Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பனங்கொட்டையா? ஈரப்பலாக்காயா?

ஆதிகாலத்தில் முதல்முறையாக பூமித்தாயின் புறத்தோல் கீறப்பட்டது. பயிர் செய்கைக்காக மண் உழப்பட்டது. இயற்கையாக மண்ணில் முளைத்த பயிர்களிலும் பார்க்க உழுது பதப்படுத்திய மண்ணில் முளைத்த பயிர்கள் செழித்து வளர்ந்தன. இந்தத தேவையிற்கும் அப்பால் பூமியின் புறத்தோல் மேலும் ஆழமாகத் தோண்டப்பட்டது. கிணறு வெட்டி தண்ணீர் பெற்றோம். இதனையும்விட ஆழமாக தோண்டப்பட்ட போது மென்மையான உலோகம்களும் பிற்காலத்தில் உறுதியான உலோகம்களும் கிடைத்தன.

இங்கே குறிப்பிடும் உறுதியான உலோகம்களுக்கும் தமிழ் தேசியத்திற்கும் (பனம்கொட்டை) சிங்கள தேசியத்திற்கும் (ஈரப்பலாக்காய்) என்ன தொடர்பு? ஜரோப்பாவில் முதலில் கண்டெடுக்கப்பட்ட உறுதியான உலோகம்கள் தான் உலகத்தில் தோன்றிய கைத்தொழில் புரட்சிக்கு அத்திவாரமிட்டன. கைத்தொழிற் புரட்சிதான் “தேசியம்”, “தேசிய எல்லைகள்”, ‘தேசித்திற்கான வரைவிலக்கணங்கள்” என்பவற்றை உருவாக்கின. எங்கே? ஜரோப்பாவில். சில நூற்றாண்டுகளிற்கு முன்னர் எற்ப்ட்ட இந்த சடுதியான கண்டுபிடிப்புகள் பாரிய அளவில் சமூக மற்றங்களையும் வளர்ச்சிகளையும் தோன்றப்பண்ணின.

முக்கியமாக இரும்பும், உருக்கும் ஆதிமனிதனின் கருவிகளான கற்களையும், தடிகளையும், எலும்புகளையும் மாற்ஈடாகியதனால், திறன் மிக்க கருவிகளைக் கொண்டு வேகமான கைத்தொழில் செயற்பாட்டை கொண்டதாகின. இத்திறன் மிக்க கருவிகளின் செயற்பாட்டால் அனைத்துப் பொருளுற்பத்திகளும் அபரித வினயம் பெற்று பல்கிப்பெருகின. அதுவரையில் தேவைகளுக்கா உருவாக்கப்பட்ட கருவிகள் தமது தேவை என்பதைத் நிறைவு செய்து, அதற்கும் அப்பால் பல்கிப்பெருகியது. தொடர்ந்து தமது கிராமத்தின் தேவையைத் தாண்டி, பாரிய பிரதேசத்தின் தேவை என்று கருவிகளுக்கான தன்னிறைவை பெற்றுக்கொண்டது. இதனையும் தாண்டி அடுத்துள்ள பிரதேசங்களுக்கும் விற்பனை செய்யக்கூடிய அளவிற்கும் பல்கிப் பெருகின. இந்நிலையில் அடுத்த பிரதேசத்திலிருந்த பண்ட உற்பத்தியாளர்கள் தமது பிரதேசத்தை தாண்டி விற்பதற்கு தயாராகவிருந்தனர்.

ஜரோப்பாவில் பல இடங்களில் ஒரே சமயத்தில் பல்கிப்பெருகிய இப்பொருள் உற்பத்தியை அந்தந்தப் பிரதேச தரகர்களும் வியாபாரிகளும் வியாபாரமாக்கிய வேளை ஏற்பட்ட வியாபாரப் போட்டி இவர்களிடையே போர்களையும் உருவாக்கியது. பின்னர் ஒரு கட்டத்தில் பாரிய செல்வத்தை உபரி மூலம் பொற்றுக்கொண்ட வியாபாரிகள் போர்களின் மூலம் ஏற்பட்ட பரிய இழப்புக்களை தவிர்க்க வியாபாரப் போட்டிகளுக்கான முதலாளிகள் தமக்கான சமரசத்தை ஏற்படுத்தினர்.

வியாபார சமரரசத்தின் தேவைகள் தான் ஜரோப்பாவில் பாரிய பிரதேச எல்லைகளை (தேசிய எல்லைகளை) உருவாக்கின. வியாபாரத்திற்காக தோன்றிய தேசிய எல்லைகள் வெறும் வியாபாரத்தின் எல்லைகள்தான் என்ற தன்மையை மறைத்து இதன் கருத்தியலை மக்கள் மத்தியில் வெளிப்படுத்துதில் பல “புனிதங்கள்” சேர்க்கப்பட்டன. அப்படிப்பட்ட புனிதங்களை நேரடியாக வெளிப்படுத்துவதிலும் பார்க்க அதற்கான கோட்பாடுகளையும் சித்தாந்தங்களையும் மக்கள் மனங்களில் செலுத்தி விட்டால் இதனை மிகவும் உறுதியாக்கலாம் என்பதனை கண்டு கொண்டது ஜரோப்பிய முதலாளித்துவம். ஜரோப்பிய வியாபாரிகள் ஜரோப்பிய பிரதேசங்களில் இருந்த மதம், மொழி, கலாச்சாரம் போன்ற அனைத்து “புனிதங்களிற்க்கும்” வரைவிலக்கணம்களை தோற்றுவித்து தேசிய விழுமியங்களை உருவாக்கினர். தேசிய விழுமியங்கள் மக்கள் மனதில் உறுதியான பாதிப்புக்களை ஏற்படுத்திய பின்னர் தமது நோக்கத்தினை நிறைவேற்றினர்.

தத்தமது வியாபாரத்திற்கான எல்லைப்பிரதேசங்களை தோற்றுவித்து தமக்கான எல்லைப்பிரதோசங்களை உறுதிப்படுத்தினர். மொத்தத்தில் குறுநில மன்னர்கள், சிறு அரசுகளை அதாவது நிலப்பரபுத்துவத்திலிருந்து வியாபாரத்திற்காக பெரிய எல்லைகளாக விரிவாக்கினர். இந்தத் தொடர்பு மன்னராட்சியிலிருந்து குடியாட்சியை நோக்கிய ஒரு பாச்சலுக்கு ஆரம்பப்படியாக அமைந்தது எனலாம்.

ஜரோப்பாவில் தோன்றிய நாடுகளின் எல்லைகளை நிர்ணயித்தமைக்கு இதுதான் அடிப்படையாகும். மொழி, மதம், கலாச்சாரம் போன்ற எல்லா விடயங்களையும் இதற்கு ஆதாரமாக்கினார்கள் இந்த வியாபாரிகள். ஐரோப்பாவில் ஏற்பட்ட இந்த சடுதியான சமூகமாற்றம்களிற்கும் தேசிய உருவாக்கம்களிற்கும், எங்கள் பனங்கொட்டைகளிற்கும் ஈரப்பலாக்காய்களுக்கும் என்ன தொடர்பு?.

இதுதான் கைத்தொழிற்புரட்சி ஏற்படுத்திய “தேசிய எல்லைகள்”. சில நூறுவருடங்களிற்கு முன்னர் தோன்றிய இந்த தேசிய வரைவிலக்கணங்கள் மீது முதலாம் இரண்டாம் உலக யுத்தங்கள் மிகவும் பாத்தியதையான பாத்திரத்தை தோற்றுவித்தன. காரணம் உலக யுத்தங்களின் பின்னர் தோன்றிய சோசலிச முகாம்களில் ஏற்பட்ட தேசியம் சார்ந்த கோட்பாடு பல கேள்விகளை தோற்றுவித்தன. இங்கே இரண்டு கருத்தாக்கம்கள் முட்டி மோதிக்கொண்டன.

ஓன்று உலக சோசலிச முகாம் உருவாக முன்னரே ஏற்படுத்தப்பட்ட ஜரோப்பிய தேசிய வரைவிலக்கணம்கள். இது முற்று முழுதாக வியாபாரப் போட்டிக்காக தத்தமது பிரதேசங்களை வகைப்படுத்தும் தன்மை வாய்ந்தது. மற்றையது உலக சோசலிச முகாம் தோன்றிய பின்னர் தோன்றிய கோட்பாடு. அதாவது அனைத்து உலக முதலாளித்துவத்திற்கு எதிராக அனைத்து தேசிய பிரதேசங்களில் வாழும் மக்களையும் ஒன்றிணைப்பதற்காக தோன்றிய சுயநிர்ணய கோட்பாடு.

இந்த இரண்டு கோட்பாடுகளும் ஜரோப்பாவில் சில நூற்றாண்டுகளிற்கு முன்னர் தோன்றினாலும் முட்டி மோதிக்கொண்டாலும், இவையிரண்டுமே இயல்பாகவும் சமூக இயங்கியலின் அவசியத்திற்காக தோன்றியவையாகும்.

ஆனால் இந்த நூற்றாண்டில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் (மூன்றாம் மண்டலம்) எற்பட்ட தேசிய எழுச்சிகள், மற்றும் இவைக்கான வரைவிலக்கணங்கள் என்பற்றுக்கும் ஜரோப்பிய தேசிய வரையறைகளிற்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லை என்பதே நல்ல உதாரணம், ஆபிரிக்கா கண்டத்தில் பல நாடுகளின் எல்லைகள் பார்த்தோமாகில் பல சதுரக்கட்டங்களாக ஜரோப்பியர்கள் போட்ட கோடுகளுக்கிடையே அவர்கள் நினைத்த தேசங்களை நிர்ணயித்து விட்டு சென்று விட்டதனை.

இப்போது என்ன பிரச்சனை என்றால் சோழர்கள், பாண்டியர்கள் வழிவந்ததாக கூறும் தமிழ் தேசியமும் (பனங்கொட்டை), ஆரியர் வழிவந்ததாக கூறும் சிங்கள தேசியமும் (ஈரப்பலாக்காய்) தாங்கள்தான் சரியான தேசியக்கோட்பாட்டை கொண்டிருப்பதாக கதறுகிறார்கள். அது மட்டுமல்லாமல் மேற்குறிப்பிட்ட இரண்டு ஜரோப்பிய கோட்பாடுகளையும் ஒன்றாக்கி ஒரே கொழுக்கட்டையாக்கி விட்டனர். ஜரோப்பாவில் தோன்றிய அன்றைய ‘தேசியங்களிற்கும்” லத்தீன்அமெரிக்க, ஆசிய மற்றும் ஆபிரிக்கா நாடுகளில் தோன்றுகின்ற இன்றைய தேசியங்களிற்கும் இவற்றுக்கான வரைவிலக்கணங்களுக்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை என்பதே உண்மை.

உலகில் எந்தக் கோட்பாடானாலும் ஜரோப்பியர்கள் தாங்கள் உருவாக்கிய ஜரோப்பிய மனோபாவத்தில் தோன்றியவைகளையே மற்றைய உலகின் பகுதிகளிற்கும் திணிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இதுவுமே ஒருவகையில் வென்றவர்களின் சரித்திரம்தான். அதாவது எங்களுக்கான தரித்திரம்.

எழுபதுகள் எண்பதுகளில் தமிழ்ஈழ தேசிய விடுதலை போராட்டத்தில் பிரதான பங்கு வகித்த ஜந்து இயக்கம்களினதும் கொள்கை விளக்கம்களை பார்த்தால் தெரியும் இந்த ஜரோப்பிய தேசியத்தின் பாதிப்பை. பிற்காலங்களில் பிரதான ஜந்து இயக்கம்களின் அராஜகத்தை மட்டும் நிராகரித்த சிறு அமைப்புகளான என்.ஏல்.எவ்.ரி (NLFT), பி.எல்.எவ்.ரி (PLFT), புரோவா (PROVA), பாதுகாப்பு பேரவை போன்றவர்களின் கொள்கைகளிலும் இதன் பாதிப்புகள் முழுமையாக உள்ளது.

வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் இன்று ஏற்பட்டு வரும் தேசிய எழுச்சிகள், தேசிய பிரச்சனைகளுக்கான தோற்றுவாய்களும் தீர்வுகளும் உலக வல்லரசுகளாலும், பிராந்திய வல்லரசுகளாலும் ஏற்படுத்தப்படுகின்றன.

உலகப்பரப்பில் நாடுகளாக்கப்பட்ட தேசம் அல்லது தேசியங்கள், காலனிய காலத்திலாகட்டும், நவ காலத்துவ காலத்திலாகட்டும், மேலும் சிறு சிறு தேசங்களாக்கப்படும் பட்சத்தில் வல்லரசுகளால் சுரண்டுவது இலகுவாக்கப்படும் என்பது யதார்த்தமான உண்மை.

சோசலிச முகாம்களால் ஏற்படுத்தப்பட்ட சுயநிர்ணய உரிமையானது, இந்த சுரண்டலுக்கான எதிர்க்கோட்பாட்டை முன்வைக்கிறது. அதே சமயம் சிறுபான்மை இனங்கள் சார்ந்திருக்கும் பெரும்பான்மை இனமானது தனது சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறையை தவிர்க்கும்படி எச்சரிக்கிறது. காரணம் மாக்சியம் மனித இனத்துள் காணப்படும் அனைத்து அடக்குமுறைகளையும் நிராகரிக்கிறது.

சுயநிர்ணயம் என்பது கணவன் மனைவிக்கு இடையிலான விவாகரத்து உரிமை போன்றது. கணவன் எச்சரிக்கப்பட்டும் எல்லை மீறும் பொழுது விவாகரத்தும் தவிர்க்க முடியாதது என்பதனை விளக்குகிறது.

இன்னுமொரு உதாரணம், தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஆலயப்பிரவேசம். காரணம் மேல்சாதிக்காரர்களுக்கு இருக்கும் ஆலயம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் சம உரிமையாக்கப்பட வேண்டும். இது சமத்துவத்தை விரும்பும் எல்லோராலும் விரும்பப்படும் விடயம்.

ஆலயம் என்பது சங்ககாலத்திலிருந்து சமகாலம்வரை, ஆத்மார்தமான ஒரு அம்சமாக வலிந்து வேண்டுமென்றே இணைக்கப்பட்டு விட்டது என்பது உண்மைதான். ஆனால் ஆலயத்துக்குள் இருக்கும் முட்டாள்தனத்தையும், மூடநம்பிக்கையையும் நோக்கி நாங்கள செல்ல வேண்டும் என்று நடத்தும் போராட்டம் தான் உண்மையில் இந்த ஆலயப் பிரவேசம்.

எல்லா சமத்துவமும் கிடைக்கும் காலம்வரை இருக்கும் இடைக்காலத்திலும் நாம் சமத்துவமாக நடத்தப்பட வேண்டும் என்ற கோட்பாடுகளே இந்த விவாகரத்து, ஆலயப்பிரவேசம் மற்றும் சுயநிர்ணயம் எல்லாமே. இங்கே பொத்தம் பொதுவாக இம்மூன்றையும் சுலபமாக ஒன்றாக்கிவிட முடியாது. ஆனால் அடிப்படை சாராம்சத்தில் இவை ஒன்றுதான்.

இலங்கையில் தமிழ், சிங்கள், முஸ்லிம் மற்றும் மலைய மக்கள் அனைவருமே 2009ன் யுத்த அழிவின் உணர்வு மையத்திலிருந்து வெளியேறி பனங்கொட்டை, ஈரப்பலாக்காய் மனோபாவங்களை தூக்கியெறியாமல் எதுவும் நடக்காது.

உலகம் இன்று மிகப்பாரிய மாற்றங்களை எதிர்கொள்ளிறது. விஞ்ஞானம், தொழில்நுட்பம், சமுக மாற்றங்கள் என்பன உலகை சிறு கோளமாக்கி விட்டன. சோசலிசம் தோற்று விட்டது என்று கொக்கரித்த மேற்குலகில் இத்தாலி, சைப்பிரஸ், கிறீஸ் போன்ற நாடுகள் பொருளாதார வங்குரோத்தை அடைந்து விட்டன.

இப்போ குறிப்பிட வேண்டிய பகுதியானது சுயநிர்ணயம், தேசியம் போற்றவற்றின் அடிப்படைகளை இன்றைய சர்வதேச மாற்றங்களுடன் இணைத்து பகுத்து பார்க்க வேண்டும் என்பதே.

இன்று உலகில் அமெரிக்கா உட்பட பாரிய வல்லரசுகள் எல்லாமே தமக்கான “தேசியத்தை” இழந்து வருகின்றன.

ஆனால் இவை எல்லாம் கற்பனையில் காண்கின்ற “ உதிர்ந்து போகின்ற இறுதிக்கட்டமல்ல”.

-சபேசன் -கனடா