Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

மதவாதத்தை அரசுதான் ஊக்குவிக்கிறது: மக்கள் இயக்கம்

'மீண்டும் 83 கறுப்பு ஜூலை கலவரத்தை தூண்ட இடமளிக்கக் கூடாது'

இலங்கையில் மதவாதத்தையும் இனவாதத்தையும் தூண்டி அதன்மூலம் அடுத்த தேர்தலில் வெற்றிபெறுவதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் நோக்கம் என்று ஏகாதிபதிபத்தியத்துக்கு எதிரான மக்கள் இயக்கம் குற்றஞ்சாட்டுகிறது.

 

இந்த துரதிஸ்டவசமான நிலைமை நாட்டை அபாயமான கட்டத்தை நோக்கி தள்ளிக்கொண்டிருப்பதாக அந்த அமைப்பின் இணை ஏற்பாட்டாளர் தம்பர அமில தேரர் கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார்.

நாட்டில் சிங்கள மக்களின் சனத்தொகை கடுமையாக வீழ்ச்சியடைந்துவிட்டதாக செய்யப்படுவது போலியான பிரச்சாரம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

'1981-ம் ஆண்டில் 74 வீதமாக இருந்த சிங்கள மக்களின் சனத்தொகை 2011-ம் ஆண்டில் 74.9 வீதமாக உள்ளது. அதேபோல 30 ஆண்டுகளுக்கு முன்னர் 70 வீதமாக இருந்த பௌத்தர்களின்

சனத்தொகை தற்போது 71-72 வரை காணப்படுகிறது' என்றும் கூறிய தம்பர அமில தேரர், இனவாதத்தை தூண்டுவதற்காகவே இப்படியான கருத்துக்கள் பரப்பப்படுவதாகவும் தெரிவித்தார்.

நாட்டில் பௌத்த பிக்குகளின் தலைமைப் பீடங்கள், இனவாத பிரச்சாரங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காமல் உடனடியாக அவற்றைத் தடுக்கும் நடவடிக்கையில் இறங்கவேண்டும் என்றும் தம்பர அமில தேரர் கேட்டுக்கொண்டார்.

மீண்டும் 83-ம் ஆண்டில் நடந்ததைப் போன்ற இனக்கலவரத்துக்கு இடமளிக்கக் கூடாது என்றும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான மக்கள் இயக்கம் கூறுகிறது.

பலசேனா என்ற பெயர்களுடன் செயற்படுகின்ற பல்வேறுபட்ட பௌத்த கடும்போக்கு அமைப்புகளை அரசாங்கம் தனக்கு வாக்குசேர்க்கும் சக்திகளாக பயன்படுத்திவருவதாகவும் அந்த அமைப்புக் குற்றஞ்சாட்டியது.

ஹலால் குறியீடுகளை நீக்கிக்கொள்வதற்கு காலக்கெடு விதித்துக்கொண்டும் பொலிஸ் மற்றும் இராணுவத்தின் அதிகாரம் தமக்கு இருப்பதாக கோசமிட்டுக்கொண்டும் எவ்விதத் தடையுமின்றி செயற்படுகின்ற அமைப்புக்குப் பின்னால் இருக்கும் சக்தி என்னவென்று தெரியாதா என்று ஏகாதிபத்தியத்துக்கு எதிரான மக்கள் இயக்கம் கேள்வி எழுப்புகிறது.