Tue04232024

Last updateSun, 19 Apr 2020 8am

SOS RACISM அமைப்பும் - சமவுரிமை இயக்கமும்

சரிவுரிமை இயக்கத்தின் நோக்கத்தையும், அதன் வெளிப்பாடுகளையும் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட சிக்கல்களை களைய வேண்டிய சமூகப் பொறுப்பு ஒவ்வொரு முற்போக்குவாதிகளின் கடமையாகும். சமவுரிமை இயக்கத்தினைப் பற்றி பற்பல வதந்திகள், கருத்துக்கள், சேறடிப்புக்கள் என எதிர்ப்புரட்சிகர கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் இருந்து நாம் பாடம் கற்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

ஒரு அமைப்பு தான் போக வேண்டிய இலக்கை அடைவதற்கு பல்வேறு வேலை முறைகளை முன்வைக்கின்றது. அந்த வேலை முறைகள் ஊடாக மக்களை அணுகுவதே அதன் முதன்மை நிலையாகும். ஆகவே மக்களிடம் அணுகுகின்ற போது சாத்தியமான அனைத்து வழிகளையும் அவ்வமைப்பு பயன்படுத்திக் கொள்ளும். இந்த வகையில் ஒரு இலகுலாக வெகுஜன வேலைமுறையின் வெளிப்பாடே சமவுரிமை இயக்கம்.

சமவுரிமை இயக்கம் ஒரு தன்னியல்பான அமைப்பு இல்லை. இது முன்னிலை சோசலிசக் கட்சியினால் அனைத்து இனங்களின் முன் வைக்கப்பட்டுள்து. புலம்பெயர்ந்த தேசங்களில் புதிய ஜனநாயக மக்கள் முன்னணியும் இதனை ஏற்று நடைமுறை ரீதியில் இயங்க முற்படுகின்றது. எனவே இது தன்னியல்பான அமைப்பு வடிவத்திற்கு அப்பால் ஒரு புரட்சிகர சமூகத்தைப் படைப்பதற்குரிய வேலைத்திட்டதினை முன்வைத்து இயங்குகின்றது. இது தனக்கேயான வேலைமுறைகளைக் கொண்டு செயற்படும் ஒரு அமைப்பாகும். சமவுரிமை இயக்க வேலைமுறை என்பது இலங்கை மக்களுக்கு ஒன்றும் புதிதல்ல. இது 1966களில் சாதிய எதிர்ப்புப் போராட்டத்தின் போது வேறு வடிவத்தில் கட்டமைக்கப்பட்டிருந்தது. ஒரு வர்க்கச் சிந்தனைக்கு எதிராக நடைபெற்ற ஒரு போராட்டத்திற்கு வழிகாட்டியாக கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் இயங்கிய ஒரு வெகுஜன இயக்கம். எமது நாட்டில் செயற்பட்ட விதம் சிந்திக்க வைப்பதாகவும், வழிகாட்டியாகவும் இருக்கி;ன்றது.

அன்றைய சமூக அமைப்பு நிலையில் சாதியத்தியத்திற்கு எதிரான வெகுஜன அமைப்பு, பன்முக எதிர்ப்புகளையும் சேறடிப்புகளையும் சந்தித்ததுதான். அன்றைய சாதிய எதிர்ப்புப் போராட்டத்தை மேட்டுக்குடித்தன வக்கிரத்தில் நின்று எதிர்த்தவர்கள். இவர்கள் தான் தமிழ்க் குறுந்தேசியத்தை தமிழ்த்தேசியமென அன்றும் இன்றும் போன்றுகின்றவர்கள். இவர்களே இன்று சமவுரிமை இயக்கத்தை எதிர்ப்பவர்கள். இவ்வியக்கம் 1966களில் இருந்திருந்தால் அன்றும் எதிர்த்திருப்பார்கள். இவ்வியக்கத்தின் முழுமையான காரணம் என்னவெனில் சமூகத்தின் பழைய சிந்தனையை மறுதலிக்கும் படியும், ஜனநாயக வழிகளில் சிந்திக்கவும் இவ்வியக்கம் தூண்டுகின்றது. அதற்காக அனைவரையும் போராட அழைக்கின்றது.

SOS RACISM

ஐரோப்பாவில் 1980 பின்னர் இடதுசாரி அமைப்புக்களின் வீரியம் குறைந்து வந்திருக்கின்றது. இதன் பின்னர் தன்னியல்பான அமைப்புக்களின் செயற்பாடுகளே முக்கிய பாத்திரத்தை வகித்திருக்கின்றன. தன்னியல் அமைப்புகளின் வேலைமுறைகள் ஊடாக ஏகாதிபத்திய உலகின் பல நாசகார செயல்களை எதிர்ப்பதில் முன்னிக்கின்றன. இன்னும் கூட கூறப்போனால் புரட்சிகர கட்சிகள் நலிவடைந்த நிலையிலும், திரிபுவாதத்திற்கு உட்பட்டுள்ள நிலையில் தன்னியல்பான அமைப்புக்களின் செயற்பாடுகள் முக்கியத்துவமும், அவசியமுமாகின்றன.

வறிய நாடுகளின் கடனை ரத்துசெய்யக் கோரும் அமைப்பு

ஆக்கிரமிப்புக்கு எதிரான அமைப்புக்கள்

இனவாதத்திற்கு எதிரான அமைப்பு

இவ்வாறு பல்வேறு தன்னியல்பான பல அமைப்புகள் இயங்குகின்றன.

SOS RACISM, இந்த அமைப்பு மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இயங்குகின்ற ஒரு வெகுஜன அமைப்பாகும். இந்த அமைப்பு ஒரு தன்னியல்பான செயற்பாட்டிற்கு உட்பட்டதாக, குறிப்பிட்ட நலம் சார்ந்து வர்க்க வித்தியாசம் இன்றி இயங்கும் ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பு இனவாதத்திற்கு எதிராக கட்சி பேதமற்று  இயங்குகின்றது.

இந்த அமைப்பில் அதிகமாக உள்ளவர்கள் சாதாரண மக்களே. இவர்களிடம் இருந்து நிறவெறி எதிர்ப்பு நிலையென்பது சந்தேகத்திற்கு இடமில்லாதாகும். இவர்கள் சில வேளைகளில போராட்டங்களின் போது தக்காளி, முட்டையை நிறவெறியாளருக்கு எதிராக வீசியும் உள்ளார்கள்.

இந்த அமைப்பைப் பற்றி எம்மவர்கள் அதிகம் தெரிந்து கொள்ளவில்லை. இந்த அமைப்பின் செயற்பாட்டினை கண்டு அறிந்து எம்மவர்கள் செயற்பட்ட விகிதம் வெகு சிறிய விகிதமே. இவர்களுடன் சேர்ந்து போராடுவதே சிறுமையாக எண்ணிய பலரை நாம் கண்டுள்ளோம். புலம்பெயர் தேசத்தில் இனவாத அமைப்புக்களில் இணைந்து செயற்படுவதே சிறுமையாக எண்ணுபவர்கள், எப்படி எமது மக்களின் பிரச்சனைகளை புலம்பெயர் நாட்டு மக்களிடம் கொண்டு செல்வார்கள்? இதுதான் யதார்த்தம்.

1990களின் நடுப்பகுதிகளில் நோர்வேயில் அகதிகளை திரும்பி அனுப்புவதற்கு எதிராக பலபோராட்டங்களை நடத்தியுள்ளார்கள் என அறிய முடிகின்றது. இவர்களின் இந்தப் போராட்டத்தின் ஊடாக அகதிகள் அந்தஸ்து கிடைத்து பெரும் பொருளும் வசதிபடைத்தவர்களாக இன்றும் பல உள்ளனர். இவர்களுக்கு தமக்காக யார் போராடினார்கள் என்பதே தெரியாத நிலையைத் தான் காணமுடிகின்றது. இன்றும் இவர்களின் போராட்டங்களினாலும் அழுத்தங்களினாலும் புதிய தேசிய பிரஜைகளின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

SOS RACISM போன்ற ஒரு வெகுஜன இயக்கமான சமவுரிமை இயக்கத்தை எதிர்க்கின்றார்கள். ஒரு குறைந்த பட்ச வேலையைக் கொண்ட ஒரு வெகுஜன அமைப்பு. இந்த அமைப்பின் ஊடாக எவரும் இணைந்து கொள்ள முடியும். இனவாதத்தை எதிர்க்கின்ற எந்த மனிதரும் இணைந்து கொள்ள முடியும். தனது அரசியல் கொள்கையாக இனவாதமற்ற எதனை பின்பற்றினாலும் இணைந்து கொள்ள முடியும். இதனை பலசக்திகள் தவறாக புரிந்து கொண்டது அவர்களின் அரசியல் வறுமையே.

இங்கு முதலாளித்துவ ஒடுக்குமுறையாளன் கூறும் சமத்துவத்திற்கும், பாட்டாளிவர்க்கச் சிந்தனையை முன்னிறுத்தி செயற்படும் அமைப்பு விடுக்கும் கோரிக்கைக்கும் அடிப்படையில் மாறுபாடு இருக்கின்றது. ஒற்று உற்பத்திச் சக்தியை கைப்பற்றி உழைக்கும் மக்களுக்கு உரியதாக்க முனையும் சக்தியும் அதனை தடுத்து ஒடுக்கும் சக்திகளுக்குமிடையேயான கருத்து வித்தியாசத்தை அரசியல் வறுமைகாரணமாக புரிந்து கொள்ள முடியவில்லை.

வேலைத்திட்டத்தில் சுயநிர்ணயம்:

வேலைத்திட்டத்தில் சுயநிர்ணயம் பற்றிய பிரச்சனையை முன்வைத்து பழைய சமூக உற்பத்திச் சிந்தனைக்கும், இந்தச் சமூகச் சிந்தனைக்குள் இருந்து வெளிவரும் வகையான சிந்தனா முறை மாற்றத்தை நோக்கிய போராட்டத்தில் சிக்கல்களை புரிந்து கொள்ள முடியாத நிலைகள் இருக்கின்றன.

1. வெகுஜன அமைப்பு

2. முன்னணி

3. கட்சி

இவை மூன்றுக்கும் இடையேயான தொடர்பினையும் இடம்பெறவேண்டிய வேலைத்திட்டங்களையும் குழப்புவதை இன்று காணக்கூடியதாக உள்ளது. வரலாற்றில் தேசங்களின் உருவாக்கம் மூன்று வழிகளைக் கடந்து வந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் தொழிற் புரட்சியின்வாயிலாக பழைய உற்பத்தி முறையான நிலப்பிரபுத்துவ உறவுகள் சிதைக்கப்பட்டன. தொழிற்துறை வளர்ச்சியின் காரணமாக வளர்ந்த பொருளுற்பத்தி முறைக்கு புதிய வகை நிறுவன அமைப்பு வடிவமும் தேவைப்பட்டது. தொழிற்துறை வளர்ச்சியின் மூலம் முதலாளித்துவம் வளர்ச்சிடைகின்ற போது பழைய ஆட்சிமுறையை, உற்பத்தி முறை தேவைகளை நிவர்த்தி செய்ய முடியவில்லை. வளர்ச்சிடையந்த முதலாளித்துவ உறவிற்கு நிறுவனமயப்படுத்தப்பட்ட அலகுகள் நிர்வகிப்பதற்கு தேவையானது.

உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான சந்தையும் அவசியமாயிற்று வரலாற்று ரீதியான இனங்களைக் கொண்ட தேசங்கள் தமக்கிடையே எல்லைகளை வகுத்துக் கொண்டனர். நீண்ட வரலாற்றைக் கொண்ட நிலப்பிரபுத்துவ ஆட்சிகளைக் கொண்ட எல்லைகள் தமது தேசிய எல்லைகளாக மாறிக் கொண்டது. இவ்வாறு முதலாளித்துவ வர்க்கத்தவர்களிடையே ஏற்பட்ட சமரசம் தான் சுவீஸ்லாந்து, பெல்ஜியம் போன்ற நாடுகளில் தேசிய இனங்கள் (தேசிய முதலாளிகள்) சமாதானமாக சந்தையை பிரித்துக் கொள்ள முடியும் காட்டினர். இதனை லெனின் தேசிய இனங்களின் ஆட்சி முறைக்கு உதாரணமாக காட்டினார்.

முழுமையா முதலாளித்துவ வளர்ச்சி முழுமையாக அடையாத கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் விவசாயமும், வளர்ந்து வரும் நிலையில் இருந்த தொழிற்துறை வளர்ச்சிகளையும் கொண்டதாக இருந்தது. அங்கும் தேசியப் பிரச்சனைகள் தோன்றியது. முதலாளித்துவம் வளர்ச்சியடையாத நாடுகளான போலந்து, பின்லாந்து, உக்கிரேன், செக் போன்ற நாடுகளில் தேசிய இனக் கோரிக்கைகள் எழுந்தன. 1917 புரட்சியின் பின்னர் புதிய வகை அரசு உருவாக்கப்பட்டன. அங்கு தேசிய இனங்களுக்கு பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை வழங்கப்பட்டது. அப்போ பெரும்பான்மையான தேசிய இனங்கள் சோவியத் ஒன்றியத்தின் கீழ் இருக்கச் சம்மதித்தன. இதேவேளையில் பின்லாந்து பிரிந்து சென்றது.

ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகள் சுதந்திரத்திற்காக போராடின. இரண்டாம் உலக யுத்தத்தன் பின்னர் ஏகாதிபத்தியங்கள் முன்னையப் போல நேரிடியாக கொலனித்துவ நாடுகளை கட்டுப்பாட்டினுள் வைத்துக் கொண்டு ஆட்சி செய்யமுடியவில்லை. விடுதலைப் போராட்டம் உக்கிரமாக நடைபெற்ற நாடுகளில் ஆதிக்கவாதிகள் சுதந்திரத்தை தமது நலனைப் பாதுகாக்கக் கூடிய தரகுவர்க்கத்திடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டு விலகிச் சென்றனர். அரை நிலபிரபுத்துவ நாடான இலங்கையும் சுதந்திரம் பெற்றுக் கொண்டது. ஆனால் சீனா ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான யுத்தத்தை தொடர்ந்த வேளையில் புதிய ஜனநாயகப் புரட்சிப் பாதையின் ஊடாக தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு கண்டார்கள். முதலாளித்துவ ஜனநாயகத்தை மக்களுக்கு கொடுத்து அவர்களை பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான பங்குதாரர்களாக்கியது.

சுயநிர்ணயம் முன்வைக்கின்ற போது அடக்கப்பட்ட மக்களின் ஐக்கியத்தை முன்நிபந்தனையாகக் கொண்டும், இணைவிற்காகவே சுயநிர்ணயம் பயன்படுத்தப்படுகின்றது. ஒடுக்கும் தேசத்தின் உழைப்பாளர்கள் பிரிந்து போக வேண்டாம் என்று கோரிக்கை வைக்கும் முறையில் தான் சுயநிர்ணயம் பயன்படுத்தப்படுகின்றது.

”சோசலிசத்தின் குறிக்கோள் மனித சமுதாயம் சின்னஞ்சிறு அரசுகளாகப் பிரிந்துள்ளதையும் தேசங்களின் எல்லாவிதமான தனிமைப்பட்ட நிலையையும் முடிவுக்குக் கொண்டு வருவது தேசங்களை மேலும் நெருங்கி வரச் செய்வது என்பதோடு மட்டுமல்லாமல், அவற்றை ஒருமைப்படுத்துவதும் அதன் நோக்கமாகும். இந்த நோக்கத்தை அடைவதற்காகத் தான் நாம் இரண்டு காரியங்களைச் செய்ய வேண்டும். ஒரு புறம் “பண்பாடு- தேசியத் துறைகளில் சுயாட்சி” எற்பதை ரொன்னர், ஓட்டோ பௌவர் ஆகியவர்களது கருத்தின் பிற்போக்குத் தன்மையை மக்களுக்கு விளக்க வேண்டும். மறுபுறம், பொதுவான தெளிவற்ற சொற்றெடர்களிலல்ல, அர்த்தமற்ற வாய்வீச்சுகளிலல்ல, சோசலிசத்தை அடைந்த பின்னர் கவனிக்க பிரச்சனை என்று அதை “ஒதுக்கி வைத்துவிடும்” முறையிலல்ல, ஒடுக்கும் தேசங்களிலுள்ள சோசலிஸ்டுக்களின் பாசாங்குத்தனத்தையும் கோழைத்தனத்தையும் தனிவகையில் கவனத்தில் கொண்டு தெளிவாகவும் துல்லியமாகவும் வரையறுக்கப்பட்ட அரசியல் வேலைத்திட்டத்தில் ஒடுக்கப்பட்ட தேசங்களின் விடுதலையைக் கோர வேண்டும். எவ்வாறு ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்ற இடைநிலைக் கால கட்டத்தில் மூலமாகத் தான் வர்க்கங்களை மனித சமுதாயம் ஒழிக்க முடியுமோ அதேபோல, ஒடுக்கப்பட்ட எல்லாத் தேசங்களுக்கும் முழு விடுதலை என்ற – அதாவது பிரிந்து போதற்கான சுதந்திரம் உண்டு என்ற - இடைநிலைக் கால கட்டத்தின் மூலம்தான் தேசங்களின் தவிர்க்க முடியாத ஒன்றிணைப்பை அடையமுடியும்.”

இலங்கையில் போராட்ட யுக்தி என்ன?

வேலைத்திட்டத்தில் சுயநிர்ணயம் என்னும் போது பல கட்டங்களை கடந்து வந்து அரசியல் பொருளாதாரத்தில் பல்வேறு பட்ட வளர்ச்சிப் போக்கினை காணமுடிகின்றது. இன்றைய ஏகாதிபத்திய பொருளாதார உற்பத்தி முறையில் எவ்வாறு தந்திரோபாயம் வகுப்பது என்பதுதான் எம்முன்னுள்ள கேள்வியாகும்.

தேசங்களின் சுயநிர்ணயத்தை அங்கீகரிப்பது என்பது அல்ல பெரிய விடயம். அந்த தேசங்களுக்கு எவ்வாறு சுயநிர்ணயத்தைப் பெற்றுக் கொடுப்பது என்பதுதான் பெரிய பிரச்சனையாகும்.

சுயநிர்யணத்தை முன்வைத்துப் போராடுகின்ற அமைப்பாக இருக்கட்டும், பொருளாதாரக் கோரிக்கையை முன்வைத்துச் செயப்படும் அமைப்பாக இருக்கட்டும் முள்ளிவாய்க்காலின் பின்னர் எவ்வாறு இருக்கின்றது என்பதை இங்கு எவரும் கவனத்தில் எடுப்பதில்லை. தனியே சுயநிர்ணயக் கோரிக்கை முன்வைக்கப்படவில்லை என வெற்றுக் கூச்சில் இடுவதில் எவ்வித பலனும் சமூகத்திற்கு ஏற்படப் போவதில்லை. முதலில் திட்டத்தை வை பிறகு நடைமுறை என்பதல்ல.

சொந்த மக்களை நம்பிப் போராட்டத்தினை நடைமுறை ரீதியாக நகர்த்திக் கொள்வதில் இருந்து உருவாக்கப்படும் கோட்பாடுகள் தான் சரியான பாதையை சென்றடைய முடியும். இங்கு குறிப்பிட்ட விடயத்தில் மையத்தில் இருந்து பிரச்சனையை நோக்குமாறு வலியுறுத்தும் தமிழ் தேசிய மையவாதிகளின் நிலைகளில் இருந்து போராட்டத்தினை கொண்டு செல்ல முடியாது. மக்களின் உரிமைக்கான போராட்டத்தை நெறிப்படுத்துவது ஒன்றும் இலகுவானதல்ல. இது அனைத்து உழைக்கம் வர்க்கத்தின் விடுதலையுடனும், ஏகாதிபத்தியங்களுக்கும், பிராந்தியவல்லரசுகள், இனவெறி உள்ளுர் தரகு வர்க்கங்களுக்கு எதிரான போராட்டப்பாதையின் ஊடாகவே வெற்றி கொள்ள முடியும்.

“ஜனநாயக வேலைத்திட்டத்தின் பிரிவுகளில் ஒன்றை, எடுத்துக் காட்டாகத் தேசங்களின் சுயநிர்ணயம் என்பதை, ஏகாதிபத்தியத்தின் கீழ் இது “நிறைவேற முடியாதது” “என்றோ” “பொய்தோற்றம்” என்றோ கூறி நீக்கிவிடுவது கூடப்பெரிய தவறாகிவிடும். முதலாளித்துவத்தின் கட்டமைப்புக்குள் தேசங்களின் சுயநிர்ணய உரிமை நிறைவேற்ற முடியாதது என்ற வாதத்தை எவ்வித நிபந்தனைக்கும் உட்பட்டதல்ல என்ற பொருளாதார அர்த்தத்திலோ அல்லது நிபந்தனைக்குட்பட்டது என்ற அரசியல் அர்த்தத்திலோ புரிந்து கொள்ள முடியும்.”

கட்சி வைக்க வேண்டிய வேலைத் திட்டத்தை ஒரு முன்னணியிடம் எதிர்பர்ப்பது தவறானதாகும். லெனின் கூறுவது போன்று ஜனநாயக வேலைத்திட்டம் என்பது ஒரு கட்சிக்கானது. கட்சி கறாராக வைக்க வேண்டிய நிலைப்பாடாகும்.

இலங்கையில் ஒரு பாட்டாளி வர்க்கக் சட்சி இல்லாத யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். புரட்சிகர கட்சிக்கான தேவை என்பது உள்ளது. புரட்சிகர கட்சியை நடைமுறைப் போராட்டங்களின் ஊடாக கட்டுவதுதான் சரியான நிலைப்பாடாகும்.

இவற்றைப் கவனத்தில் கொள்ளாது முன்னிலை சோசலிசக் கட்சியின் மீதான சுயநிர்ணயம் பற்றிய விமர்சனம் என்பது தந்திரோபாய ரீதியாக தவறானதாகும். பாட்டாளி வர்க்க் கட்சியை நோக்கிய தேவையை அடையவிடாது முடக்கும் செயலாக விமர்சனங்கள் அமைந்து விடும்.

இலங்கையில் உள்ள தேசிய இனங்கள் அனைத்தின் (சிங்களம் உட்பட) சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் என்பது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்ட வடிவத்தினூடாக பயணிக்க வேண்டிய தேவை இருக்கின்றது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே இலங்கைக் கட்சியின் வேலைத்திட்டம் என்பது நிதிமூலதனத்தின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலையடைவாகவும் இருக்க வேண்டும். இந்த வேலையில் சுயநிர்ணயத்தினை உள்ளுர் ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறையில் இருந்து குறுக்கிப் பார்ப்பது அரசியல் தவறாகும்.