Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ரணில் தலைமையிலான ஜக்கிய முன்னணி மக்கள் நலனுக்கானதல்ல!

ரணில் தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சியின் முன்னெடுப்பில் மகிந்த அரசுக்கெதிரான ஜக்கிய கூட்டு முன்னணி ஒன்று இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டு முன்னணியில் தற்சமயம் பத்து கட்சிகள் அங்கம் வகிப்பதுடன் அதன் தலைவர்கள் இன்று கூட்டு முன்னணிக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்கள். கட்சிகளின் பெயர்கள் பின்வருமாறு:

1. ஐக்கிய தேசிய கட்சி

2. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

3. ஜனநாயக மக்கள் முன்னணி

4. ஐக்கிய சோஷலிச கட்சி

5. நவ சமசமாஜ கட்சி

6. நவ சிஹல உறுமய

7. மெளபிம ஜனதா கட்சி

8. ருஹுனு ஜனதா கட்சி

9. எக்சத் ஜனதா பெரமுன

10.முஸ்லிம் தமிழ் முன்னணி

இக்கட்சிகளின் தலைவர்களான ரணில் விக்கிரமசிங்க, மனோ கணேசன், சிறிதுங்க ஜயசூரிய, விக்கிரமபாகு கருணாரத்ன, சரத் மனமேந்திர, ஹேமகுமார நாணயக்கார, அருணா சொய்சா, சிறிமா சிறி பெரேரா, அசாத் சாலி மற்றும் சட்டத்தரணி சுதர்சன குணவர்த்தன ஆகியோர் ஒரு பொதுவான உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளார்கள்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்த உடன்படிக்கையில் கையெழுத்ததிடும் என எதிர்பார்க்கப்பட்டாலும், கூட்டமைப்பு தலைவர் நாட்டில் இல்லாத காரணத்தால், இது சம்பந்தமாக கட்சியின் அதிகாரப்பூர்வ முடிவுடன் பிறிதொரு தினத்தில் தமது கட்சி கையெழுத்திடும் என கூட்டமைப்பு எம்பி சுமந்திரன், உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

இன்றைய நவ காலனித்துவ மூலவள கொள்ளையில் சீன, ரஸ்சியா ஓரணியிலும் அமெரிக்கா தலைமையில் ஜரோப்பா, இந்தியா, யப்பான் இன்னொரு அணியிலும் நின்று உலகை பங்கு போட்டுக் கொண்டிருக்கின்றனர். இதன் ஓரங்கமாகவே இரு அணிகளும் தென்கிழக்காசியாவில் தமது பொருளாதார நலன்களிற்காக மட்டுமே ஒன்றிணைந்து புலிகளையும் அப்பாவி மக்களையும் கொன்ற அழித்தனர்.

அமெரிக்காவையும் மீறி, சீனா இலங்கையில் தனது பிடியை பொருளாதார ரீதியாகவும், மகிந்தா குடும்பத்துடனும் பலப்படுத்திக் கொண்டதனால் சினம் கொண்டுள்ள அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஒருபுறம் போர்க்குற்றம், மனித உரிமை மீறல் என ஜ.நா மூலம் நெருக்குதல் கொடுப்பதுடன் மறுபுறத்தில் இலங்கையில் தனக்கு சார்பான ஆளும் வர்க்கத்தினை ஒன்று திரட்டி மகிந்தாவின் அரசை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் முயற்சியே இந்த ரணில் தலைமையிலான கூட்டு ஜக்கிய முன்னணி.

மகிந்தா அரசு இந்த நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்க்காக அமெரிக்கா பக்கம் சார்ந்து  போகுமேயானால், உடனேயே இந்த போர்க்குற்றம், மனித உரிமை மீறல் என எழும்பும் ஜ.நா மற்றும் ஜரோப்பிய யூனியன்களின் குரல்கள் காணாமல் போய்விடும்.

இந்த நாட்டினை சிறிலங்கா சுதந்திரக்கட்சியும், யுஎன்பி கட்சியும் ஏகாதிபத்தியங்களை சார்ந்து இனவாத்தினையும், மதவாதத்தினையும் தூண்டி பாட்டாளி மக்களை பிரித்து வைத்துக் கொண்டு, மாறி மாறி ஆட்சியைக் கைப்பற்றி எமது தேசத்தினை கொள்ளையிடுட்டது தான் வரலாறு.

மக்கள் விரோத அந்நிய நலன்களை உயர்த்திப் பிடிக்கின்ற இந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் என்றுமே பரந்து பட்ட மக்களை அணிதிரட்டி, மக்களின் நலன்களிற்க்காக போராடியதாக வலராறு கிடையாது. இவர்கள் செய்வது, செய்தது எல்லாமே கனவான் அரசியல். பத்திரிக்கையாளர்களை கூட்டி வைத்து அறிக்கை விடுவதும், ஊர்வலங்களில் முன்னுக்கு நின்று புகைப்படமெடுத்து, அதனை பிரசுரித்து மக்களிற்கு படம் காட்டியதும் தான் மிச்சம். மக்களின் பிரச்சனைகள் குறித்து மக்களிடம் போனதோ அன்றி அவர்களை அணிதிரட்டி போராடினதோ கிடையாது. மக்களை பார்வையாளராக வைத்திருந்து, தமது எஜமானர்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பார்கள் என போலி நம்பிக்கைகளை விதைப்பது தான் இவர்களின் பிரதான வேலையே!

இந்த கூட்டணி மக்கள் நலன் சார்ந்து அல்ல. இது மக்களை மேலும் அந்நிய பிடிக்குள் தள்ளி இறுக்கும் அமைப்பே. ஆதலால் இவர்களை ஒதுக்கி வைத்து, மக்கள் தமக்கான சரியான அரசியல் பாதையினை தேர்ந்தெடுத்து அதனை பலப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.