Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

ஆளும் தரப்புக் கட்சிகளுக்கு ஆதரவாகச் செயற்படும் சிலரால் கிளிநொச்சியில் காணி அபகரிப்பு நடவடிக்கை அதிகரிப்பு!

கிளிநொச்சி நகரை அண்டிய பகுதிகளில் உள்ள அரச மற்றும் தனியார் காணிகள சட்ட விரோதமான முறையில் அபகரிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி நகரை அண்டிய பகுதிகளில் உள்ள பல தனியார் காணிகளின் உரிமையாளர்கள் வெளிநாடுகளில் உள்ளனர்.

அவர்களது உறவினர்களின் பராமரிப்பில் உள்ள காணிகளே அரச ஆளும் தரப்புக் கட்சிகளுக்கு ஆதரவாகச் செயற்படும் சிலரால் அபகரிக்கப்படும் சம்பவங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. காணிகளைப் பராமரித்து வரும் உறவினர்கள் அச்சுறுத்தப்பட்டும் வருகின்றனர்.

அண்மையில் கிளிநொச்சி தொண்டமான் நகர் கிராமத்திலும் ஜெயந்திநகர் கிராமத்திலும் இவ்வாறான இரு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதனை விட கிளிநொச்சி இரணைமடுக் குளத்தில் இருந்து உருத்திரபுரம் வரை நீரைக் கொண்டு செல்லும் பிரதான நீர்ப்பாசன வாய்க்காலின் இரு மருங்கிலும் உள்ள நீர்ப்பாசன திணைக்களத்துக்குச் சொந்தமான காணிகள் அரசியல் கட்சி சார்ந்தவர்களால் அபகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தற்போது வணிக நிலையங்களும் இயங்கி வருகின்றன.

இவ்வாறு இரத்தினபுரம் கழிவு வாய்க்காலுக்கு ஒதுக்கப்பட்ட நிலமும் அபகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காணிகளை அபகரிக்கும் சம்பவங்கள் கிளிநொச்சியில் அதிகரித்துக் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.