Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை கோரி போராடும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்!!

 

தென்னிலங்கை பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த போராட்டங்களை முன்னெடுப்பதற்கான வேலைகள் நடைபெறும் இவ்வேளையில், தென்னிலங்கை மாணவர் தலைவர்கள் அரசபடைகள், மற்றும் புலனாய்வு பிரிவாலும், மஹிந்த அரசின்  பங்காளி கட்சிகளாலும் பலவகை அழுத்தங்களுக்கு உள்ளாக்கபடுகின்றனர்.

 அது மட்டுமன்றி அரசும், அதன் இனவாத ஆதரவாளர்களும் தென்னிலங்கைப்  பல்கலைக்கழகங்களில், சிங்கள மாணவர்கள், தமிழ் மாணவர்களுக்கு ஆதரவாக போராடும் சூழலை இல்லாதொழிக்க இனவாத பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர் என தமிழ் மாணவர்களுக்கு ஆதரவான  தென்னிலங்கை போராட்டத்  தலைமை தெரிவிக்கின்றது. சில அரசசார்பு ஊடகங்கள் மற்றும்  BBC போன்ற ஊடக நிறுவனங்களால், சில நாட்ட்களுக்கு முன் ஸ்ரீ-டெலோ அமைப்பின் அலுவலகத்தை எரிகுண்டினால்  தாக்கியதனால் தான், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர் என்ற தகவல் வெளியிடப்பட்டது. இந்த தகவலையே மேற்படி  மஹிந்த அரச ஆதரவாளர்கள் தமது இனவாத பிரசாரத்துக்கு பயன்படுத்துகின்றனர் என்று தெற்கில் இருந்து வரும் செய்திகள் தெரிவிகின்றன. இதன் அடிபடையில் கைது செய்யப்பட்ட  யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்  புலிகள் என்பதே இனவாத பிரசாரர்களின் கருத்தாகும்.

தற்போது புலம் பெயர் நாடுகளிலும், கைது செய்யப்பட்ட  யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை கோரி சில புலி முகவர் அமைப்புகளால்  போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தென்னிலங்கை மாணவ தலைவர்களை புலிகளின் சிங்கள புலி முகவர்களாக சித்தரிப்பதுடன், அரச சார்பு தமிழ் ஊடகங்களால் மறுபுறத்தில் இவர்களை புலிகள் என பரவலாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது.

தற்போது வந்துள்ள செய்திகளின் படி கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இன்று (03.12.2012) காலை 10 மணியளவில் ஆரம்பமான ஆர்ப்பாட்டம் தற்போதும் இடம்பெற்று வருகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் அமைதியான முறையில் இவ்ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அமைதியான முறையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ் மாணவர்களுக்கு நிகராக, சிங்கள மாணவர்களும் உணர்வு பூர்வமாக  பங்கு  கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.