Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

இனப்படுகொலை செய்தது கருணாநிதி தான் ஆனந்தவிகடனின் அதிர்ச்சி தரும் கண்டுபிடிப்பு

ஆனந்தவிகடனில் அன்று பராசக்தி, இன்று பல்டியே சக்தி என்று ஒரு கட்டுரை வந்திருக்கிறது. கருணாநிதியை கைப்பிள்ளையாக்கி தரும அடி போடும் இது போன்ற கட்டுரைகள் இன்று பரவலாக எழுதப்படுகின்றன. இலங்கைத்தமிழ் மக்களின் இனப்படுகொலையை இணைந்து நடத்திய இந்திய மத்திய அரசை காப்பாற்றுவதற்காக ஆனந்தவிகடன் போன்ற பார்ப்பன ஊடகங்கள் இந்த ஏமாற்று வேலையை செய்கின்றன. ஈழத்தமிழர்களின் கொலைகள், இழப்புகள் குறித்து தமிழ்நாட்டு சகோதர, சகோதரிகளின் இதயங்களில் இருந்து எழுகின்ற கோபத்தை திராவிட முன்னேற்றக்கழகத்தின் மேல் திசை திருப்பி விடும் கள்ளத்தனம் இது.

கருணாநிதியும், தி.மு.கவினரும் ஊழலின் மூலம் கொள்ளையடித்த பணத்தை காப்பாற்றுவதற்காக காங்கிரசின் காலடியில் விழுந்து கிடந்தார்கள். இலங்கைத்தமிழர் இனப்படுகொலை செய்யப்பட்ட போது ஊழல் வழக்குகளின் பயத்தினால் காங்கிரசின் கொலையரசியலை ஆதரித்தார்கள். பொறுத்தது போதும் பொங்கியெழு என்று எழுவதற்கு அவர்கள் மனச்சாட்சி உள்ள மனிதர்கள் அல்ல. கனவிலும், நினைவிலும் பணத்தையும், பதவியையும் உயிர்மூச்சாகி எண்ணி வாழ்பவர்கள். மரணங்களை வைத்தும் பணம் பண்ண முடியுமா என்று யோசிக்க கூடியவர்கள். ஆனால் கருணாநிதியும், தி.மு.கவினரும் நினைத்திருந்தால் கூட, இந்திய மத்திய அரசை எதிர்த்திருந்தால் கூட இலங்கைத்தமிழரின் இனப்படுகொலையை இந்திய அரசு, இலங்கையரசுடன் சேர்ந்து நடத்தியே முடித்திருக்கும். தி.மு.க உறுதியாக எதிர்த்திருந்தால் தி.மு.க வின் மாநில அரசு கலைக்கப்பட்டிருக்கும்.

ஏனெனில் வெளியுறவுக்கொள்கைகளை எவருக்காகவும் அரசுகள் மாற்றுவதில்லை. பாரதிய ஜனதா கட்சியோ, காங்கிரசோ மாறி, மாறி ஆட்சி செய்யலாம். கொள்கைகள் மாறுவதில்லை. இந்திய முதலாளிகளின் வியாபாரம் ஒழுங்காக நடக்க வேண்டும் என்பதே இந்திய அரசின் உள்நாட்டு, வெளிநாட்டு கொள்கை. இந்தியாவின் கனிமவளங்களை கொள்ளையடிக்க வரும் அந்நிய முதலாளிகளிற்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்படும். நாட்டை, இயற்கையை கொள்ளையடிக்க வேண்டாம் என்று போராடும் மலைவாழ் மக்களிற்கும், மாவோயிஸ்ட்டுக்களிற்கும் மரண தண்டனை விதிக்கப்படும். அமெரிக்கா முதல் ரஸ்சியா வரை இந்திய அரசு கூடிக்கலவி செய்யும். கூழைக் கும்பிடு போடும். கோடி பணம் தேடி ஊழல் செய்யும். ஆனால் கூடங்குளத்தில் அணு உலை வேண்டாம் என்று போராடும் ஏழை, எளிய மக்களை ஒருவேளை சோற்றிற்கு வழியில்லாத உழைப்பாளிகளை பணம் வாங்கி போராடுகிறார்கள் என்று பழி சொல்லும்.

அன்று டாட்டாவிற்கும், பிர்லாவிற்கும் கடை திறக்க வழி விட்டிருந்தால் பாகிஸ்தான் உடைக்கப்பட்டிருக்காது. கிழக்குப்பாகிஸ்தான் வங்காள தேசமாக மாறியிருக்காது. பாகிஸ்தானிய ராணுவத்தினரின் கொலைகளிற்கும், பாலியல் வல்லுறவுகளிற்கும் அஞ்சி அகதிகளாக இந்தியாவிற்கு தப்பி வந்த வங்காள மக்கள் சிறப்பு முகாம்களில் குற்றவாளிகளைப் போல அடைக்கப்பட்டிருப்பார்கள். இன்று இலங்கையில் மகேந்திராக்களும், அசோக் லேலான்ட்களும் ஓடித்திரிகின்றன. ஈழத்தை பிரித்திருந்தால், ஈழத்தமிழர்கள் கொல்லப்படுகையில் எதிர்த்திருந்தால் சிங்களதேசம் கைநழுவிப்போயிருக்கும். மகேந்திராவை விற்பது பெரிதா, இலங்கைத் தமிழனின் உயிர் பெரிதா?

முதலாளித்துவத்தின் ஊதுகுழல்களான ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைகள் தேசபக்தி, நாட்டின் நலன் என்று சொல்லிக்கொண்டு எப்போதும் பொய்களையே எழுதுகின்றன. அல்லது பெரிய கள்ளரை ஒளித்து வைத்து விட்டு சின்னக் கள்ளரை கைகாட்டி விடுகின்றன. குப்பையிலே போட்டு எரிக்க வேண்டியதை எல்லாம் பத்திரிகை என்று சொல்லி பணம் கொடுத்து வாங்குகிற தமிழர்கள் எவ்வளவு எழுதினாலும் தாங்குகிறார்கள்.