Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

புதிய எதிரி வந்துள்ளான்! அவன் எதிரில் நாம்...?

அந்தக்கால மீட்பாளர்:

யுத்தம் நடந்த காலத்தில் இந்த அரசாங்கமும், இதற்கு முன்பிருந்த அரசாங்கமும் அனைத்து அழிவுகளுக்கும் காரணமென்று யுத்தத்தைக் காட்டின. யுத்தம் நடப்பதனால் பொருட்களின் விலையைக் குறைக்க முடியாது, யுத்தம் நடப்பதால் மக்களுக்கு ஜனநாயகத்தைக் கொடுக்க முடியாது, சமூக நலன்புரிகளைக் கொடுக்க முடியாது யுத்தம் நடப்பதால். இவர்கள் அப்படித்தான் கூறினார்கள். இப்போது யுத்தம் முடிந்து விட்டதால், தமது இயலாமைக்கும் மக்களை மிதிப்பதற்கும் காரணமாக யுத்தத்தைக் காட்ட முடியாது. எல்.டீ.டீ.ஈ.இன் மீளெழுச்சி குறித்து செய்திகளைத் தயாரிக்க முயற்சித்தாலும், அது வெற்றி பெறவில்லை. ஆதலால் அரசாங்கம் இப்போது புதிய எதிரியைத் தேடிக்கொண்டுள்ளது. அந்த எதிரிதான் முஸ்லிம் மக்கள்! இப்போது அரசாங்கமும், எதிர்க்கட்சியில் இருக்கும் முதலாளித்துவக் கட்சியும், அவர்களின் அனுக்கிரகத்தைப் பெற்றுள்ள இனவாத அமைப்பும் சேர்ந்து முஸ்லிம் விரோதத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றன.

முஸ்லிம் எதிர்ப்பு:

முஸ்லிம் விரோதத்தைத் தயாரிப்பதற்காக இவர்கள் பல்வேறு விடயங்களை முன்வைக்கிறார்கள். ஹலால் சான்றிதழுக்காக வழங்கப்படும் சான்றிதழ் குறித்து, முஸ்லிம் மக்கள் தொகை அதிகரிப்புக் குறித்து, பரீட்சைகளின் போது முஸ்லிம் மாணவர்களுக்கு விஷேட வரப்பிரசாதங்கள் கிடைப்பது குறித்து….. இவ்வாறு பல விடயங்கள் சம்பந்தமாக பல்வேறு கருத்துக்கள் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்தக் கருத்துக்களை பரப்புவதற்காக சில வியாபாரிகள் நன்றாகவே செலவு செய்கின்றனர். வர்த்தகச் சந்தையில் இருக்கும் போட்டியை ஒட்டுமொத்த சமூகத்தினதும் மோதலாக ஆக்குவதற்காகத்தான் அவர்கள் இவ்வாறெல்லாம் செய்கிறார்கள். அதற்கிடையில் இந்தச் செயற்பாடுகள் வன்முறை வடிவத்தில் வருகிறன.

தம்புள்ள முஸ்லிம் பள்ளிவாசல் எதிர்ப்பிலிருந்து இது ஆரம்பமாகியது. பின்னர் குருநாகல், அனுராதபுரம், மற்றும் கொழும்பு மாவட்டத்தில் சில முஸ்லிம் பள்ளிவாசல்களும் தாக்கப்பட்டன. சமீபத்தில் எம்பிலிபிட்டிய நகரில் வியாபாரம் செய்து வந்த முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த வன்முறைகள் சம்பந்தமாக எவ்வித நீதி விசாரணையும் நடத்தப்படாமையும், இந்த குழுக்களுக்கு அரச அனுசரணை கிடைத்தமையையும் பார்க்கும்போது இந்த முஸ்லிம் விரோதத்தின் பின்னணியில் இருப்பது யாரென்பது தெரிகிறது.

ஏன் இது?:

எமது நாட்டைப் போன்ற பின்தங்கிய நாடுகளின் ஆட்சியாளர்களால் மக்களுக்கு உரிமைகளை வழங்க முடியாது. நவ தாராளமய முதலாளித்துவத்தின் கீழ் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட நிலையிலுள்ளவர்களின் உரிமைகள் பறித்துக் கொள்ளப்படுகின்றன. இவர்களால் சமூகத்திற்குப் பொருளாதார வளர்ச்சியைக் கொடுக்க முடியாது. வேண்டுமானால் அடக்குமுறையை மாத்திரம் கொடுக்க முடியும். இந்த சமூக முறையால் பெரும்பாலான மக்களுக்கு வாழ்க்கையைப் பெற்றுத்தர முடியாது. எமது கலை, விளையாட்டு, மனித உறவுகள், கூட்டுச் செயற்பாடுகள் போன்றவற்றிற்கு நேரம் மீதப்படுவதில்லை. அதாவது, வாழ்வது என்ற பெயரில் நாங்கள் வாழ்க்கையை இழந்துள்ளோம்.

சமூகத்திலுள்ள இந்த அழுத்தம் குற்றச் செயல்கள், முறைகேடுகள் போன்ற பல்வேறு வடிவங்களில் வெடிக்கின்றன. ஆகவே, இவர்களால் சமூகத்திற்கு நாகரிகத்தைக் கொடுக்க முடியாது. மிலேச்சத்தனத்தையம், ஒழுக்கக்கேட்டையும் மட்டுமே கொடுக்க முடியும். கோஷங்கள் இல்லாமல், சொல்வதற்கு ஒன்றுமில்லாமல், சமூகத்திற்கு எதையுமே கொடுக்க முடியாதிருக்கும் ஆட்சியாளர்கள் இறுதியாக இனவாதத்திலும் மதவாதத்திலும் தொங்கிக் கொள்கிறார்கள்.

உண்மையான பிரச்சினைகள் மற்றும் பொய் பிரச்சினைகள்

இனவாதத்தின் ஊடாக உண்மையான பிரச்சினைகளை மூடிமறைத்து பொய்க் காரணங்கள் கூறப்படுகிறது. பொருட்களின் விலை ஏறுவதும், வாழ்வது கஷ்டமாக இருப்பதும் சிறு குழுவினரின் சுகபோகத்திற்காக பெரும்பாலானோரிடமிருந்து பறித்துக் கொள்வதனால் தான் என்பதை மறைப்பதற்காக நாட்டின் வருமானம் பிரிந்து செல்லும் அநீதியான முரண்பாட்டை மறைப்பதற்காக பொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதற்கு ஹலால் சான்றிதழால் தான் காரணம் என்று கூறப்படுகிறது. பிள்ளைகளை வாழவைப்பதற்கு, படிப்பிப்பதற்கு வருமானம் போதாமையால், விருப்பமில்லாமலும் கூட பிள்ளைகளின் எண்ணிக்கையை மடடுப்படுத்தும் உண்மையை மறைப்பதற்காக சிங்களவர்களை குறைக்கும் சூழ்ச்சியை பற்றி கூறுகிறார்கள். பொதுவாக கல்விச் செயற்பாடுகளில் உள்ள ஊழல், முறைகேடுகள், அரசியல் கையூடல்கள், பரீட்சை மோசடி போன்றவற்றை மறைத்து முஸ்லிம் மாணவர்களுக்கு வரப்பிரசாதங்கள் கொடுக்கப்படுகிறது எனப் பொய் சொல்கின்றார்கள். சமூகம் எதிர் கொண்டுள்ள பிரச்சினைளுக்குத் தம்மை நோக்கி விரல் நீட்டப்படுவதை தடுப்பதற்கு இப்போது, போலி எதிரியை தயாரிக்கிறார்கள். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் வரலாற்றுக் காலம் தொட்டு எதிரிகளல்ல. குரோத மனப்பான்மையை உண்டாக்கியவர்கள் அரசியல்வாதிகள், தமது அதிகாரத் திட்டத்திற்காக. இப்போதும் அதையே தான் செய்கிறார்கள்.

இது ஒரு பொறி

அரசியல்வாதிகளின் அதிகார விளையாட்டுக்காக, உண்மையான எதிரியை மறைப்பதற்கு போலிப் பூச்சாண்டியை நிர்மாணிப்பதற்காக சிங்கள, தமிழ் மக்கள் மத்தியில் குரோத மனப்பான்மையை வளர்த்ததன் எதிரொலி முப்பது வருட யத்தம். சிங்கள ஒடுக்கப்பட்ட குடும்பத்தின் படைவீரனிலிருந்து தமிழ் இளைஞர் வரை எல்லோரும் இதற்கு பலியானார்கள். இலட்சக் கணக்கானோர் மடிந்தார்கள். பெருமளவிலான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. அந்த அழிவின் சூடு தணிவதற்கு முன்பே இப்போது, முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் குரோதத்தை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சிக்கின்றன. முப்பது வருட யுத்தத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் தோற்றதன் பின்னர், அதில் வெற்றி பெற்றவர்களும் இருக்கிறார்கள். யுத்தத்தினால் சம்பாதித்துக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். யுத்தத்தை காட்டி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டவர்கள் யாரென்று உங்களுக்கு தெரியும். அவர்கள் முஸ்லிம் எதிர்ப்பின் மூலம் ஏதாவது பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றார்கள். ஆனால், அந்தச் செயற்பாட்டின்போது முழு சமுதாயமும் தோற்றுப் போகும். ஆட்சியாளர்களுக்கு இனவாதம் தமது இருப்புக் குறித்த பிரச்சினை. ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அது மனிதநேயம், மனிதநாகரிகம் மற்றும் எதிர்காலம் சம்பந்தமான பிரச்சினை.

இது ஒரு பொறி. இந்தப் பொறியில் சிக்காதிருப்போம்!

சிங்கள - தமிழ் - முஸ்லிம் ஒற்றுமையை அழிக்க இடம் கொடாதிருப்போம்!

நாட்டில் மீண்டுமொரு முறை இரத்தந தியை நிர்மாணிப்பதற்கு இடமளியாதிருப்போம்!

போலி எதிரிகளை உருவாக்கும் மாயாஜாலத்திலிருந்து விடுபட்டு உண்மையான எதிரியை அறிந்து கொள்வோம்!

சம உரிமை இயக்கத்தோடு தொடர்பு கொள்ள எம்மை அழையுங்கள்.

சம உரிமை இயக்கம்.

வாசித்துவிட்டு தயவு செய்து மற்றவருக்கு கொடுக்கவும்