Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழ் பிரதேசங்களை திட்டமிட்டு சிங்கள மயமாக்கும் ராஜபக்‌ஷ இராணுவம்!

தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வவுனியா கொச்சான்குளம் பிரதேசத்தில் மேலும் 700சிங்கள குடும்பங்களை குடியேற்றவும், கொச்சான்குளம் பிரதேச சபையை வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் அலுவலகத்தின் (சிங்கள பெரும்பான்மைப் பிரதேசம்) கீழ் இணைக்கடவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிடுகிறார்.

மஹிந்த ராஜபக்ஷ அரசின் தேவையான, வவுனியா மாவட்டத் தமிழ் விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் திட்டமிட்ட இச்சதிக்கு இராணுவத்தையும் பயன்படுத்தி வருவதாக இவர் மேலும் குறிப்பிடுகிறார்.

இந்த விவகாரம் குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

'இதற்கு முன் கொச்சான்குளம் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் 300சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டு அப்பிரதேசத்தின் பெயர் 'கலாபோவெவ" என மாற்றப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 3,000குடும்பங்களைக் குடியேற்றுவதை இலக்காகக் கொண்டு ராஜபக்ஷ அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சட்டவிரோதக் குடியேற்றத்தை நெறிப்படுத்த இராணுவ அதிகாரி ஒருவரையும் அரசு நியமித்துள்ளது.

கடந்த மாதம் 11ஆம் திகதி ஜனாதிபதியின் மூத்த மகனும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவினால் மேலும் 700சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன.

மீள்குடியேற்றத்தின் போது, தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த இப்பிரதேசத்தில் அவர்களே மீண்டும் குடியமர்த்தப்படாமல் தெற்கிலிருந்து கூட்டி வரப்பட்ட சிங்கள குடும்பங்களே குடியமர்த்தப்படுகின்றன.

அதுமட்டுமன்றி, மன்னார், முல்லைத்தீவு, நெடுங்கேணி, அரியகுண்டான் ஆகிய பிரதேசங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ள அதேவேளை 'அரியகுண்டான்" கிராமத்தின் பெயர் 'அதாவெட்டுனவெவ" எனவும் மாற்றப்பட்டுள்ளது" என்றும் குறிப்பிடுகிறார்.

இந்நடவடிக்கைகள் அனைத்தும் பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலின் படி இராணுவத்தால் மேற்கொள்ளப்படுகின்றன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சிங்கள மயமாகும் நாவற்குழி பிரதேசம்

யாழ்ப்பாணம், நாவற்குழி பிரதேசத்தில் 135சிங்கள குடும்பங்களை குடியேற்றும் திட்டத்தை ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் முழுமையான ஆதரவுடன் ஜாதிக்க ஹெல உறுமய கட்சியும், இராணுவமும் இணைந்து முன்னெடுத்து வருகிறது.

அரசாங்கம், தெற்கில் இருந்து அழைத்துவரப்பட்டவர்களுக்காக அவசர அவசரமாக 128வீடுகளை நிர்மாணத்து வரும் அதேவளை, நிரந்தரமாக அங்கு குடியிருந்த மக்களை தொடர்ந்தும் தற்காலிக கொட்டில்களிலேயே விட்டுவைத்துள்ளனர்.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிக்குகள் அமைப்பினால் தாம் வடக்கிற்கு அழைத்து வரப்பட்டு குடியமர்த்தப்பட்டதாகவும், இதற்காக தலா 5லட்சம் ரூபா பணத்தை அவர்கள் தமக்கு வழங்கியதாகவும் தெற்கில் இருந்து நாவற்குழிக்கு அழைத்துவரப்பட்ட மக்கள் பகிரங்கமாக தெரிவித்துள்ளனர்.

இந்தப் பிரதேசத்திற்கு அண்மையில் விஜயம் செய்திருந்த தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரவிடமே அந்த மக்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

சிங்கள மக்களைச் சந்தித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அங்கு விரைந்து சென்ற இராணுவத்தினர், '' ஏன் இந்தப் பிரதேசத்திற்கு வந்தீர்கள்" என்ற தொனியில் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பியை அச்சுறுத்தியுள்ளனர்.

நாவற்குழி பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றத்தை நிர்மாணித்து வரும் இராணுவத்தினர், அந்தப் பிரதேசத்திற்கு ஊடகவியலாளர்களுக்கு முற்றாக தடை ஏற்படுத்தியுள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது.