Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

யாழ் நல்லூர் பிரதேச சபைத் தலைவர் மீது தாக்குதல்

மருத்துவமனையில் வசந்தகுமாரின் வாக்குமூலத்தை பொலிசார் பதிவுசெய்கின்றனர்

மருத்துவமனையில் வசந்தகுமாரின் வாக்கு மூலத்தை பொலிசார் பதிவுசெய்கின்றனர்

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபைத் தலைவர் பரமலிங்கம் வசந்தகுமார் அடையாளம் தெரியாதவர்களினால் ஞாயிறு பிற்பகல் கொக்குவில் நந்தாவில் பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.

 

காயங்களுக்கு உள்ளாகிய இவர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நல்லூர் பிரதேச சபைக்குச் சொந்தமான காணித்துண்டு ஒன்றை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகவும், அதன் பின்னணியிலேயே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் வைத்தியசாலையில் அவரைப் பார்த்துப் பேசியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்திருக்கின்றார்.

இந்த காணி அபகரிப்பு தொடர்பாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கடுமையான விவாதம் நடைபெற்று, அதனை இராணுவத்தினர் பிரதேச சபையிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள பின்னணியில், சனிக்கிழமை இராணுவத்தினர் அந்த இடத்தில் முகாம் ஒன்றை அமைத்திருப்பதாக சிறிதரன் கூறினார்.

நல்லூர் பிரதேச சபைத் தலைவர் மீதான இந்தத் தாக்குதலை அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிசாந்த ஜயக்கொடி அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது,தாக்குதல் சம்பவம் நடைபெற்றிருப்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து யாழ் பொலிசார் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

-http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/10/121014_jaffnaattack.shtml