Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

யாழ். மாணவர்கள் பயங்கரவாத புலனாய்வு பொலிசாரிடம்!

யாழ். பல்கலைக்கழகம்

யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த சில தினங்களாக நிலவும் பதற்றமான சூழ்நிலையின் பின்னணியில் நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அரச ஆதரவு அரசியல் கட்சியொன்றின்(ஸ்ரீடெலோ) அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டுத் தாக்குதல் தொடர்பாகவும் தடைசெய்யப்பட்டுள்ள அமைப்பான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகளை ஒட்டியமைக்காகவும் சந்தேகத்தின்பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை பேச்சாளர் பிபிசியிடம் கூறினார்.

இவர்கள் நால்வரும் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டு, டிஐடி என்று அழைக்கப்படுகின்ற பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்ததார்.

கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ஜனமேகன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த தர்ஷானந்த், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த சொலமன் மற்றும் மருத்துவபீடத்தைச் சேர்ந்த சுதர்சன் ஆகிய நான்கு மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

இந்த மாணவர்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இவர்களின் கைதுக்கு உண்மையான காரணம் என்ன என்பது தெரியாதிருப்பதாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அமிர்தலிங்கம் இராசகுமாரன் கூறினார்.

'அரசு வன்முறையை பிரயோகிக்கிறது'

மாணவர்கள் மீது பொலிசார் தடியடிப் பிரயோகம் நடத்தினர்.

மாணவர்கள் மீது பொலிசார் தடியடிப் பிரயோகம் நடத்தினர்.

கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை விடுதலை செய்வதற்காக பதில் துணைவேந்தர் பேராசிரியர் வேல்நம்பி, சிரேஸ்ட மாணவர் ஆலோசகர் பேராசிரியர் புஸ்பரட்னம் ஆகியோர் இரவு வரை காத்திருந்தும் அது வெற்றியளிக்கவில்லை.

இருப்பினும் அந்த மாணவர்களை விடுதலை செய்வதற்கான முயற்சிகளில் அவர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டிருப்பதாக இராசகுமாரன் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்கள் கல்விச் செயற்பாடுகள் சாராத நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் காரணமாகத்தான் இத்தகைய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது என்று முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனத்தை மறுத்துரைத்துள்ள யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் இராசகுமாரன், 'பல்கலைக்கழகம் என்பது வெறும் புத்தகப் பூச்சிகளை உருவாக்கும் ஓரிடமல்ல, அது நாளைய தலைவர்களையும் ஆய்வாளர்களையும் உருவாக்குகின்ற இடமாகும்' என்று குறிப்பிடுகின்றார்.

'சமூக பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதும், அவற்றை ஆய்வு செய்து அது தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்கள் வழிகாட்டவும் வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். இன்று நாட்டில் அமைச்சர்களாக இருப்பவர்கள் பலரும் இத்தகைய வழிநடத்தல் காரணமாகவே அரசியலில் இருக்கின்றார்கள்' என்றார் இராசகுமாரன்.

'எனினும், மாணவர்கள் வன்முறையில் ஈடுபடக் கூடாது. அதேவேளை, அமைதியான முறையில் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளை வன்முறையின் மூலம் அடக்க முற்படுவதும் நல்லதல்ல' என்றும் இராசகுமாரன் கூறியுள்ளார்.