Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

நானும் என்ரை அம்மாவின் செத்தவீடும்

இண்டைக்கு வெளிநாட்டிலே இருக்கிற கனபேருக்கு இப்ப ஊரெல்லாம் எப்பிடி மாறியிருக்குது எண்ட விசயம் தெரியாது என்று நினைக்கிறேன். இப் கிட்டடியிலே ஊருக்குப் போய்வந்த எனக்கு ஏற்பட்ட சில விசித்திர வினோத அனுபவங்களை இங்கே வெளிநாட்டிலே வந்து சொன்ன போது கனபேரால் இதை நம்ப முடியாமல் இருந்தது. இதை நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறேன்.

நிட்சயமாக இது அம்மா மகன் சென்டிமன் அல்ல. இது ஒரு சமூகம் சப்பந்தமான ஒரு சென்டிமன் தான். என்ரை அம்மா இறந்து போனா என்ற செய்தி கேட்டவுடனே அவசர அவசரமாய் வெளிக்கிட்டு அடுத்த நாளே கொழும்பிலே போய் இறங்கினேன். ஏற்கனவே இறந்து போன ஜயாவின் இறுதிக்கணங்களிலே கலந்து கொள்ள முடியாது போன வேதனையைப் போல் இதுவும் அமைந்து விடக்கூடாது என்பதால் எதையும் யோசியாமல் உடனே புறப்பட்டு விட்டேன்.

எனது குடும்ப நண்பர் ஒருவர் வந்து என்னை அழைத்துக் கொண்டு போனார்.

காடுகள் கரம்புகள் வயல்வெளிகள் தோப்புக்கள் என்று வான் பறந்து கொண்டிருந்தது. வழமைபோல இயற்கையை ரசிக்கவோ அழகுவனப்புக்களைப் பார்க்கவோ மனம் விருப்பம் கொள்ளவில்லை. அம்மாவைப் பற்றிய நினைவுகளும் அம்மா எனக்காக பாடிய பாட்டுக்களும் எனக்குள்ளேயே ஒலித்துக் கொண்டிருந்தது.

முன்பு ஒருகாலமும் அப்படியான ஒரு மனநிலை இருந்திக்கவில்லை. செய்தி கேட்ட நேரமும் நான் பெரிதாக அழவில்லை. இப்போதும் என்னால் வெளியில் அழ முடியாமல் மனதுக்குள்ளேயே அழுது கொண்டிருந்தேன்.

எனது ஊர் நெருங்க நெருங்க என்ரை இதயம் ஏதோ செய்தது. இப்படியான உணர்வு ஒரு போதும் இருந்ததில்லை. அதைபற்றி எழுத முடியாது. சொல்லவும் முடியாது. அனுபவித்தவர்கள் உணர்ந்து கொள்வார்கள். இருந்தாலும் இறப்பு என்பது இயற்கை தானே. இழப்புக்களை எப்போதும் ஏற்கத்தானே வேண்டும் என்ற மனநிலையோடு என்னை நானே திடப்படுத்திக் கொண்டு வீட்டு வாசலில் இறங்கினேன்.

இறங்கியவுடன் பெரிய அதிர்ச்சி. கிட்டத்தட்ட இரண்டு மீற்றர் உயரமளவிலான ஒரு ஸ்பனர். அதிலே அம்மாவின் படமுட்பட அவர் பற்றிய குடும்ப விவரங்களும் அதில் எழுதப்பட்டிருந்தது. ஏதோ ஒரு களியாட்டு விழாவுக்கு கட்டியமாதிரி. ஜெயலலிதாவுக்காக கட்டப்படும் கட்டவுட்டுக்களே முதலில் நினைவில் வந்தது. பார்த்தவுடன் எனக்கு வந்த கோபத்தை ஒருவாறு அடக்கிக் கொண்டு அம்மாவைப் பார்க்கப் போனேன். சொந்தக்காரர்கள் எல்லோரும் வந்து கட்டிப்பிடித்துக் அழுது குளறினார்கள். அம்மா பேசாமல் படுத்திருந்தார்.

ஒருவாறு எல்லாவற்றையும் சமாளித்தக் கொண்டு வெளியே வந்த நான் எனது மச்சானைக் கூப்பிட்டு டேய்…. இதை முதலில் அவிழ்த்து எறியுங்கோ, இது என்ன….கண்டறிய நாகரீகம் என்ற போது அவன் என்னையே கடிந்து கொண்டான்.

என்ன ஒண்டும் விளங்காத ஆளைப் போலே கதைகக்கிறையள்…. இப்ப இது தான் பாஷன். நாங்கள் எண்டபடியால் உந்த ஒண்டோடு நிப்பாட்டிப் போட்டம், மற்றச்சனங்கள் எல்லாம் வழிக்குவழி சந்திக்குச்சந்தி தேர்தல் காலத்தில் வேட்பாளர்கள் படங்களை தூக்குவது போல் இப்ப செத்தவர்கள் பற்றிய மரண அறிவித்தல் பதாகைகள் தூக்கப்படுவது மிகச் சாதரணம்.

எனக்கு ஒரு நியாயங்களும் சொல்ல வேண்டாம். தயவு செய்து இதைக்கழட்டி எங்கேயாவது வையுங்கோ என்றதும் மனமில்லாமல் அதைக்கழட்டி வைத்தார்கள்.

என்னடா இந்தப்புலம்பெயர் தேசத்திலே தான் பிறந்தநாள் திருமணங்கள் சாமத்திய வீடுகளுக்கு இந்த ஸ்பனர் விளையாட்டுக்கள் என்றால் இது இங்கே செத்த வீடுகளையுமல்ல அலங்கரிக்கத் தொடங்கிவிட்டது.

நடக்க வேண்டிய ஆயத்தங்களைச் செய்யுங்கோ என்று கூறிவிட்டு கொஞ்சம் ஆறுதலாய் இருக்க மற்ற ஒரு உறவினர் வந்தார்.

இப்ப முந்தியைப் போல் சவம் கட்டுவதோ அல்லது தண்டிகை கட்டுவதோ வழக்கம் இல்லை. இப்ப கார் தான் பிடிக்க வேண்டும். கார்களும் பல பல விலைகளில் இருக்கு. விலைகளுக்கேற்ற வகையில் கார்களும் அதன் அலங்காரங்களும் வித்தியாசப்படும் என்றும் எண்ணாயிரம் தொடங்கி அறுபதாயிரம் எழுவதாயிரம் வரையிலும் இருக்கு. ரெலிபோன் அடிச்சா சொன்ன நேரத்துக்கு வந்து நிப்பாங்கள்.

வசதிக்காக அல்ல. ஆடம்பரமாகச் செய்ய விரும்பவில்லை. ஒரு சாதாரண வாகனத்தை ஒழுங்கு செய்யுங்கள்.

தண்டிகை இல்லாதது போல் தான் இப்ப பறையும் பாவிப்பதில்லை பான்ட் வாத்தியிசை பிடிப்பது தான் இப்ப முறை. அதுவும் ஆக்கடை தகுதிகளுக்கேற்ற வகையிலே பிடிக்கலாம் என அறிவுரை சொன்னான். தயவு செய்து இந்த வாத்தியக்கச்சேரி ஒண்டும் வேண்டாம் என அறிதியாய் சொல்லிவிட்டேன்.

அடுத்த இன்னுமொரு முக்கிய விசயம், நீங்க விரும்பினால் என்ன விரும்பாட்டாலென்ன ஆட்டோ பிடிச்சு ஸ்பீக்கர் கட்டித்தான் ஊர் ஊராய் அறிவிக்க வேண்டும். இது தான் இலகுவானது என்னவோ செய்து முடியுங்கோ என்று பேசாமல் இருந்து யோசிக்க தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது.

செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும் முடித்து விட்டு வீட்டில் வந்து அமைதியாய் இருந்த போது ஒரு பெரியவர் வந்து பக்கத்தில் அமர்ந்தபடி சொன்னார் தம்பியா ஒரு நல்ல வெலை செய்திருக்கிறாய்…. உந்தக் கண்டறியாத பாண்ட் வாத்தியம் பிடிக்காதது எவ்வளவு அமைதியாய் இருந்தது கன நாளைக்குப்பிறகு ஒரு செத்தவீடு அமைதியாய் இருந்தது. ஒரு கொஞ்ச நாளுக்கு முன்னர் தூக்குப் போட்டு இறந்து ஒரு முப்பத்திரண்டு வயதுப் பொடியனின் இறுதி ஊர்வலத்திலே வாசிக்க வந்தவங்கள் சுறாங்கனி பாட்டு உட்பட பலபைலாப் பாட்டுக்களைப் பாட சில பேர் ஆடிக்கொண்டு போனதைப் பார்க்க…. தம்பி அதை எப்படிச் சொல்வது என்று வருத்தப்படடார்.

நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்து போக அந்தியேஸ்ரி பற்றிய கதைகள் ஆரம்பமானது.

வசதிகளை காட்டுவதற்காக இப்ப கல்வெட்டுக்கள் பெரிய புத்தங்கள் போல அடிக்கப்படுவதாகவும், அதிலே நிறைய விசயங்கள் சேர்க்கபபடுவதாகவும் சொல்லப்பட்டது. சில இடத்தில் ஒரு தாயின் அந்தியேஸ்ரியன்று கல்வெட்டுடன் சினிமாவில் வந்த அம்மா பாடல்கள் அடங்கிய சீடி ஒன்று கொடுக்கப்பட்டது. இந்தச் சீடி ஒன்று இப்ப என்கையில் இருக்கு.

இதை விட சில்வர் தட்டுக்கள், செம்பு, குத்துவிளக்கு போன்ற நினைவுச்சின்னங்களும், மாங்கன்று, பிலாக்கன்று, தென்னை, கமுகு போன்றவையும் அன்பளிப்பாக வழங்கப்படுகின்றது. இதில் உன் வசதி எப்படியேபா அது போல் செய்யலாம் என்று ஆலோசனைகள் சொல்லப்பட்டது.

நான் யோசித்து விட்டு ஒரு மடிக்கணனியோ அல்லது ஜபோன் 5 கொடுப்போமோ என்று கேட்க அவர்கள் சிரிக்கத் தொடங்கினார்கள். ஏன் சிரிக்கிறிர்கள் என வினவிய போது இது…. கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லையோ என்று என்னைப் பார்த்து மேலும் சிரிக்க….

அப்ப நீங்க முதல் சொன்ன விசயங்கள் ஒன்றும் ஓவராக இல்லையோ… நானும் கேட்க எல்லோரும் மௌனமானார்கள்.

இதே போல் செத்தவீட்டின் நிகழ்வுகளை கொம்பியூட்டர் வெப்கமராக்ககள் மூலம் வெளிநாடுகளுக்கு உடனுககுடன் நேரடி ஒளிபரப்புவதற்கான வசதிகளும் மிகச்சாதாரணமான நிகழ்வுகளாக இருக்கின்றது.

இன்னும் சில காலத்தில் சந்தணக்கட்டையிலே தான் பிரேதங்கள் கட்டாயம் எரிக்கப்பட வேண்டிய நிலையும் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இப்ப ஒரு வெள்ளித் தட்டோ அல்லது ஒரு செம்போ அல்லது இன்னொரு பொருளோ அன்பளிபாய் கொடுக்கப்படும் போது குறைந்தது ஒரு லச்சமோ அல்லது அதற்கு மேலாகவே செலவழிக்கப்படுகின்றது.

இதுவென்ன இதே போல் இன்னும் எத்தனையோ விடையங்களுக்காக காசு வலுசிம்பிளாக செலவழிக்கப்படுகின்றது.

திருமணக் கொண்டாட்டங்கள், சாமத்தியக் கொண்டாட்டங்கள், பிறந்த நாள் வைபவங்கள் அல்லது கோவில் திருவிழாக்களோ இழவு வீடுகளோ எதுவாக இருந்தாலும் புலம்பெயர் வாழ் தமிழர்கள் பற்றியே பேசப்படுகின்றது. அங்கே செய்யப்படும் ஒவ்வொரு காரண காரியங்களுக்கும் இந்தப் புலம்பெயர் மக்கள் பற்றியே குறையும் சொல்லப்படுகின்றது.

எங்கடை சொந்தங்கள் வெளியிலே இருக்குதுகள் கலோ எண்டவுடன் கிலோவில் காசு வந்து இறங்கும் என அவர்கள் நினைப்பதும், ஏதோ சொந்தங்கள் கேட்குதுகள் எண்டவுடன் இங்கே இருப்பவர்கள் ஏன் எதற்கு என்று கேளாமல் அனுப்புவதுமே இதற்கு காரணமாகும்

அங்கே நடைபெற்ற பல விடையங்கள் பிடிப்பில்லாமல் மனதைப் புண்படுத்துவதாகவும் அமைந்திருந்தது. வெளிநாட்டிலிருந்த வந்த நான் ஏன் சண்டை பிடித்துப் பகைத்துக் கொள்வான் என்று ஒருவாறு சமாளித்துக் கொண்டு திரும்பி வந்துவிட்டேன்.

இது ஒரு மரண வீட்டிலே ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்கள் தான். இதே போல் அங்கே நடைபெறும் ஒவ்வொரு நிகழ்விலும் நிறையவே மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றது.

ஒரு கிராமத்து வாழ்க்கை முறையே முழுதாக மாறிவிட்டது. அல்லது மாற்றப்பட்டு விட்டது. இது தான் என்ரை கவலை.

எது எப்படியோ, பணம் அனுப்பும் நீங்களே கொஞ்சம் யோசியுங்கள்.

நன்றி. வணக்கம்.