Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழ் மாணவருக்காக சிங்கள மாணவர் கொடுத்த குரலின் விளைவே பல்.கலை மாணவர் விடுதலை!

மாவீரர் நாளுக்கு தீபம் ஏற்றியதற்காக படையினரால் கைது செய்யப்பட்டு வெலிகந்தை புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு  வந்த யாழ்.பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்ஷானந்த், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் ஜெனமேஜெயந் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விடுதலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட உத்தரவிற்கு.  அமைய மேற்படி மாணவர்கள் வவுனியாவில் வைத்து விடுதலை செய்யப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மகிந்தாவின் யாழ் விஜயம் குறித்த நல்லெண்ண சமிக்கையாக இது செய்தியாக வெளிக்காட்டப்படுகின்றது. ஆனால் மகிந்தாவின் தலைமையிலான ராணுவமே மாணர்களின் ஜனநாயக உரிமையினை காலில் போட்டு நசித்து மாணவர்களின் மேல் வன்முறையினை ஏவியது. இந்த ஜனநாயக மீறல் குறித்து பாசிஸ்ட் மகிந்தா வாய் திறக்கமாட்டார்.

மேலும் இந்த மாணவர்களின் விடுதலைக்காக பல்கலைக்கழக ஆசிரியர்கள், தென்னிலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் முதல் பல ஜனநாயக அமைப்புக்கள் வரை போராட்டம் நடத்தினர். பல பத்தாண்டுகளிற்கு பின்னர் தமிழ் மாணவாருக்காக தென்னிலங்கை பல்கலைக்கழகங்களில் போராட்டம் நடத்தப்பட்டது என்பது ஒரு புதிய திருப்பமே.

இனங்களை பிரித்து கூறு பொட்டு தமது ஆட்சியை தக்கவைத்து நாட்டை கொள்ளையிடும் சிங்கள பேரினவாதிகளிற்கு, சிங்கள பிரதேசங்களிலிருந்து சிறுபான்மை இன மக்களுக்க்கான குரல் எழுவது கிலியை எழுப்பி உள்ளதனை எவரும் மறுக்க முடியாது.

இந்த மாணவர்கள் கைதின் பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தில் ஜனநாயக குரல்கள் எழுவது மிகவும் கடினம். அரசு மாணவர்களை கைது செய்து சீர்திருத்த முகாமிற்கு அனுப்பி விடுதலை செய்யும் போது இது போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் எழா வண்ணம் பயமுறுத்தியே மாணவர்களை விடுதலை செய்துள்ளது. எனவே நீண்ட காலத்திற்கு இனி யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் குரல்கள் அடங்கியே இருக்கும்.

இந்த மாணவர்களிற்க்காக குரல் எழுப்ப தெற்கு மாணவர்கள் வீதியில் இறங்க எப்போதும் தயாராக உள்ளனர். எனவே தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் தெற்கு மாணவர்களுடன் தமது கரங்களை இறுகப்பற்றிக் கொள்வதன் மூலம் தான் இனி தமிழ் மாணவர்களின் ஜனநாயகத்திற்க்கான செயற்பாடுகளை மீட்டெடுக்கக முடியும்.