Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

இலங்கையில் மேலும் இரு மசூதிகள் மீது தாக்குதல்

இலங்கையில் மேலும் இரு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளதாக முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று திங்கட்கிழமை கம்பஹா மாவட்டத்திலுள்ள மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீதும், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள ஒப்பநாயக்க பள்ளி வாசல் மீதும் அடையாளந் தெரியாத நபர்கள் கல் வீச்சு தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக மஹர சிறைச்சாலை வளாகத்திலுள்ள பள்ளி வாசல் சிறைச்சாலைக்குரிய காணியில் அமைந்திருந்தாலும் உள்ளுர் முஸ்லிம்களே தொழுகையில் ஈடுபட்டுவருவதாக பள்ளி வாசல் நிர்வாகியொருவர் தெரிவித்துள்ளார்.

இப் பள்ளிவாசலை அகற்றுமாறு ஒரு மாதத்திற்கு முன்னர் சிறைச்சாலைகள் மற்றும் புனர் வாழ்வு அமைச்சு தங்களுக்கு அறிவித்திருந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.

மஹர பள்ளிவாசல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் நபர்கள் பள்ளிவாசல் சுவரில் பன்றியை வரைந்து ஆங்கிலத்திலும் சிங்களத்தீலும் ஹலால் பன்றி என எழுதிவிட்டு சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் நடைபெறுவதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம்களுக்கு எதிராக எந்தவொரு செயல்பாடுகளுக்கும் இடமளிக்கப்படமாட்டது என அரசாங்க தரப்பிலிருந்து அவ்வப்போது உறுதிமொழிகளும் உத்தரவாதங்களும் வழங்கப்பட்டு வந்தாலும் இத்தகைய சம்பவங்கள் தொடர்வதாக முஸ்லிம்கள் பலரும் கவலையுடன் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

முஸ்லிம் அமைப்புகளின் தகவல்களின்படி அண்மைக்காலங்களில் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் சில இடங்களில் இடம் பெற்றுள்ள போதிலும் எவரும் கைதானதாக தகவல்கள் இல்லை என்பதும் இங்கு குறிப்பித்தக்கது.