Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

தருமபுரியில் தலித் வீடுகளுக்கு தீ வைப்பு

தருமபுரியைச் சேர்ந்த வன்னியர் இனப் பெண்ணும் அப்பகுதி தலித் இளைஞர் ஒருவரும் காதல் திருமணம் செய்துகொண்டது கலவரத்தில் முடிந்திருக்கிறது.

அந்தத் திருமணத்தால் மனமுடைந்த பெண்ணின் தந்தை நேற்று தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட தலித்துக்களின் வீடுகள், விஷமிகளால் தீவைக்கப்பட்டிருக்கிறது.

 

அந்த மக்கள் அண்டையிலுள்ள பகுதிகளில் தஞ்சமடைந்திருப்பதாகத் தெரிகிறது. இதுவரை 15 பேர் தீவைப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தற்போது நிலை கட்டுக்குள் இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.

திவ்யா என்ற பெண்ணும் இளவரசன் என்பவரும் சில காலம் காதலித்து வந்திருக்கின்றனர், குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள மறுக்க, தாங்களாகவே திருமணம் செய்துகொண்டு சேலம் போலீசாரிடம் தஞ்சமடைந்திருக்கின்றனர். போலீசார் பாதுகாப்பளிப்பதாக உறுதியளித்தனர்.

ஆனால் வன்னியர் இனத் தலைவர்கள் திருமணத்தை அங்கீகரிக்கத் தயாரில்லை. மாறாக அவர்கள் தலித் சமூகத்தினர் பெண்ணை அவரது பெற்றோரிடம் “ஒப்படைக்கவேண்டுமென” உத்தரவிட்டதாகவும், ஆனால் அந்தப் பெண் திரும்பிச் செல்ல மறுத்துவிட்டதாகவும், இந்நிலையிலேயே திவ்யாவின் தந்தை நாகராசன் தற்கொலை செய்துகொண்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.

வன்னியர்கள் தலித்மக்கள் வாழும் நத்தம் காலனியைச் சூழ்ந்து கொண்டு தாக்கியதாகவும், மிரண்டுபோய் வெளியேறியவர்கள் இரவெல்லாம் கடும் குளிரில், திறந்தவெளியில் தங்க நேரந்ததாகவும் கூறப்படுகிறது.

தற்போது போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று் மாவட்ட நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

தருமபுரி மாவட்டத்தில் தலித் இளைஞர் வன்னியர் பெண்ணை காதல் திருமணம் செய்த பிரச்சினையில் நூற்றுக்கும் மேற்பட்ட தலித் வீடுகள் அழிக்கப்பட்டிருப்பதற்கு அங்கு நிலவும் கட்டைப்பஞ்சாயத்து கலாச்சாரமே காரணம் என்கிறார் எவிடென்ஸ் அமைப்பின் இயக்குநர் அ கதிர்.

தருமபுரி கலவரம் தொடர்பில் அவரது நிறுவனத்தின் உண்மை அறியும் குழுவினர் கண்டறிந்த விவரங்கள் குறித்து பிபிசி தமிழோசைக்கு அ கதிர் அளித்த செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.