Tue04232024

Last updateSun, 19 Apr 2020 8am

நிறுவனமயப்பட்ட இனவாதம்!

இது ஒரு புதிய ஆரம்பம், புதிய முறை, புதிய வழிதேடி, புதிய சந்தர்ப்பங்களை தேடி, புதிய இலக்கைத் தேடி ஆரம்பமாகின்றது. நாம் செல்லவேண்டிய இலக்கு வெகுதூரத்தில் உள்ளது. இன்று சமவுரிமை இயக்கத்தினரால் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் போராட்டங்களில் பங்கு பற்றியவர்களின் தொகையல்ல, கையெழுத்திட்டவர்களின் எண்ணிக்கையல்ல, கையெழுத்திட்டவர்களின் வயதல்ல முக்கியம். இந்த அடையாளப் போராட்டம் புதிய பாதைக்கான வழிகோளாக மாற்றப்பட வேண்டும். சமூகம் அடக்குமுறைக்குள் எந்தக் காலத்திலும் வாழ்ந்து விடப்போவதில்லை. எல்லாச் சமூகங்களின் எழுச்சி வீழ்ச்சியடைந்த பின்னர் மீளவும் எழுந்து வந்துள்ளது.

அச்சுறுத்தல்களும், அடக்குமுறையும், காணாமலாக்கல்களும் எழுச்சியை தடைசெய்து விடாது. இன்று தெற்கில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் நாட்டின் அனைத்து பாகங்களுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும்.

தெற்கில் இருந்து அடையாளப் போராட்டத்தை நடத்தச் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர்களின் வாகனம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாது தடவையாக கழிவு எண்ணை வீசப்பட்டுள்ளது.

சமவுரிமை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை பொலிஸ் முறைப்பாடு செய்ய சென்ற போது அந்த உறுப்பினர்கள் அவமரியாதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். இவர்களின் முறைப்பாடுளை முதலாளித்துவ ஜனநாயக மரபுக்கமைய இனவெறிதாண்டவமாடும் பொலிஸ் படையினரால் நடந்து கொள்ள முடியவில்லை.

தாக்குதலை முறைப்பாடு செய்யச் சென்றவர்கள் தமது அடையாளத்தை இலங்கையர் என பதியும்படி கேட்டுக் கொண்டுள்ளார்கள். ஆனால் முறைப்பாட்டினை செய்பவரின் இனஅடையாளமாக “சிங்கள-பௌத்த” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை ஆட்சேபம் தெரித்த போது பொலிஸ் உத்தியோகஸ்தர் தூசன வார்த்தைகளால் தாக்கியும், அச்சுறுத்தியும் உள்ளார். “சிங்கள-பௌத்த” என குறிப்பிடுவதை மறுத்தால் அடையாளத்தை உறுதி செய்ய முடியாதவர் என்ற அடிப்படையில் கைது செய்ய நேரிடுமெனவும் பொலிஸ் அதிகாரி கடுமையாக எச்சரித்துள்ளார்.

இங்கு கவனிக்க வேண்டியது என்னவெனில் சிங்களம் தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் அதிகார வர்க்கத்தின் ஊடாக பாகுபாட்டை விதைக்கின்றதை காணமுடிகின்றது. அதிகாரத்தில் உள்ளவர்கள் இனவாதச் சிந்தனை தொடர்ச்சியாக பாதுகாப்பதில் கவனம் செலுத்துகின்றார்கள்.

யுத்தத்தின் வெற்றியினால் பெற்ற பெருமிதம் இனவாதத்தினை வளர்ப்பதற்கும், ஆட்சிமுறையை காப்பாற்றுவதற்கும், தேர்தல் ஊடாக பதவியைப் பெறுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. இனவாதத்தினை தொடர்ச்சியாக விதைப்பதன் ஊடாக உழைக்கும் மக்களின் ஒற்றுமையை சிதறடிக்க முடியும்.

நிர்வாகத்தில் இனவாதம் மாற்றப்பட வேண்டிய ஒன்று. அத்துடன் நிர்வாகத்தில் இனவாதம் நிறைந்துள்ளது ஆச்சரியப்படத்தக்கதோ அல்லது எதிர்பாக்காததோ அல்ல. இனப்பெருமிதத்தின் வெளிப்பாடுகளை நாம் தெருக்களில் வெகு இலகுவாக கண்டு கொள்ள முடியும்.

தெருவில் செல்வோரை விளித்து அழைக்கின்ற முறையும், தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்காக குரல் எழுப்புவர்கள் மீதான அடக்குமுறைகள், கெடுபிடிகள், தாக்குதல்கள், மிரட்டல்களை நாம் அன்றாடம் காண்கின்றோம். துப்பாக்கி முனையில் மக்களை பிடித்து வந்து சுதந்திரதின கோடி ஏற்றுதல் என இப்படி பல தொடர்கின்றன. அதாவது இருக்கின்ற சமூக அமைப்பில் இருந்து பெறப்பட்ட அரைநிலபிரபுத்துவச் சிந்தனையின் தொடர்ச்சியில் உள்ள காண்டுமிராண்டித் தனங்களும், இனப்பெருமிதமும் ஒருங்கே இணைகின்ற போது சமூகத்திற்கான பாதிப்பு அதிகம். இனங்களுக்கிடையேயான ஒற்றுமையை குலைக்கும் வேலையை நிர்வாக கட்டமைப்பில் ஏற்படுத்துகின்றது. இதன் ஊடாக தொடர்ச்சியான இனபேதங்களை நிலைநிறுத்திக் கொள்ளும்.

நாம் அனைத்துவகை இனவாதத்திற்கு எதிராகவும் போராட வேண்டிய வரலாற்றுக் கடமையை சுமந்து கொண்டிருக்கின்றோம். தமிழ் மக்களும் இந்தச் சமூக அமைப்பில் இருந்து பெற்றுக் கொண்ட பிற்போக்கான கருத்துக்களை சுமந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அன்றாடவாழ்வியலில் அவை வெவ்வேறு பரிமாணங்களில் வெளிப்படுகின்றது. தமிழ் மக்களிடத்தில் உள்ள பிற்போக்குத் தனத்திற்கு எதிராக போராடுவதும் முக்கியம் தான்.

இலங்கை உழைக்கும் வர்க்கத்தின் வர்க்க எதிரிகளாக உள்ளவர்களை எதிர்க்க வேண்டியிருக்கின்றது. இன்று வர்க்க எதிரிகள் ஒருவருக்கு ஒருவர் தமக்குதாமே முண்டு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இலங்கையின் உள்ள ஒடுக்கப்படுபவர்களுக்கு ஆதரவாக உள்ளவர்கள் ஒடுக்கப்படும் மக்களே. ஒடுக்கப்படும் மக்கள் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைத்து அனைத்து அடக்குமுறைக்கு எதிராக செயற்படுவதே இன்றைய காலத்தின் தேவையாகும்.