Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

"இது எமது அரசியலை அறிவிக்கும் காலம்¨ ! தொண்டர் அமைப்பில் தஞ்சமடைவதல்ல.


நீண்ட கொடூரயுத்தமானது பல பேரழிவுகளை விளைவித்திருக்கிறது. குறிப்பாக மக்களின் பொருளாதார வாழ்வின் அடிப்படையைச் சிதைத்து விட்டுள்ளது. அதன் நெருக்கடியில், அச் சுமையில் வீழ்ந்து கிடக்கும் மக்களுக்கு நிவாரணப் பணியென்பது சற்று ஆறுதல் அளிக்கும் ஒரு விடயமாகும்.

இவற்றுக்கான நிவாரண வழங்கிகளாக புலம்பெயர்ந்தோர் மத்தியில் காளாண்கள் போல் பல தொண்டர் நிறுவனங்கள் தோன்றியுள்ளன. பல்வேறு வட்டங்களைச் சார்ந்த  தரப்பினர் இதன் ஏற்பாட்டாளர்களாக உள்ளனர். இவர்களில்  விசேடமாக குறிப்பிடப்பட வேண்டியவர்களாக காணப்படுபவர்கள். எவரெனில் தம்மை மாக்சியர்களாகவும், ஜனநாயக சக்திகளாகவும், முற்போக்காளர்களாகவும், அரசியல் அடையாளம் கொண்டவர்களாகவும், பெருமை பேசுபவர்களேயாகும்.

முதலாளித்துவ ஆட்சியாளர்கள் தன்னார்வத்  தொண்டர் நிறுவனங்களை தமது ஆட்சியின் பொருளாதார நெருக்கடிகளைத் தணித்து வைப்பதற்காக கையால்வதும். அத்துடன் தாமும் பல்வேறு பெயர்களில்  இது போன்ற நிறுவனங்களை உருவாக்கிக்கொண்டும் மொத்தத்தில் எல்லாவற்றையும் ஒன்று திரள ஓடவிட்டுச் சிறப்பாகவே  பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறான உதவிப்பணி நிறுவனங்களுக்கு ஆரம்ப அடிக்கல்லை நட்டு வைத்தது மத நிறுவனங்களேயாகும். பிரதானமாக மக்களது  வரிப்பணம்‚ அத்தோடு மக்களது இறை நம்பிக்கை, அடிப்படையில் நிகழ்தப்படும் பூஜை, காணிக்கை, போன்ற சடங்கு முறைகளால் பணத்தை கறந்து கொள்ளும்  இவர்கள், வரலாறு  முழுவதும் சொத்தும் வசதியும் படைத்த ஆட்சியாளர்களோடு கூடிக்கூலாவி பொருளாதார சலுகை பெற்று வாழும் அதிசயப்பிறவிகளான இவர்களை முதலாளித்துவ ஆட்சியாளர்கள் அன்றும்  இன்றும் தமது ஆட்சியின் சீர்கேடுகளை முடிமறைக்க பிரதான சக்தியாகபயன்படுத்திக் கொள்கின்றனர்.


 இதன் அடிப்படையில் பலதரப்பினர் பங்கேற்கும் தன்னார்வக் குழுக்களாக பரிணமித்து பலபெயர்களில் செயற்படும் இவ்வகையான அமைப்புகளில் அனெகமானவை ஏகாதிபத்திய முதலாளித்துவ ஆ,ட்சியாளர்களுக்கு உளவு புரிபவர்ககளாகவும். பாதிக்கப்பட்டிருக்கும்  மக்களின் சிந்தனையை குழப்பி விடக்கூடிய அறிவியலுக்கு  புறம்பான கற்பனையைச் சிருஸ்டிப்பவர்களாகவும். அதற்காக அம் மக்களின் முற்போக்கு கலை இலக்கியச் செயற்பாடுகளில் ஊடுருவி மோசடியான முறையில்  அவர்களின் தேடல்களைச் சுக்கு நூறாக்கும் விதமாக எதிர்புரட்சி வியாபார இலக்கியங்ளை பரப்புவோராகவும் இத்தொண்டு நிறுவனங்கள் செயற்படுகினறன என்ற செய்திகள் இலங்கையின் கிழக்குப்பகுதியில் அம்பலமாகியுள்ளது.

இங்கு முதலாளித்துவ நாடுகளுக்காக உளவு பார்க்கும் அல்லது கருத்துக் கலாச்சார சீரழிவுகளை செய்வதற்கென்றே செயற்படும் கேடுகெட்ட தொண்டர் நிறுவனங்களை விட்டுவிடுவோம். தங்களை மார்க்சியகளாகவும்,  ஜனநாயக சக்திகளாகவும், முற்போக்காளர்களாகவும், நாங்களும் சேகுவராக்கள் தான்,  எனப்பெருமை அடித்துக்கொள்ளும் அரசியல் அடையாளத்திற்குரிய நபர்களே இங்கு விமர்சனத்திற்குட்பட்டவர்கள்.


இவர்கள் அரசியல் மௌனிகளாக தொண்டர் அமைப்பையே போற்றி பிரதானப்படுத்தகின்றவர்களாக காணப்படுகின்றனர். அரசியல் செயற்பாட்டை வலியுறுத்தும் கருத்துக்களை தட்டி கழிப்பதும் கவனம் செலுத்தாமையும் இவர்களிடம் காணப்படும் மிகக்குறைபாடான விடயமாகும்.   


நாட்டில் பொருளாதாரத்தால் நசியுண்டு போய்கிடக்கும் மக்களிடம் தற்போது அரசியல் பேசமுடியாது   நாம் அவர்களிடம்  கல்வியையும்  பொருளாதாரரீதியில் முன்னேற்றத்தையும் உண்டு பண்ணிய  பினனர்  தான் அரசியலைச் செய்ய முடியும். அதாவது தொண்டு நிறுவனப்பணியென்பது   தொடர்பையேற்படுத்தும் ஒரு வழி முறையாகும் என்கின்றனர். அதன் பிறகு மெல்ல மெல்ல எமது அரசியல் கருத்தக்களை  எடுத்துவிட வேண்டும் என்கின்றனர்.


கால் மார்க்ஸ் மக்களின் அபிவிருத்தியை மறுக்கவில்லையே. அது தானே மாக்சியம் என்ற ரீதியில் தமது உடனடியரசியலை தாம் சார்ந்து நிற்கும் நிலையை தெளிவாக்க திராணியற்று எழுந்தமானத்திற்கு பேசுவது வழமையாகி விட்டுது.

அன்பே சிவம் படத்தில்  மதமும் அன்பைதான் சொல்லுகிறது.  கால்மாக்சும் அன்பைத்தான் சொல்லுகிறார் என கமலகாசன் தத்தவம் சொன்னது போல், மக்களுக்கான பொருளாதார அபிவிருத்தியைத்தானே கால் மார்க்ஸ் சொலலுகிறார் என    இவர்கள் சொல்லுகின்றனர்.

மதம்மானது அன்பை வானத்து கடவுளை வைத்து அங்கிருந்த கொண்டு வரச் சொல்லுகிறது. மாக்சியம்  சொல்லுகிறது  தனிவுடமை பொருளாதாரத்தை அகற்றி கூட்டு பொருளாதாரம் நிறுவப்படும் போது மனித எண்ணங்களில் ஏற்படும் புதிய மாற்றமானது அன்பு நிலைச் சமுகம்மொன்றை மெல்ல மெல்ல படைக்கும் என்பதைத்தான் மாக்சியம் சொல்லுகிறது.

இவ்வாறான தொண்டர் நிறுவனப்பணிக்கு அபிவிருத்தி என்ற சொல்லைப் பயன்படுத்துவது அதிக மிகைப்படுத்தலாகும். ஒரு மாடு, ஒரு வலை, ஒரு நீர் இறைக்கும் இயந்திரம், தையல் உபகரணம், பாடசாலை உபகரணம், என்பனவற்றை வழங்குவது உதவிபேறும் நபர்களை உடனடியாக சற்ற ஆறதல்லடையச் செய்யும் நடவடிக்கை  என்பதைத் தவிர வேறு வரைவிலக்கணம் இருக்க முடியாது. வாடிக்கிடக்கும் பயிருக்கு ஒருநாள் தண்ணீரை ஊற்றிவிட்டுச் செல்வது போன்ற நடவடிக்கையென்பதே பொருத்தமானதாகும்.

இது மக்களது நெருக்கடி நிலைமைகளுக்கான ஒரு மனிதனேயமிக்க நிவாரணப்பணி.  இதில் நேர்மையான ஈடுபாட்டையும் பங்களிப்பையும் எதிர்புரட்சி சாராத நிலையையும் எவரும் மறுதலிக்க முடியாது. ஆனால் தம்மை அரசியல் உணர்வுள்ளவர்களாகவும் முற்போக்காளர்களாகவும் அடையாலப்படுத்தியவர்கள் இதுமட்டும் போதுமானதாகச் சொல்லிக் கொள்வது தான், விமர்சனத்திற்குரிய விடயமாகும்.

முதலாளித்துவ அமைப்பு முறையில் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் அனைத்து விதமான அவலங்களுக்கும் காரணம் முதலாளி லாபமீட்டுவதற்காகவே முதலீடு செய்கிறான், லாபத்தை சொந்த நலனுக்காக எடுத்துக்கொள்கிறான். இதில் மாற்றம் இல்லாத சமூகப்பொருளாதார உற்பத்தி நீடிக்கும் வரையில் அபிவிருத்தி, மக்கள் நலன், வாழ்வில் வசந்தம், என்ற கோசமெல்லாம் வெறும் ஏமாற்றேயாகும். இவ்வாறாக பிதற்றிக் கொள்பவர்களை அன்று மாக்சிய ஆசான்கள் முதலாளித்துவச் சோசலிசம், நிலபிரபத்துவச் சோசலிசம், கற்பனா சோசலிசம், என்ற சொற்பதங்களை பாவித்து தெளிவாக விமர்சனம் செயதனர். லெனினும் இவ்வாறான நபர்கள் மீது திருத்தல்வாதிகள் எனச்சாடி தனது காத்திரமான விமர்சனத்தை முன்னிறுயுத்தியுள்ளார். எனவே நாம் இன்னும் தொண்டர் அமைப்பு சோசலிசம் பேசுவது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.

இவர்கள் யுத்தம் மட்டுமே மக்களின் அன்றாட வாழ்வில் நெருக்கடிகளை உண்டு பண்ணியுள்ளதாக அதைப் பார்ப்பதென்பதும், இலங்கையில் யுத்தத்திற்கு முன்னரான முதலாளித்தவ உற்பத்தி முறைமையை மறந்து அதன் விளைவுகளான வறுமை, வேலையின்மை, சமுகச்சீரழிவுகள், ஊழல், மோசடிகள் என்பனவற்றை கண்டு கொள்ளாமல் அவற்றை ஆய்வுகளுக்கு உட்படுத்தாமல் எல்லாமே யுத்தத்தின் விளைவுகள் எனப் பிதற்றுவதும், அத்தோடு யுத்தம் முடிந்து நான்கு வருடங்களை எட்ட இன்னும் சில மாதங்களே உள்ளன இருந்தும் தனியுடைமைத் தன்மை  உற்பத்தி முறையென்பதாலும்  அரசின் அன்னிய மூலதன இறக்குமதிப் பொருளாதாரக் கொள்கையாலும் மேலும்  முதலாளித்துவ அரச அதிகாரவர்கத்தின் ஊழல் மோசடிககள்  போன்றவைகளே மக்களது பொருளாதார நெருக்கடிகள் இன்னும் தீர்க்க முடியாமல் இருப்பதற்கான அடிப்படைக் காரணம்  என்பதை  கண்டு கொள்லாமல்  இருப்பதும்,  அதன் மீது விமர்சனத்தை வைக்காத போக்கும் ஆரோக்கியமான அரசியல் பார்வையல்ல. ஒருவகையில் தெரிந்தோ தெரியாமலோ  முதலாளித்துவ மோசடியாட்சியை அதன் மக்கள் விரோதத்தைப் பாதுகாக்கும் கைங்கரியமேயாகும்.

எனவே நாம் இங்கு முதலாளித்துவ எதிர்ப்பு அரசியலில் ஒருவித பாசாங்கு போக்கை காட்டிக்கொண்டிருப்பதை விலக்கி,  முதலாளித்துவ எதிர்ப்பு போராளிகளுக்கு ஆதரவு வழங்கம் சக்தியாக எம்மை  வளர்த்துக் கொள்வது தான்  இன்றைய காலத்தின் அத்தியாவசிய பணியாகும்.

நிகழ்கால அரசியலில் மெனிகளாக இருந்து கொண்டு  காலம் வரும் போது தாம் சார்ந்த இயக்க அரசியல் அடையாளத்தை பாதுகாகத்து மீளவும் செயற்பட இவ் நிவாரணப் பணிகளை பயன்படுத்திக் கொள்வதும் ஒருவழி முறையே என்ற பேச்சு தற்போதைய காத்திரமான அரசியல் செயற்பாடுகளுக்கு முகம் கொடுக்க திராணியற்ற வெற்றுப்பேச்சாகும்.  


"பட்டிக்கு போனால் பால் இல்லையென்பான், வீட்டுக்குவா மாடும் கன்றும் தருகிறேன்“ என்ற பழமொழியில் குறிப்பிடப்படும் ஏமாற்று காரணைப்போல் தான் இவர்களும் பேசிக்கொள்கின்றனர்.

நம்நாட்டில் அரசியலை முன்னெடுப்பது பற்றிய பெரிய கற்பனையை அவ்வாறான எண்ணங்களை விட்டு விடுவோம்.  அங்கு உருவாகப்போகும் மக்கள் போராட்களுக்கு ஆதரவச்சக்தியாக புலம்பெயர்ந்த நாடுகளில் எவ்வாறு பணியாற்றப் போகிறோம், என்பதை அடிப்படையாகக் கொண்டு அதனை நோக்கி வளர்சியடைவதற்காக நாம் கவனத்தில் கொள்ள பலவிடயங்கள் கிடக்கின்றன. அவற்றில் பிரதான மானவற்றை கீழ்வருமாறு தொகுத்துக்கொள்வது அவசியமாகப்படுகின்றது.

  • இன்றைய முதலாளித்துவ தனியுடமை உற்பத்தி முறமையானது. மக்கள் மீது பலநிலைகளில் அழுத்தங்களையும், சீர்கேடுகளையும், சமூக விரோதன்மையினையும், கொடூர யுத்தங்களையும் ஏற்படுத்திக்கொண்டே தன்னைத் தக்க வைக்கும் கைங்கரியங்களில் சிறப்பாக பணிபுரிகிறது. இவ்விடயத்தை விஞ்ஞான ரீதியாக சமூகப்பொருளாதார அரசியல் ஆய்வு அடிப்படையில்  அம்பலப்படுத்தும் மாக்சியத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ளல் என்ற விடயம் சார்ந்த செயற்பாடு (சமூக அக்கறையுள்ளவர்களும் அரசியல் உணர்வுபெற்றவர்களும் முற்போக்கு விடயங்களில் ஈடுபாடுள்ளவர்களும் பங்கேற்கும் செயற்பாடாக இது அமையும்)
  • புலம் பெயர்ந்திருக்கம் மக்களிடம் அனைத்து சமூக முரண்பாடுகளையும்  அம்பலப்படுத்தல். அதற்காக சமூக மாற்றத்தை கோரி நிற்கும் முற்போக்கு கலையிலக்கிய செயற்பாடுகளை  கொண்டு செல்லல் என்ற விடயம்  சம்பந்தமான செயற்பாட்டை ஒழுங்கமைப்பது.
  • இங்குள்ள  சட்ட அனுமதிக்குட்பட்டு இந்நாட்டவரின் ஏற்பாட்டில்  நடைபெறும் மக்கள் நலனுக்கான  அரசியல் எதிர்ப்பு ஆர்பாட்டங்களில் கலந்து கொள்ளல். அத்தோடு நாம் தனித்துவமாக எமது நாட்டில் நியாயமான அரசியல் விவகாரங்களுக்காகவும் மக்கள் நலவிடயங்கள்  கருதியும்  அவ்வாறான சர்வதேச விடயங்கள் சார்ந்தும் அம்பலப்படுத்தம் செயற்பாடுகளில் இறங்குதல் குறிப்பாக ஆர்பாட்டங்களில் கவனம் செலுலத்துதல்.


இவ்வகையான நடவடிக்கைகளுக்காக நாம் சிந்திக்காத வரையில்,  குறிப்பாக நாம் அரசியல் மௌனவாதத்தில் இருந்து விடுபடாத வரையில், எமது தொண்டர் நிறுவணப் பணியானது. தெரிந்தோ தெரியாமலோ முதலாளித்துவத்தைப் பாதுகாக்கும் கைங்கரியமேயாகும் என்பது கசப்பான உண்மையாகும்.

  -திலக்