Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

அணுமின்னிலையம் சாதாரண மக்களின் விடிவிற்கா? முதலாளித்துவ நலனிற்கா?

இலங்கை மக்களாகிய நாம் அணுவுலையை எதிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றோம். இந்த அணுவுலையை நாம் உருவாக்கவில்லை, ஆனால் எமது சம்மதம் இல்லாமலே எமது புவியியல் எல்லையை தாண்டி எம்மை அழிக்கும் உயிர் கொல்லி அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.. இந்த உயிர் கொல்லியை எதிர்க்காது சும்மா இருப்போமானால், எமது சந்ததி இல்லாது போகும். இதனால் ஏற்ப்படக் கூடிய பேரழிவிற்கும் தாக்கத்திற்கும் இனம் மொழி கடந்து நாம் எல்லோரும் (தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள், மலையாளிகள், தெலுங்கர்கள், கர்நாடகர்கள் எனப் பலர்) பலியாகும் சாத்தியப்பாடு உண்டு. அணுவுலையினால் ஏற்படும் கதிரியக்கம் எல்லோரையும் தாக்கியழிக்கும் உயிர்க் கொல்லியாகும்.

அணுச்சக்தியினால் ஏறப்படும் விளைவுகளை கையாளும் சக்தி அற்ற நிலையில் தான் இலங்கைச் சமூகம் இருக்கின்றது. கதிரியக்கத்தினால் ஏற்படும் விளைவுகளையும், கதிரியக்கத்தை பற்றிய அறிவையும் இல்லாத ஒரு சமூக அமைப்பில் தான் நாம் வாழ்கின்றோம். உலகின் ஏனைய பாகங்களில் நடைபெற்ற அணுவுலை விபத்துக்களைப் பற்றியோ அல்லது இந்தியாவில் மத்திய மாநிலத்தில் போபாலில் இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தின் விளைவுகள் பற்றியோ அல்லது அதன் தாக்கம் பற்றியோ முழுச்சமூகமும் உணர்ந்ததாக இல்லை. சமச்சீர் அற்ற பொருளாதார வளர்ச்சியும், சமச்சீரற்ற அறிவும் இருக்கின்ற சமூக அமைப்பில் ஒரு திட்டத்தினை வகுக்கின்ற போது அந்த முழுச் சமூகத்தின் வளர்ச்சியை ஒன்றித்தே திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.  அணு என்ற விஞ்ஞான வளர்ச்சி மறுப்பதற்குரியதல்ல.  ஆனால் இதன் பக்க விளைவுகள் இந்த உலகிற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே அணு மின்னிலையம் இந்தியா, இலங்கை போன்ற தேசங்களுக்கு அவசியமற்றதாகும்.


திட்டங்கள் தீட்டப்படுகின்றதா?


முதலாளித்துவ வளர்ச்சியடையாத தேசமானது, அதன் அரைநிலபிரபுத்துவ எச்சங்களைக் கொண்டதாக இன்று நவகாலனித்துவ தாராளமயமாதல் கொள்கையில் கீழ் அன்னிய மூலதனமும், அன்னிய சந்தையை நோக்கிய பொருள் உற்பத்தியும், வர்த்தகமும் வளர்க்கப்பட்டுள்ளது.  அன்னிய பொருள் உற்பத்தி சார்ந்த அல்லது சமூக கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. (உற்பத்தி சாதனத்தை அன்னிய சக்திகள் தமது நலனுக்கு ஏற்ப கையாள்கின்ற).  முன்னர் அரைநிலபிரபுத்துவ உற்பத்தி முறையில் சிறிதளவேனும் தன்னிறைவடைந்திருந்தவர்கள், தற்போது தமது உழைப்பை கூலியாக விற்கும் நிலைக்கு வந்திருக்கின்றார்கள். பெரும்படையாக கூலியை விற்பதற்கு என்றே நகர்ப்புறத்தை நோக்கி வேலையில்லாதவர்கள் புலம்பெயர்கின்றார்கள்.


உற்பத்தி சக்தியான மனித வலுவை வளரவிடாது தடுப்பதன் மூலம் குறைந்த கூலிகளையும், மிதமிஞ்சிய உழைப்புச் சக்திகளையும் நவ காலனியமும் உற்பத்தி செய்கின்றது. உற்பத்தி சக்தியை வளரவிடாது தடுக்கப்படுவதானால் கல்வித் தகமை வளர்ச்சியடையதான நிலையை தோற்றுவிக்கின்றுது. இலங்கை போன்ற நாடுகளில் பொருளாதாரத்தில் பின்தங்கியும், அன்றாடம் வாழ்விற்கே அல்லல்படும் மக்களே பெரும்பான்மையானவர்கள். ஒரு பின்தங்கிய பொருளாதாரச் சூழலில் இருக்கும் ஒரு பிள்ளை அடிப்படைக் கல்வி கற்பதற்கே முடியாமல் இருக்கின்றது. இங்கு


1.  அடிப்படைக் கல்வி பெறாதவர்கள் எத்தனை விகிதம் அதிகமாக இருக்கின்றது.
2.  மேற்கல்வியை தொடர முடியாதவர்கள் அதிக விகிதாக இருக்கின்றனர்.
3. சாதி ரீதியாக ஓதுக்கப்பட்டவர்கள் எவ்வாறு வாழ்கின்றார்கள் அவர்களின் உற்பத்தி வளர்ச்சி பெறாமை நீடித்து இருக்கின்றது.
4. விவசாயம் எவ்வகையாக வளர்ச்சியடையாது இருக்கின்றது. (நீர்ப்பாசனத்தின் மூலமாக நீர் கிடைப்பதற்கு வசதியற்ற நிலை)
5.  கடல் தொழில் வளர்ச்சியை காணமுயவில்லை
6.  சிறுகைத்தொழில் வளம் முன்னேற்றம் அடையவில்லை.


பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் தான் இலங்கை, இந்திய மக்கள் இருக்கின்றார்கள். இதில் சிறுவிகித மக்கள் தொகையினரே முழுமையான நாட்டின் பணப்புழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு நலிந்து நிலையில் இருக்கின்ற மக்களை பொருளாதாரத்தில் மேம்படுத்த வேண்டுமென்றால் சுயசார்ப்பு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதும், அதன் ஊடாக (உற்பத்தி சக்திகளின்) மனிதவலுவை அறிவியல் ரீதியாகவும், சிறப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும், பல்திறன் கொண்டவர்களாகவும் உருவாக்குவது ஒரு சமூக மாற்றத்தின் மூலம் தான் முடியும். இவ்வாறு மக்களின் வளம் வளர்ச்சியடையாது இருக்கின்ற வேளையில் இந்திய இடதுசாரி அமைப்பொன்று அணுவுலையினால் உற்பத்தி சக்தி வளர்ச்சியடையும் என கருதுகின்றது. முதலாளித்துவத்தின் முற்போக்குப் பாத்திரம் அம்பலப்பட்டு இன்று முதலாளித்துவம் தொழிலாளர்களை அடக்கும்முறைக்குள் உள்ளாக்கும் பொறிமுறையை நிதிமூலதனத்தின் உதவியுடன் ஏற்படுத்திக் கொள்கின்றது.


சுயசார்பு:


எமது நாட்டினைப் பொறுத்தவரை எவ்வகையான வளங்கள் இருக்கின்றன? இந்த வளங்களை எவ்வாறு பயனப்படுத்திக் கொள்வது? எமது சொந்த வளங்களின் வளர்ச்சியினால் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் முடிவுகளை எடுக்க வேண்டும்.


அணுவுலைக்கும் சுயசார்பு பொருளாதாரத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிவதில்லை. அணுவுலை உருவாக்குவதற்கும், அறிவியல் தொழில் நுட்பத்தினை அன்னிய சக்திகளைச் சார்ந்து இருக்கின்றது. ஆனால் மொத்தத்தில் நாட்டின் வளர்ச்சி என்றும், இந்தியா வல்லரசாக வருகின்றது என்ற கனவுலகில் சஞ்சரிக்கின்றனர். முதலாளித்துவ ஜனநாயக பொருளாதார வளர்ச்சிக்கு பாதகமான இந்த நிலையை தோற்றுவிக்கின்றது. அன்னிய உதவியுடன் நிறைவேற்றப்படும் வளர்ச்சித் திட்டங்கள் முதலாளித்துவ கட்டத்தின் வளர்ச்சியை கூட பெரும்பான்மையான மக்களை அடையவிடாது தடுக்கின்றது. அதாவது உற்பத்தி சக்தி புரட்சிகர கட்டத்தினை வளரவிடாது தடுப்பதாக இருக்கின்றது. பெரும்பான்மை வசதியற்று இருக்க, கல்வியை விலைக்கு வாங்கும் சிறு விகித உயர்வர்க்கத்தின் நலன்கள் பாதிக்கப்படுவதில்லை.


கடந்த 20 வருட காலத்தில் கியூபா பல நெருக்கடியின் மத்தியிலும் உலகின் சிறந்த வைத்திய சேவையினை வழங்கும் நாடு என்ற நிலையை அடைந்திருக்கின்றது. வைத்தியர்களை உருவாக்கி உலகின் பல பாகங்களுக்கும் கியூபா அனுப்பி வைக்கின்றது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக போக்குவரத்து பிரச்சனையை தீர்க்கும் முகமாக மைய நிலையில் இருந்து சிறுநகரங்கள் என்று பாடசாலையையும், வைத்தியசாலைகளையும்  நிர்மானித்துள்ளது.


இதேபோல சிறுபயிர் செய்கையை உருவாக்கி உணவில் தன்னிறைவை அடைந்துள்ளது. இவைகள் எல்லாம் ஒரு கியூபாவின் பிரச்சாரம் என்று முழுவதையும் ஒதுக்கி விட முடியாது. கல்வி, உணவு, மருத்துவம் இவற்றை ஒரு நாடு கவனம் கொள்ளாவிடின் கியூபாவின் ஆட்சி எப்போவோ வீழ்ந்திருக்கும். அன்னிய மூலதனம் இல்லாது ஒழிப்பதன் மூலமே சுதேசிய பொருளாதாரத்தை கட்டியமைக்க முடியும். இன்று அன்னிய மூலதனத்தில் அணுமின்நிலையத்தை உருவாக்கிக் கொண்டு கடன் சுமையை ஏற்படுத்துவது மாத்திரம் அன்றி, கடன் வழங்கும் நாடுகளின் நிபந்தனைக்கு கட்டுப்படும் நிலை ஏற்படுகின்றது.  அணுமின் நிலையத்தால் பயன்பெறப்போவது மேற்கத்தை சந்தையை நோக்கிய உற்பத்தி துறையும், உயர்வர்க்கத்தவர்களின் நுகர்வுத் தேவையை பூர்த்தி செய்வதுமாகும்.


சுயசார்பு பொருளாதாரத்தை கட்டியெழுப்புதற்கு நாட்டில் உள்ள மாற்று வழங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசு சார்பற்ற நிறுவனங்கள், தனிநபர்கள் அணுவுலைக்கு மாற்றாக மின்சார சக்தியினை பெறும் வழிகளை முன்வைக்கின்றார்கள்.

 

  • காற்றாடி விசையின் ஊடாக மின்சாரம் பெறல்
  • எரிமலைப் பிரதேசங்களை ஒட்டிய பகுதிகளில் நிலத்துக்கடியில் இருந்து மின்சாரம் எடுக்கும் முறை சில நாடுகளில் இருக்கின்றது.
  • சூரிய வெளிச்சத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம்.

ஆனால் அணுமின்உலை என்பது நுகர்வுக் கலாச்சாரத்தின் அறிமுகமாகவோ பார்க்க வேண்டியிருக்கின்றது. பெரும் கடன் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட அணுவுலையானது நலிந்த நிலையில் இருக்கின்ற உற்பத்தி சாதனங்களை ஊக்குவிப்பதை தவிக்கின்றது.

அறிவு வளர்ச்சியை எதிர்க்கப்படுகின்றதா?


உலகின் உருவாகியுள்ள வளர்ச்சியை ஏற்படுத்தியவர்கள் பணம் படைத்தவர்கள் அல்ல. உழைப்பை விற்கும் உற்பத்தி சக்தியாகிய சொத்துடமையற்ற மக்களே. கண்டுபிடிப்புகள், மனித இனம் புதிய புதிய கண்டுபிடிப்புக்களை அதன் பொருளாதார வளர்ச்சிப் போக்கில் பயன்படுத்தி தன்மை முன்னேற்றிக் கொண்டது. கண்டுபிடிப்புக்களை முதலில் பயன்படுத்துவது உயர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே. வளர்ச்சியை உழைக்கும் வர்க்கம் அனுபவிக்க வேண்டும். நவீன தொழிற்நுட்பத்தையும், வளர்ச்சியையும் அனுபவிக்க முடியாது சேரியிலோயே தமது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் மக்கள் இருக்கின்றார்கள். ஏன் மனித மலத்தையே கையால் அள்ளும் அவல நிலை இருக்கின்றது. மனித மலத்தை அள்ளும் இன்றைய நாகரீக உலகில், அணு உலை அமைப்பதன் ஊடாக அவர்களை முன்னேற்றி விட முடியாது. மலத்தை மனிதர் அள்ளும் நிலையை மாற்றி கொள்வதற்கு இன்றையக்கு எந்தனையே நவீன இயந்திரங்கள் வந்திருக்கின்றது, நவீன இயந்திரங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி சாக்கடை, கழிவு நீர் சுத்திகரிப்பு, மலங்களை அகற்றல், குப்பைகளை அகற்றவும், மறுசுழற்சிக்கு உட்படுத்தவும் நவீன இயந்திரங்களை பயன்படுத்த முடியவில்லை. கழிவுளை அகற்றுவதற்கே நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். அறிவியலை பெரும்பான்மையான மக்கள் பயன்படும் முறையில் பயன்படுத்திக் கொள்ளும் திட்டத்தை தவிர்த்துள்ளதை இந்திய அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்ளமுடியும்.


அறிவியல் வளர்ச்சியினால் ஏற்படுகின்ற பயன்களை பெரும்பான்மையான மக்கள் பயன்பெற வேண்டும். சமூக, பொருளாதார மாற்றத்திற்கான போராட்டத்தின் ஊடாக உற்பத்தி சாதனத்தைக் கைப்பற்றி உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியையும், உற்பத்தி உறவையும் மாற்றி அமைக்க வேண்டும். இதன் மூலமே உண்மையான வளர்ச்சியையும் அடையமுடியும்.


மார்க்சிய அடிப்படையிலான அறிவியல் வளர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு இயக்கம். அணுவுலையை எதிர்ப்பவர்கள் எல்லாம் அறிவு வளர்ச்சியை எதிர்க்கவில்லை. அறிவியலையே எதிராக பார்ப்பது வேடிக்கையாக இருக்கிறது இந்தக் கூற்று வெறும் அபர்த்தமாகும். விபத்துக்களே விதியாக மாற்றுவது அறிவுடமையாகாது என்பது உண்மைதான். மார்க்சீயத்தின் பெயரில் அணுவுலை அமைப்பது எவ்வளவு புத்திசாலித்தனமானதோ அதேபோல தான் சமச்சீர் அற்ற சமூக அமைப்பில் பெரும்பான்மையான மக்கள் சிறுபான்மையினர் அனுபவிக்கும் உரிமைகளையும், வளர்ச்சியினால் ஏற்படும் பலன்களையும் அனுபவிக்க வேண்டும்.


ஏழைகளின் நோய்:


சுற்றாடல் மாசுபடல் இன்று அதிகமாக இருப்பதற்கு காரணம் லாபநோக்கம் கருதிய உற்பத்தி முறையில் அமைந்து கொண்ட நுகர்வுக் கலாச்சாரமாகும். மனித குலத்தின் எந்தக் காலத்திலும் சுற்றாடல் மாசுபடல் பிரச்சனையாக இருந்ததில்லை. ஆனால் தொழிற்துறை வளர்ச்சியுடன் ஏற்பட்ட பொருளாதார அமைப்பு உருவாக்கிய பிரச்சனையே சூழல் மாசுபடுதலாகும்.


அனல் மின்நிலையத்தில் வெளியேற்றப்படும் சாம்பல், புகையினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு அதிகமாகும். அதன் விபத்துகளினாலும், பயன்பாட்டினாலும் வருடத்திற்கு 10 லட்சம் பேர் அனல் மின்நிலைய உற்பத்தியால் இறக்கிறார்கள். அணுவுலையால் வரும் பாதிப்பை விட அதிக பாதிப்பு உண்டு என்பது வாதம் அல்ல. எதிர்விழைவுகளை எதிர்நோக்கும் தகுதியில் பொருளாதார அமைப்பு இருக்கின்றதா என்பதே பிரச்சனை. அனர்த்தத்தினை எதிர்கொள்ளக் கூடிய கட்டமைப்பு இல்லை. காய்ச்சல் வந்தால் கசாயம் பெரும்பான்மையான மக்கள் குடித்தே தம்மை பாதுகாக்கின்றனர்.


எய்ட்ஸ் வறிய நாடுகளில் பெருமளவில் இருக்கின்றது. மேலைநாடுகளுடன் ஒப்பிடும் போது எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்டநாட்கள் வாழ்வதில்லை. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துகள் போதிய அளவிலும், மானியமாகக் கூட பெறமுடிவதில்லை. எய்ட்ஸ் நோய்க்கான நியாயவிலை மருந்துகளுக்கு கூட உலக வர்த்தக மையத்தினால் கட்டுப்பாடு இருக்கின்றது. ஏழைகளுக்கு நோய்கள் வரும் பட்சத்தில் அதற்கான மருந்துகளே சிரமமின்றிக் கிடைப்பதில்லை. இதில் கதிரியத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டால் அதற்கான பாதுகாப்பு திட்டங்கள், மீள்வதற்கான வழிமுறைகள் அமையப்பட்டடிருக்க வேண்டும்.

சம்பூர்:


சம்பூர் மக்கள் இன்று அந்த மண்ணைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்கள். அந்த மக்கள் பாரம்பரியமாக கடல்தொழில் செய்து வாழ்ந்த மக்கள். கடல்தொழில் மூலம் தமது வாழ்க்கையை எந்த சமூகத்தின் கீழ் அடிபணிந்து வாழ்ந்தவர்கள் அல்ல. இலங்கையில் இருக்கும் கடல் தொழில் செய்பவர்கள் எந்தச் சமூகத்தின் கீழும் பொருளாதார ரீதியாக அடிமைப்பட்டு கிடந்தவர்கள் அல்ல. பொருளாதார ரீதியாக தன்னிறைவுடன் வாழ்ந்தவர்கள். அவர்களின் வாழ்க்கை நடந்து முடிந்த யுத்தத்தினாலும், இன்று ஏற்பட்டுள்ள இடப்பெயவினாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இவர்களின் சந்ததி தொடர்ந்தும் பின்தங்கிய நிலையில் வாழ்வே வழிவகுக்கின்றது. இவர்களின் சந்ததியானது மற்றைய  சமூகத்தின் அந்தஸ்தை அடையமுடியாத அவல நிலைதான் தொடர்கின்றது.


இந்திய விஸ்தரிப்பு கூடாங்குள அணுவுலைமுலமாக மறைமுறை விஸ்தரிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்திய பாதுகாப்பு வலையத்தினுள் (சர்வதேச எல்லையல்ல) அடங்கிருக்கின்றது. இந்த எல்லைக்குள் அமைக்கப்பட்டுள்ள அணுவுலையானது மறைமுக ஆக்கிரமிப்பே. இலங்கை மக்களுக்கு எவ்வித அறிவுறுத்தல் இன்றி அமைக்கப்பட்டது தான் இந்த கூடாங்குள அணுமின் நிலையமாகும்.


இப்போ சம்பூர் பிரதேசத்தில் மக்கள் அனல்மின் நிலையம் அமைப்பதற்காக வெளியேற்றப்பட்டுள்ளனர். பதவிகளையும், சொத்துக்களையும் பெருக்கிக் கொள்ள துடிக்கும் அரசியல்வாதிகளின் ஒப்புதலுடன்  இந்த ஆக்கிரமிப்பு நடைபெறுகின்றது. இந்த  ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட வேண்டிய நிலையில் இலங்கை மக்கள் அனைவரும் இருக்கின்றோம்.


உற்பத்தி உறவுகளை மாற்றியமைப்பதுதான், லாபத்தினை அடிப்படையாகக் கொண்ட ஏகாதிபத்தியத்தினையும், மக்களுக்கு எதிரான ஜனநாயகமற்ற அரசினையும் ஒழிப்பதற்கு பதிலாக ஆதரிக்கும் பிற்போக்குவாதிகளுக்கு எதிராகவும், உற்பத்தி சக்திகளை பெரும்பான்மை மக்கள் அனுபவிக்கும் படியான சமூக அமைப்பை நோக்கிய பாதையை வகுத்துக் கொள்வோம்.


இடதுசாரிகளின் கடமை:


ஏகாதிபத்தியத்தின் அடிவருடி என்.ஜி.ஓ.க்களின் திட்டமிட்ட செயற்பாடுகளையும், பெருந்தேசியவாதக் குறுக்கீடுகளையும் வெற்றி கொள்ள வேண்டும். சமூகத்திற்கு கடமையாற்றக்கூடய செயற்பாடுகளை கொடுப்பது என்றால் தற்கால சூழலை துல்லியமாக அவதானித்தே அதில் இருந்து அரசியல் வடிவமைத்துக் கொள்ளும் போராட்டங்களாகும். இவற்றைச் செய்வதற்கு தற்பொழுது மலடாகிப்போன சமூக அமைப்பில் இருந்து ஒரு தெளிந்த பார்வையை நோக்கியதான ஒரு ஆலோசனையை நோக்கி உரையாடல் அவசியம். இவைகள் காலம் தாழ்த்தி செய்ய முடியாது.


சாதாரண  கோரிக்கைகள் எதிரிக்கு பெரும் சவால்கள் எனப்படுகின்ற கோரிக்கைகள் அல்லது மென்மை தன்மை கொண்ட கோரிக்கைகளும் போராட்டங்களும். இது ஒரு வகை முன்னணியைக் கொண்ட வெகுஜனப் போராட்டம். மானசீகமான செயற்பாடுகளையும் தன்னியல்பாக உருவாகின்ற போராட்டங்களை வழிநடத்துவதும் நெறிப்படுத்துவதும் முக்கியமாகும். இறுதி இலட்சியமான உற்பத்தி சாதனத்தை கைப்பற்றி உற்பத்திமுறைகளை பெரும்பான்மை மக்களுக்கு கையளிப்பதாகும். இதன் மூலமே பெரும்பான்மை மக்களின் உரிமையை நிலைநாட்ட முடியும்.