Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

தென்னமெரிக்காவின் நம்பிக்கை நட்சத்திரம் அஸ்தமித்து விட்டது

தென்னமெரிக்காவின் சமூக மாற்றத்திற்கான நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்பட்ட வெனிசுவேலா நாட்டின் அதிபர் சாவேஸ் மரணமடைந்தார். அவர் தனது 58வது வயதில் செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரம் மாலை 4.25 மணிக்கு தலைநகர் கரகாஸில் உயிரிழந்தார். சாவேஸ் 1998ம் ஆண்டு முதல் அதிபராக 14 ஆண்டுகளாக பணியாற்றினார்.

ஆனி 2011ல் சாவேசுக்கு புற்று நோய் இருப்பதாக கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் 2012 அக்டோபர் மாதம் நடந்த தேர்தலில் 54 சதவீதம் வாக்குகளை பெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். 19ம் நூற்றாண்டின் வெனிசுவேலா சுதந்திர போராட்ட வீரர் சைமன் பொலிவாரின் நினைவாக பொலிவாரிய புரட்சி என்று அழைக்கப்படும் சாவேஸின் சீர்திருத்தங்களை பன்னாட்டு பெருநிறுவனங்களும் அவர்கள் சார்பான ஊடகங்களும் கலகக்காரர்களும் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இவருக்கெரிரான கலகங்கள் அனைத்தையும் மக்களின் உதவியுடன் முறியடித்தார்.

இவரின் இழப்பையடுத்து முன்னாள் போக்குதுவரத்து வண்டிச்சாரதியான துணை அதிபர் நிக்லஸ் மடுரோ தற்காலிக அதிபராக கடமையாற்றுக்கின்றார். அதிபரின் இறப்பையிட்டு பத்திரிகையாளரிடம் பேசிய துணைதிபர் தோழர் சாவேசின் பாதையில் பயணிக்கப் போவதாக தெரிவித்தார்.

முன்னாள் இராணுவ அதிகாரியான சாவேஸ் 1998ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று நாட்டு அதிபரானார். அன்று முதல் எண்ணெய் ஏற்றுமதியில் உலகில் 4வதுஇடத்தில் இருக்கும் வெனிசுவேலாவின் எண்ணெய் வளத்தை மக்கள் நலத்துக்கு பயன்படுத்தும் திட்டங்களை தொடர்ச்சியாக செயல்படுத்தினார். 1998ல் புதிய அரசியல் சட்டத்தை ஏற்படுத்த வழி வகுத்தார். பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து அதிக ராயல்டி வசூலித்து அதன் மூலம் அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு மூன்று வேளை சத்துணவு வழங்கும் திட்டம், நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான இலவச மருத்துவ வசதிகள், குடும்பத்துக்கு உழைக்கும் பெண்களுக்கு ஓய்வூதியம் போன்றவற்றை செயல்படுத்தினார். குழந்தை பேறின்போது இறக்கும் பெண்களின் எண்ணிக்கையும் குழந்தைகளிடையே ஊட்டச் சத்துக் குறைவும் பெருமளவு குறைந்தன.

அதிபரின் இழப்பையடுத்து கருத்துக் கூறும் ஆய்வாளர்கள் எதிர்காலத்தில் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படும் என்று கருத்துத் தெரிவிக்கின்றார்கள். மக்கள் நலன் அரசை பேணுவதற்கான பண்டங்கள் கிடைப்பதில் திட்டமிட்ட தட்டுப்பாட்டை ஏற்படுத்துவார்கள் என்பதை இவற்றில் இருந்து அறிந்து கொள்ள முடியும். இவரின் இழப்பு கியூபா மக்களுக்கு இழப்பாகும். இவர் ஆண்டிற்று 6 பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை கியூபாவில் இருந்து பெற்றுக் கொள்கின்றார். இதேவேளை இவற்றிற்கு மாற்றீடாக எண்ணையை மானிய விலையில் கொடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவரின் இழப்பையிட்டு கருத்துத் தெரிவித்த தோழர் பிடல் மகன் போன்ற ஒருவரை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

2002ல் இராணுவ கலகம், 2007ல் நிலச் சீர்திருத்தங்களுக்கான கருத்துக் கணிப்பில் தோல்வி, தொடர்ச்சியான எதிர்பிரச்சாரம் என்று பல வகையான தாக்குதல்களை மக்கள் துணையுடன் முறியடித்தார் ஹியூகோ சாவேஸ்.

அமெரிக்க ஏகாதிபத்திய விரிவாக்கத்தை முறியடிப்பதற்கு தென் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பை ஏற்படுத்துவதில் சாவேஸ் முன்னணி வகித்தார். உலகின் பிறபகுதிகளில் அமெரிக்காவால் சுரண்டப்படும் மூன்றாம் உலக நாடுகளுடன் உறவுகளை வளர்ப்பதை தனது வெளியுறவுக் கொள்கையின் சிறப்பு அம்சமாக வைத்திருந்தார்.

ஏகாதிபத்தியங்களை எதிர்க்கும் சக்திகளுக்கு ஒரு உந்துவிசையாக இருந்துள்ளார். சமூகமாற்றத்தின் ஊடாக அதிகாரத்தைக் கைப்பற்றதாத காரணத்தினால் தொடர்ச்சியாக நாட்டில் இருக்கும் பழைமைவாதிகள், நிலபிரபுக்கள், அதிகாரவர்க்கத்தவர்கள், ஏகாதிபத்திய அடிவருடிகளை சமூகத்தில் இருந்து அகற்ற முடியவில்லை. எதிர்ப்புரட்சி சக்திகளின் நடவடிக்கைகள் வெனிசுவேலாவில் இருப்பது இது ஒரு பின்னடைவாகும்.

வினவு - வேலன்