Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தம் இருப்பிற்காக போராடும் மேட்டுக்குடி தமிழ் தேசிய மையவாதிகள்!!

சமூகத்தளத்திற்கு பிரச்சனையை கொண்டு செல்லும் வேலையை செய்வதற்கு பற்பல முறைமைகளை சமூக மாற்றத்தை விரும்புபவர்கள் மேற்கொள்கின்றனர். சமூகத்தளத்திற்கு பிரச்சனைகளை கொண்டு செல்வதும், சமூக மாற்றத்தை கோரும் நிலைப்பாடுகளை சமூகத்தில் ஏற்றுக் கொள்ளவைப்பதும் பெரும் சவாலான பிரச்சனையாகும். சமூகத்தளத்திற்கு கொண்டு செல்கின்ற போது ஏற்படும் சிக்கல்களை ஆராயந்து புதிய புதிய வடிவங்களில் மறுசீரமைத்து சமூகத்திற்கு கொண்டு செல்லும் முயற்சிகளை இடையறாது சமூக மாற்றத்தை விருப்பும் சக்திகள் மேற்கொள்வார்கள். சமூகத்தளத்திற்கு பிரச்சனையை கொண்டு செல்வதற்கு ஒரு திட்டமிட்ட முறைதான் இருக்கின்றது என்றோ அல்லது இவ்வாறு தான் செய்ய வேண்டும் என்றோ எந்தவொரு நியதியும் இல்லை. அது நாட்டுக் நாடு சூழலுக்கு ஏற்ப மாறுபடுகின்றது. சமூகத்தளத்திற்கு பிரச்சனையை கொண்டு செல்வதும் மக்களை புரிந்து கொள்ளவைப்பதும் சவாலுக்கு உரியதாகும்.

ஆனால் எங்களுடைய மெத்தப்படித்த ஆய்வாளர்கள் ஏதோ சமூகத்தளத்திற்கு கொண்டு செல்வது அற்ப விடயம் போல புரிந்து கொள்கின்றார்கள். இவர்கள் எழுத்துக்கும் நடைமுறைக்கும் உள்ள இடைவெளியைப் புரிந்து கொள்வதற்கோ பொறுப்புடன் செயற்படுவதற்கோ தயாராக இல்லை. சமூகத்தளத்திற்கு செல்லும் முறைமையை சரியாக புரிந்து கொள்ளாது அவதூறு கற்பிப்பவர்களும் இந்தச் சமூக அமைப்பை பாதுகாப்பவர்களாக உள்ளார்கள்.

சமூகத்தளத்திற்கு எடுத்துச் செல்லல்:

சமூகத்தளத்திற்கு பிரச்சனையை எடுத்துச் செல்லும் முறைகளையும், போராட்டவடிவத்தையும் இலங்கையில் 1966களில் இடம்பெற்ற சாதியப் போராட்டத்தில் இருந்து எடுத்துக் கொள்ள முடியும். அன்றையப் போராட்ட அணுகுமுறை வர்க்கம் என்ற ஒரு வரையறையின் கீழ் சமூகத்தின் அடக்கப்பட்டவர்களின் ஜனநாயக உரிமைக்கான போராட்டத்தினை வழிநடத்திச் சென்றனர். அந்தப் போராட்டத்திற்கு உழைக்கும் மக்களின் தயவையும், தமிழ், தென்னிலங்கை முற்போக்கு சக்திகளின் ஆதரவுடன் உருவாக்கிக் கொண்டனர்.

சமூகத்தளத்திற்கு சாதியத்திற்கு எதிரான கருத்தை கொண்டு செல்வது அவ்வளவு இலவாக இருக்கவில்லை. பழைமைவாத அமைப்பு, அதன் பிரதிநிதிகள், அரச அதிகாரம், ஊடகத்துறை இவை எதுவுமே அன்று சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவோ, எதிர்க்கருத்தை சமூத்தளத்திற்கு கொண்டு செல்ல துணை புரியவில்லை. அடக்கியொடுக்கப்பட்ட மக்களையும், முற்போக்கு சக்திகளையும் கம்யூனிஸ்டுக்கள் இணைத்து நடைமுறைரீதியாக சமூகத்தளத்திற்கு கொண்டு சென்றார்கள். ஆனால் சமூகத் தளத்திற்கு கொண்டு செல்கையில் அரைநிலபிரபுத்துவச் சிந்தனை கொண்டவர்களின் எதிர்தாக்குதல் மிகக் கொடுமையாக இருந்தது. அரைநிலபிரபுத்துவச் சிந்தனைவாதிகள் பின்வாங்கிக் கொண்டார்களேயன்றி தோற்கடிக்கப்படவில்லை. உழைக்கும் மக்களின் அதிகாரத்திற்கான வர்க்கப்போராட்டம் தொடராது போயிற்று.

இவ்வாறான அனுபவங்களை உள்ளடக்கியதாக இன்றைய சமவுரிமைக்கான இயக்கத்தின் வேலைமுறை பார்க்கப்பட வேண்டும். சமவுரிமைக்கான வேலைத் திட்டமானது ஜனநாயகக் கோரிக்கையின் அவசியத்தை சமூகத் தளத்திற்கு கொண்டு செல்வதாகும்.

சமவுரிமை அமைப்பிற்கான வேலைத் திட்டத்திற்கு ஒரு அரசியல் இருக்கின்றது. அது ஒரு முன்னணிக்கு கீழான ஒரு வெகுஜனத் தன்மை கொண்ட ஒரு அரசியலை சமூகத் தளத்திற்கு கொண்டு செல்கின்றது.

இலங்கை மக்ககளின் தற்காலப் பிரச்சனை என்ன? இலங்கை மக்களின் பிரச்சனைகளில் இருந்து போராட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

• வர்க்கப் பிரச்சனை இருக்கின்ற வேளையில் தேசிய இனத்தின் உரிமையை, தமிழ் தேசிய இருப்பை உறுதி செய்வது என்பது தமிழ் முதலாளிய எல்லையை- அவர்கள் தமிழ் மக்களை சுரண்டுவதற்கான சுதந்திரத்தை கொடுத்தல் ஆகும். ஆனால் பேரினவாதமோ சுயமாக வந்து தன் சகவர்க்க முதலாளிகளிடம் சந்தையை ஒப்படைக்கத் தயாரில்லை.

இங்கு பேரினவாதம் தன்னை தகவமைத்துக் கொள்ள இனவாதத்தினை விதைத்து, தனது பாசீச முகத்தை மூடிமறைத்து பெருந்தேசியவாதம் தன்அரசியல் இருப்பிற்கான இனவாத அரசியலை தொடர்ச்சியாக பேணிவருகின்றது. தமிழ் மக்கள் மீது இராணுவ ஆதிக்கத்தையும், உள்ளுர் அதிகாரத்தினையும் இல்லாதொழித்து தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

ஆகவே இதற்கு மாற்றீடாக தமிழ் மக்கள் மற்றும் தேசிய இனங்களின் இருப்பை உறுதிசெய்வதும், அவர்களின் ஜனநாயக உரிமைக்காக போராடுவதும் அவசியமாகும்.

எங்கிருந்து தொடர்வது!!

சமூகத்திற்கு பிரச்சனைகளை கொண்டு செல்ல வேண்டும். சமூகத்தளத்திற்கு கொண்டு செல்வது என்றால் ஒரு கட்டுரை, பிரசுத்தின் மூலம் நியாயங்களை சமூத்திற்கு கொண்டு செல்ல முடியாது.

சமூகத்தில் சமச்சீரான அறிவையோ, ஒரு உலகக் கண்ணோட்டத்தையோ கொண்டவர்களாக இருப்பதில்லை. இந்தச சமூக அமைப்பின் அனைத்து பிற்போக்கு கருத்தியல் கண்ணோட்டத்தை கொண்டதாகத்தான் இருக்கின்றது. இவ்வாறான வேளையில் சமூகத் தளத்திற்கு நடைமுறை ரீதியாக கொண்டு செல்லும் வேலைமுறைகளையிட்டு விவாதிக்கப்பட வேண்டும். புதிய வழிமுறைகளை கண்டடைய வேண்டும்.

இவ்வகையேதான் சமவுரிமைக்கான வேலைத்திட்டத்தில் செயற்படும் முறைமையை வளர்ப்பது சமூக மாற்றத்திற்கான முதற்கட்டமாகும். முன்னர் கூறியபோல இது ஒன்றும் புதியவை அல்ல. முன்னர் பரிசோதிக்கப்பட்டவைதான் மீளவும் இப்போ பரிசோதிக்கப்படுகின்றது. ஆனால் வெகுஜன போராட்டத்தால் மக்களே போராட்ட அணியாக மாறி விடுவதை தடுப்பதில் கணிசமான வியூகத்தைச் செய்கின்றனர் என்பது மிகவும் கற்பனையானது ஒன்றாகும்.

இவ்வாறு எழுதும் போக்கானது யுத்தத்தின் பின்னான இலங்கைச் சமூகத்தினை ஒழுங்கான முறையில் ஆய்வு செய்யாத நிலைதான் “மேட்டுக்குடி பிரமுகர்களின்” கட்டுப்பெட்டிச் சிந்தனையின் வெளிப்பாடாகும்.

தமிழ் பிரதேசத்தில் அரசியல் வங்குரோத்து:

புலிகளின் பின்னான காலத்தில் வெற்றிப் பெருமிதம் கொண்ட இராணுவ பிரசன்னத்தை ஆழப்படுத்தி, இராணுவம் சார்ந்த உற்பத்திகளை உருவாக்கிக் கொண்டு தன்னை நிலை நிறுத்தியுள்ளது. இதற்கு எதிரான மக்களின் வெகுஜனப் போராட்டத்தினை தோற்றுவிப்பதற்கான எவ்வித முயற்சிகளை தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் எந்த தமிழ் அமைப்பும் ஆக்கபூர்வமாக செயற்படவில்லை.

ஆனால் சிறிதளவேனும் அடையாள எதிர்ப்பை தெற்கில் இருந்து வடக்கு சென்று போராடும் மக்கள் போராட்ட அமைப்பு, சமவுரிமை இயக்கம், அணுவுலை எதிர்ப்பியக்கத்தின் அடையாளப் போராட்டத்தினை கணிப்பதில் இந்த “மேட்டுக்குடி” புத்திஜீவிகளுக்கு உண்மையாகவே வகுப்பெடுக்க வேண்டியுள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கையை வலிறுத்தி செய்யப்பட வேண்டிய வேலையை சிறிய அமைப்பு அதுவும், சிறுபிள்ளையாக இருக்கும் அமைப்பிடம் தேடியோடுவதும் எதிர்பார்ப்பதும் யதார்த்தத்தை மீறிய ஒன்றாகும்.

ஒரு அமைப்பு முன்னணியை விட குறைந்தபட்ச வேலையை முன்வைத்து நடைமுறைரீதியாக சமூகத் தளத்திற்கு செல்கின்றார்கள். இந்த நடைமுறை ரீதியாக சமூகதளத்திற்கு கொண்டு செல்கின்றார்கள். இவ்வாறு நடைமுறை ஊடாக சமூகத்தளத்தை மாத்திரம் அல்ல. தனது உறுப்பினர்களையும் அரசியல் ரீதியாக, கருத்தியல் ரீதியாக வளர்த்துக் கொண்டு மாற்றத்தை நோக்கி முன்னேறுகின்றது. இதுவே இன்றைய காலத்தின் தேவையாக இருக்கின்றது.

ஆனால் இன்று சமூகமாற்றத்திற்கு மக்களை அணிதிரட்டுவது, மக்களை அணிதிரட்டுவது, அரசியல் கோரிக்கை என்ற உயர்ந்த தளத்திற்கு வளத்தெடுத்து செல்வது முக்கிய வேலையாகும்.

தன்னெழுச்சியான போராட்டங்களையும், தன்னியல்பான போராட்டங்களையும் வளர்த்தெடுக்க முடியாத நிலையில் தான் தமிழ் அமைப்புகள் இருக்கின்றது. இவ்வுண்மையை மறைக்கவே சமவுரிமை இயக்கத்தின் மீதான வெறுப்பாக கொள்ள முடியும். போராட்டதினை தமிழ் அமைப்புக்களோ அல்லது புலம்பெயர் “மேட்டுக்குடியோ” தளத்திலும் சரி புலத்திலும் சரி முள்ளிவாய்க்காலுக்கு பின்னான காலத்தில் அரசியல் ரீதியான காத்திரமான எந்த போராட்டங்களும் வடக்கு – கிழக்கில் உருவாகவில்லை.

இன்று இவர்களின் ஒரு பகுதியினர் இந்தியா- மேற்குலக அரசுகளில் நம்பிக்கை கொண்டு செயற்படுகின்றனர். புலம்பெயர் தேசங்களில் இருந்து கொண்டு போராட்டங்களை அன்னிய சக்திகளின் நலனுக்கு ஏற்ப போராட்டத்தை நகர்த்துகின்றார்கள்.

மக்களுக்கான உயர்ந்த கோரிக்கைக்கு வளர்தெடுப்பது:

உயர்ந்த கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான போராட்டப்பாதையை வளர்த்தெடுப்பதற்கு மக்களை அணுகுவது அவசியமாகும். “மேட்டுக்குடி” ஆய்வாளர்களைப் பொறுத்தவரை மக்களை அணுவது எவ்வாறு என்ற பிரச்சனைக்கு முறைமையை முன்வைத்துக் கொள்வதில்லை. ஆனால் நடைமுறையில் செயற்படுபவர்களுக்கு முறைமை பற்றி ஆய்வதும் அக்கறையானதும், அவசியமானதாகும். நடைமுறையில் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு மிகப்பெரிய சவாலாகும். ஆனால் இருப்பியலின் பதட்டமும் -மனவுழைச்சலும் உள்ளவர்களுக்கு நடைமுறை பற்றிய பிரச்சனை அக்கறையில்லை. இன்று இனங்களுக்கு இடையிலான இணைப்பும், வெகுஜனப் போராட்டத்தை எதிர்ப்பவர்கள் 1966களில் இருந்திருந்தால் அன்னு தமிழ்தேசியவாதிகளான அமீர், மாவை, சுந்தரலிங்கம் போன்றவர்களுடன் கைகோர்த்திருப்பார்கள்.

இது ஒரு புறமிருக்க சமூகம் எவ்வாறு இருக்கின்றது என்பதையும், சிந்தனையின் தோற்றுவாய் பற்றிய புரிதல் அற்றவர்களாக இருப்பதையும் அவதானிக்க வேண்டும். சமூக தளத்தில் கருத்துக்கள் சமூக மாற்றத்தை நோக்கியும், சமூக மாற்றத்தை எதிர்ப்பவர்களுக்கும் உள்ள போராட்டம் என்பதுதான் நியதி.

சமூக மாற்றத்தினை விரும்புவதாக பாசாங்கு செய்யும் எழுத்தாளர்களும், புத்திஜீவிகளும் மார்க்சிய அணுமுறையை புரிந்து கொள்ளவில்லை.

மார்க்சீய அணுகுமுறை குறிப்பிட்ட நிலைகளில் இருந்து பொதுத்தளத்தை நோக்கி அணுகி ஆய்வும் செய்யும் முறைமை அல்ல. ஆனால் பொதுத்தளத்தில் இருந்து குறிப்பிட்ட தளத்தையோ பிரச்சனையோ அணுகுவது தான் சரியான மார்க்சீய அணுகுமுறை. இந்த அணுகுமுறையை மார்க்ஸ் பொருளாதார வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுலக வாழ்க்கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கின்றது.

மனிதர்களின் உணர்வு அவர்களுடைய வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கின்றது.

எமது உணர்வுகள் சிந்தனையை தீர்மானிப்பதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளாதார இன்றைய ஆய்வாளர்கள் தமது அகநிலைவாதத்தினை முன்னிறுத்தி இதுவேதான் சமூக ஆய்வு என்று முன்வைக்கின்றார்கள்.

மார்க்சீயத்தினை கற்றுக் கொண்ட முறையில் ஏற்பட்ட பிரச்சனைகளும் இந்த சமூக அமைப்பின் சிந்தனையும் காரணமாகின்றது. மண்ணின் வாசனை ஒன்றிருக்கின்றது, அது மற்றவர்கள் தம்மை விட சரியாகக் கதைக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளாது. பாராட்டாது, அது இட்டுக்கட்டி தான் சொல்வதுதான் சரி என்று வாதிடும். மற்றவர்களை ஆண்டபரம்பரை தூய்மைவாதம் பேசி கொல்லும், தற்பெருமை பேசும். இதற்குப் பின்னால் மக்கள் நலனாவது புடலங்காய் ஆவது.

பாவம் (existential anxiety) இருப்பிற்காக போராடும் மேட்டுக்குடி புத்திஜீவிகள்!!