆண்டில் இராணுவத்தால் வெளியேற்றப்பட்ட இந்தப் பிரதேசத்து மக்களின் வயற்காணிகளில் சிங்கள குடும்பங்கள் தொடர்ச்சியாக விவசாயம் செய்துவருவதாகவும், அந்த மக்கள் மீளக்குடியேற்றப்பட்ட போதிலும் அவர்களின் காணிகள் மீளவும் ஒப்படைக்கப்படவில்லை என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

 

இதேவேளை வெலிஓய பகுதிக்கு இன்று சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அப்பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள சிங்களக் குடும்பங்களுக்கு காணி உரிமைப் பத்திரங்களை வழங்கிவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.

வெலிஓய பொதுமைதானத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் பேசிய மகிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் செப்டம்பர் மாதம் வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று மீண்டும் தெரிவித்துள்ளார்.

'வடபகுதி மக்களுக்கும் மாகாணசபை தேர்தல் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகின்றோம். வரும் செப்டம்பர் மாதத்தில் இந்தத் தேர்தலை நடத்தலாம் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். முப்பது 30 வருடகாலமாகத் தொடர்ந்த யுத்தம் காரணமாக மக்கள் அனுபவித்த துயரங்கள் பற்றி எடுத்துக் கூற வேண்டிய அவசியமில்லை. இப்போது யுத்தமில்லை. மக்கள் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழக் கூடிய சூழல் உருவாக்கப்பட்டிருக்கின்றது' என்று ஜனாதிபதி மகிந்த கூறியுள்ளார்.

நாட்டில் விவசாய முயற்சிகள் ஊக்குவிக்கப்பட்டிருப்பதாகவும் நெல்லுக்கு விலை அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

'அதேநேரம் மின்சாரக் கட்டணம் உயர்த்தியமை பற்றி எல்லோரும் பேசுகின்றார்கள். சிகரட்டுக்கும் சராயத்திற்கும் விலை அதிகரிக்கும்போது அவற்றின் பாவனை குறைவதில்லை. ஆகவே தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தி மக்கள் வாழ வேண்டும்' என்று இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.