Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பாதை தெளிவாயிருந்தால் பார்வையும் தெளிவாயிருந்தால்….

கல்வித்துறையில் தோன்றியுள்ள நெருக்கடியும், அதற்கெதிராக அன்றாடம் நடக்கும் போராட்டங்களும் இன்றைய பத்திரிகைகளில் நாளாந்த செய்திகளாக இருக்கின்றன. விஷேடமாக சுதந்திரக் கல்வியை பாதுகாப்பதற்காக பல தசாப்தங்களாக போராடி வரும் மாணவர் இயக்க போராட்டங்களில் பல்கலைக் கழக விரிவுரையாளர்களும், மாணவர்களும் இணைந்துள்ளார்கள். போராட்டம் விரிவடைந்துள்ளது. போராட்டக் களம் சூடாகிக் கொண்டிருக்கிறது.

 

இலங்கையில் செயல்பட்டு வரும்  ''சுதந்திர கல்விக் கோட்பாடு" என்றால் இலவசமாக கல்வியைப் பெற்றுக் கொடுப்பதே என பெரும்பாலானவர்கள் கூறுகிறார்கள். நாம் பணம் கொடுத்து வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் வரி செலுத்துறோம் என்றால் அது, கல்வியையும் ,சுகாதார வசதிகளையும் பெற்றுக் கொள்வதற்குத்தான். ஆனால் உண்மை நிலை என்னவென்றால், மக்கள் விலைக்கு வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் செலுத்தும் வரி கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு ஒதுக்கப்படுவதாக ஆட்சியாளர்களும் உறுதியளித்திருப்பதுதான். இலங்கையின் கல்வி முறை உண்மையிலேயே ஒரு விதத்தில் பார்க்கப் போனால் முன்கொடுப்பனவு சேவையாகவே இருக்கிறது. '' சுதந்திர கல்வி" என்பதன் உண்மையான கருத்து ''கல்வியின் சம உரிமை" ஓரளவுக்காவது உறுதி செய்யப்பட்டிருப்பது வேயாகும். 

கல்வியில் சம உரிமை என்பது இன, மத, குல, பால். நிறம் மற்றும் ஏற்றத் தாழ்வு இல்லாமல் கல்வி பெறுவதற்கான உரிமை. இன்றைய நிலையில் நாம் அனுபவித்து வரும் இந்த கல்வி முறையில் இது 100வீதம் உறுதி செய்யப்படவில்லை. என்பது எமக்குத் தெரியும். ஆனாலும் வரலாற்றில் கல்வியை பாதுகாப்பதற்காக நடத்திய போராட்டங்கள் காரணமாக ஓரளவாவது  கல்வி பாதுகாக்கப்பட்டிருக்கிறது. சுதந்திரக் கல்வியை பாதுகாப்பதற்காகவும் நல்லதொரு சமுதாயத்தை உருவாக்குவதற்காகவும் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக 1980களில் 623பல்கலைக் கழக மாணவர்களது உயிர்களை ஆட்சியாளர்கள் காவுகொண்டுள்ளனர்.

கடந்த காலங்களில் தனியார் பல்கலைக் கழக சட்டமூலத்தை கொண்டு வரப்போவதாக தற்போதைய கல்வி அமைச்சர் உரத்து சத்தமிட்டர். 2010மே மாதம் அவர் தனது அமைச்சுப் பதவியை பொறுப்பேற்ற நிமிடத்திலிருந்து அதற்கான திட்டத்துடனேயே செயற்பட்டு வந்தார். அந்த திட்டத்தின் பிரதியொன்று எமது கைவசம் இருக்கிறது. 2010மே மாதத்திலிருந்து 2012ஜனவரியில் வகுப்பு தடை செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 1000த்தை நெருங்கியுள்ளது. சிறைபடுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 100ஐ நெருங்கியுள்ளது. இடைக்கிடை தடை செய்யப்பட்ட மாணவர் சங்கங்களின் எண்ணிக்கை 35. போலிசாரைக் கொண்டு மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் எண்ணிலடங்காது. மேலும் ருகுணு பல்கலைக கழகத்தின் மாணவர் தோழர் சுசந்த பண்டார தனது உயிரையும் இழக்க நேரிட்டது. இதனூடாக  இரண்டு முக்கியமான சீர்த்திருத்தங்களை கொண்டு வருவதற்க ஆட்சியாளர்கள் முயன்றனர். முதலாவதாக தனியார் பல்கலைக் கழக சட்டமூலம். இரண்டாவது, அரச பல்கலைக் கழகங்களில் பாட விதானங்களை வெளிநாட்டு மாணவர்களுக்கு விற்பது. ஆனால் 2012 ஜனவரியில் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு மத்தியிலும் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் காரணமாக இந்த இரு சட்டமூலங்களும் தோற்கடிக்கப்பட்டன.

2010ல் விரிவுரையாளர்களின் போராட்டம் ஆரம்பமாகியது. அந்த போராட்டத்தின் ஆரம்பத்தில் சம்பள அதிகரிப்பு எனபதே அவர்களது கோஷமாக இருந்தது. பெரும்பாலானவர்களின் கூற்றுப்படி அதன் தலைமை போராட்டத்தைக் காட்டிக் கொடுத்ததனால் போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டத்தின்  இரண்டாம் கட்டமும் மேற்படி கோஷத்தை முன்னிலைபடுத்தியதாகவே இருந்தது. அதன் மூன்றாம் கட்டத்தில் அதன் தலைமை மேற்கொண்ட பொருத்தமானதும் பாரதூரமானதுமான தலையீட்டின் காரணமாக கோஷங்கள் விரிவடைந்தன. தொழில் ரீதியான பிரச்சினைக்குள் மாத்திரம் மட்டுப்படாமல் விரிவான கோஷங்களுக்குள் நுழைவதற்கு அவர்களது பகீரத முயற்சி காரணமாக இருந்தமையால் அவர்களை நாம் மதிக்கிறோம்.

பல மாதங்களாக இழுபட்டு வரும் தொடர் வேலை நிறுத்தத்தின் ஊடாக விரிவுரையாளர்கள் சங்கம் அரசாங்கத்திற்கு விடுத்திருக்கும் சவால் சாதாரணமானதல்ல. இது சம்பளப் பிரச்சினையை மாத்திரம் மையமாகக் கொள்ளாமல் தமது கோஷங்களை விரிவாக்குவதன் ஊடாக தொழிற் சங்க போராட்டத்திற்கு அவர்கள் புதிய வழக்காறொன்றை இணைத்துள்ளார்கள். அது, போராடும் சக்திகளை மக்களின் எதிரிகளாக்குவதற்கு அரசாங்கம் கையாண்ட குள்ளநரித்தனத்திற்கு கொடுத்த சாட்டையடியாகும். அதேபோன்று அது முற்போக்கான ஒரு முயற்சியுமாகும். அதற்காக தொடர்ந்து முன் நிற்பதற்காக தமது அமைப்பை எவ்வளவுக்கெவ்வளவு தயார் நிலையில் வைத்திருந்தார்கள் என்பது எதிர்காலத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாகும்.

தற்போது விரிவுரையாளார் சங்கம் முன்வைத்திருக்கும் முக்கியமான கோஷங்கள் மூன்றாகும். முதலாவது தேசிய உற்பத்தியில்  '6வீதத்தை கல்விக்காக ஒதுக்கு." இரண்டாவது, 'அரசாங்க கல்வியை பாதுகாத்திடு." மூன்றாவது 'சம்பளப் பிரச்சினையை தீர்த்து விடு" என்பனவாகும். இவற்றில் முதலாவது கோஷம் விரிவான ஒன்றாக இருப்பதோடு, கல்வியில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சியின் அடிப்படையே அங்குதான் இருக்கிறது. அதேபோன்று, விரிவுரையாளர் சங்கம் இவ்வாறு விரிவான கோஷங்ககளை கையில் எடுத்ததன் ஊடாக கல்விப் போராட்டத்திற்கு புதிய பலத்தையும், சமூகத்தின் கவனயீர்ப்பையும், மக்களது    வரவேற்பையும் பெற்றுக் கொள்ள முடியும். இந்த இரண்டாவது கோஷத்தோடுதான் எமக்கு அரசியல் பிரச்சினையொன்று ஏற்பட்டிருக்கிறது. கடந்த காலத்தில் விரிவுரையாளார் சங்கத்தினால் " கல்வியில் சம உரிமையை பெற்றுக் கொடு " என்ற விரிவான கோஷம் ஒரு முறை கொண்டு வரப்பட்டிருந்ததை நாம் பார்த்தோம். ஆனால் அதிலிருந்து பின்வாங்கி ' அரச கல்வியை பாதுகாப்போம் என்ற கோஷம் முன்வைக்கப்பட்டமை சிக்கலாக இருக்கிறது.

இந்த கோஷம் அரசியல் ரீதியிலும் சமூக மனோபாவத்திலும் நிலைக்கப்போகும் விதம் குறித்து நாம் ஒரு கருத்துக்கு வரவேண்டும். கல்வியில் சம உரிமை என்றால் என்ன என்பது குறித்து நாம் மேலே குறிப்பிட்டிருப்பதைப் போன்று வேறுபாடில்லாமல் கல்வி பெற்றுக் கொள்ளும் உரிமை அனைத்து மக்களுக்கும் கிடைக்கக்கூடிய நிலையாகும். ஒருவர் தாழ்ந்த குலத்தைச் சார்ந்தவர் என்பதால் ( இலங்கை மற்றும் இந்தியாவின் வரலாற்றில்) கல்வி கிடைக்காமலிருந்தால் அது சம உரிமையை மறுப்பதாகும். ஒருவர் பெண்(ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில்) என்ற காரணத்தால் கல்வி கிடைக்காமலிருந்தால் அது சம உரிமையை மறுப்பதாகும். இலங்கையில் இருப்பவர், இல்லாதவர் என்ற ஏற்றத் தாழ்வின் காரணத்தினால் கல்வி ஓரளவு மறுக்கப்பட்டிருக்கிறது. ஏழைகளுக்கு ( ஒடுக்கப்பட்ட மக்களுக்கு) கல்வி மறுக்கப்படுவது எமக்கு முன்னால் உள்ள சவாலாகும். தனியார் பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டால் பணம் படைத்தோரும் பணம் இல்லாதோரும் இருவிதமாக கவனிக்கப்படுவார்கள்." கல்வியில் சம உரிமையை பெற்றுக் கொடு" என்பது இதற்காக எடுத்துக் கொள்ளக்கூடிய விரிவான கோஷமாகும்.

அடுத்ததாக சுதந்திர கல்வி என்பதன் கருத்து என்னவென்று பார்ப்போம். சுதந்திர கல்வி என்பது 1948ல் கொண்டுவரப்பட்ட கல்வி சட்டமூலத்தின் மூலம் குறிப்பிடப்பட்ட பெயராகும். அந்த சட்டமூலத்தின் ஊடாக கல்விச் சாலைகளில் சேருவதற்கான வசதிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைத்தது. கல்வி வரப்பிரசாதமாக இருந்த நிலை மாறியது. 1960ல் கல்வி கட்டளைச் சட்டமூலத்தின் ஊடாக தனியார் பாடசாலைகள் அரசுடைமையாக்கப்பட்டன. ஆதலால், சுதந்திர கல்வி குறித்து இறுதியான பகுப்பாய்வொன்று நடக்காவிட்டாலும் கல்விக்கு அரசாங்கமே பொறுப்பு, எந்த வகையிலும் தனியார் துறைக்கு இடமளிக்கக் கூடாது என்ற கருத்து சமூகத்தில் நிலைகொண்டிருக்கிறது.

' அரச கல்வியை பாதுகாப்போம்" என்று சொல்வதன் கருத்து என்ன? அதன் கருத்து அரசாங்கத்தினால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களை அழித்து விடாதே, என்பதாகும். அவற்றை பாதுகாத்திடு என்பதாகும். இங்கு எழக்கூடிய முக்கிய பிரச்சினை என்னவென்றால், கல்வியின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து சவால்களையும் இந்த கோஷத்தால் மறைக்க முடியாது. உதாரணமாக நாம் போராட வேண்டியது ஏழு தலைகளைக் கொண்ட ஒரு மிருகத்தோடுதான் என்றால் அவற்றிலிருந்த்து தேர்ந்தெடுத்த ஒரு தலையோடு மோதுவதற்கு இது சமமாகும். அதன் விளைவு என்னவாகுமென்றால் நாம் தெரிவு செய்த தலையோடு மோதும்போது மற்ற தலைகளில் ஒன்றுக்கு நாம் பலியாக நேரிடும்.

கல்வியை நாசமாக்குவதற்காக தற்போதைய ஆட்சியாளரிடமுள்ள அனுகு முறை எத்தகையது? அரசாங்க கல்விக்கு ஒதுக்கப்படும் பணம் வெட்டப்படுதல், அரசாங்க கல்வியை பலவீனப்படுத்துதல், அது குறித்து மக்களது நம்பிக்கை சிதைந்துவிடுதல், தனியார் கல்வி நிறுனங்களை ஆரம்பித்தல், அதற்காக சட்டரீதியான நிலைமைகளை தயாரித்துக் கொடுத்தல், அரச கல்வி நிறுவனங்களில் பணம் சம்பாதிக்கும் பாடவிதானங்களை ஆரம்பித்தல், அந்த பாடவிதானங்களிலிருந்து பெறப்படும் பணத்தைக் கொண்டு தனியார் கல்வி நிறுவனங்களை நடாத்துவதற்கு வற்புறத்தல் அல்லது அதனோடு தொடர்புடைய பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு அந்த நிறுவனங்களை நடத்திச் செல்லும் சுமையை ஒப்படைத்தல், அரசாங்கம் கல்விப் பொறுப்பிலிருந்து விலகுதல் மற்றும் அதனை எதிர்க்கும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் அடக்குமுறை செய்தல் பேன்றவையாகும். வீட்டுக்குள் திருடன் நுழையப்போவது தெரிந்தால் வீட்டின் முன் கதவை மட்டும் மூடிவிடுவது முட்டாள்தனமாகும். கல்வி தொடர்ப்பான நெருக்கடியை,  தேர்ந்தெடுத்த பலவீனமான கோஷங்களுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்துவது தவறாகும். அதனூடாக ஆபத்த நுழையக்கூடிய ஏனைய கதவுகளைப் பற்றிய கவனம் வேறுபக்கம் திரும்பிவிடும்.

இன்னொரு விதமாகவும் இந்த கோஷங்களை பார்க்க முடியும். " அரசாங்க கல்வியை பாதுகாப்போம்" இதன் நேரிடையான கருத்து என்ன? அரசாங்க பல்கலைக் கழகங்களை பாதுகாக்க வற்புறுத்துவதாகும். தனியார் பல்கலைக் கழகங்கள் குறித்து அதன் மூலம் எதுவுமே குறிப்பிடப்படாது. ஓருவேளை மீண்டும் தனியார்பல்கலைக் கழக சட்டமூலம் கொண்டு வரப்பட்டால் நிலைமை என்னவாகும்? அரசாங்கம் பல்கலைக் கழகங்களுக்குள் பாடவிதானங்களை விற்பது குறித்து நிலைமை என்னவாகும்? அந்தக் கேள்வி இன்று எழாவிட்டாலும் சுதந்திர கல்வியை பாதுகாக்கப் போராடும் அனைவருக்கும் ஒரு நாள் எழக்கூடும். இது குறித்து சிந்தித்துப் பார்க்குமாறு நாம் விரிவுரையாளார் சங்கத்திடம் கேட்டுக் கொள்கிறோம்.

போராட்டக் கோஷத்தை நீக்கச் செய்வது போராட்டத்திற்கு இலகுவான வழியாகும். ஆனால் அதனை எல்லைக்கு வெளியாக நீக்கச் செய்யும்போது அதனை ஆரம்பத்தில் உள்ளடக்கப்பட்ட கோஷத்திற்குள் மீண்டும் கொண்டு வர முடியாதவாறு அழிந்து போகும் ' ஏகாதிபத்திய எதிர்ப்பு கோஷசத்தை"  ' புலிகளைக் கொல்வோம்" என பலவீனப்படுத்தியதால் செய்த அரசியல் தவறுக்கு இலங்கை சமூகம் இன்றும்கூட இழப்பீடு செலுத்தி வருகிறது.

இந்த போராட்டத்தில் ஐ.தே.க. யையும் சம்பந்தப்படுத்திக் கொள்வதற்கு உறுதியாகவோ உறுதி இல்லாமலோ விரிவுரையாளர்சங்கம் எடுத்த முடிவு பாரதூரமானதாகும். நாம் நன்றாகவே அறிந்த வகையில் ஐ.தே.க. யினதும் சுதந்திரக் கட்சியினதும் அரசியல் கொள்கையில் மாற்றம் கிடையாது. இந்த இரு கட்சிகளும் கல்வி விடயத்தில் ஒரே கருத்தைக் கொண்டுள்ளன. அதிகாரம் கைநழுவிச் சென்ற பின்னர் பசுத்தோல் போர்த்திக் கொள்வதை கைக் குழந்தை அல்லாத அனைவருக்குமே தெரியும். அப்போது அவர்கள் எந்தவொரு கோஷத்திற்கும் தயாராகவே இருப்பார்கள். ஆனால், அதன் பின்னணியில் இருப்பது அவர்களது அதிகாரத் தேவை. விரிவுரையாளர் சங்கம் இதுவரை வந்த பயணத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் புரிந்துணர்வோடு செயல்பட்டது எங்களுக்குத் தெரியும். என்றாலும், அடுத்த கட்டத்தில் (நடை பயணத்திற்கு) ஐ.தே.க.வை இணைத்துக் கொள்வதற்கு உறுதியாகவோ உறுதியில்லாமலோ தீர்மானமெடுப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அது குறித்து எச்சரிக்கையை உயர்வாக சுட்டிக்காட்ட முயற்சிக்கறோம். என்றாலும் அவர்கள் எதிர்கொண்டுள்ள  தொழில் போராட்டதின் கடுமையினால் அவர்கள் இவ்வாறான முடிவுக்கு வந்தார்களா என்பது தெரியாது. ஆனால் இந்தச் செயற்பாடு குறித்து எதிர்காலத்தில் ஒருநாள் கேட்கப்படும் என்பதையும், அது பிரச்சினைக்குரியது எனவும் அதனை திருத்த முடியாது எனவும் நாம் தெளிவாக சுட்டிக் காட்டுகிறோம். கல்வி நெருக்கடிக்கு அடிப்படையான அரசியல் வாதிகளின் 4தேவைகள் எங்களுக்குத் தெரியும்.

01.கல்வியின் பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகிக்  கொள்ளல்

02.கல்வியை விற்பனைப் பொருளாக மாற்றுதல்

03.கல்வி உரிமை என்பதை விட அதனை ஒரு வரப்பிரசாதமாக தரம் தாழ்த்தல்

04.கல்வியிலிருந்து மாணவர்கள். விரிவுரையாளர்கள், ஆசிரியர்களை வெளியேற்றுதல்(கல்வியை இல்லாமாக்கல் மற்றும் கல்வியை வர்த்தக சந்தைக்கு ஏற்றவாறு தயாரித்தல் கல்வியை மனிதத் தேவையிலிருந்து ஒதுக்கி வைத்தல்)

கல்விக்காக ஒதுக்கப்படும் பணம் வெட்டப்படுவதும், பாடசாலை அபிவிருத்திச் சபைகளை ஆரம்பிப்பதும், பல்கலைக் கழகங்களுக்குள் பாடவிதானங்களை விற்பதற்கு ஆலோசிப்பதும், பாடசாலைகளில் கட்டணங்கள் அறவிடப்படுவதும் மேற்கண்ட தேவைகளுக்காகத்தான். தனியார் பல்கலைக் கழகங்களின் ஊடாக கல்வியை வர்த்தகப் பொருளாக்குவதற்கும், இலாபம் பெறக்கூடிய நிலைக்கு கொண்டுவருவதற்கும் அதில் தலையிடும் மக்களை இலாப நோக்கத்தின் அடிப்படையில் பார்ப்பதற்கும் பயிற்றுவிக்கப்படுகிறது.

இந்த இரு விடயங்கள் நடக்கும்போது  கல்வி ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுவதை தவிர்க்க முடியாது போய்விடும். நாட்டில் வாழும் ஏழை மக்களின் பிள்ளைகள் மருத்துவத்துறைக்கும் பொறியியல துறைக்கும் நுழைவது குறைந்துள்ளது. பாடசாலைக்கு செல்ல வேண்டிய பிள்ளைகளில் 15வீதம் பாடசாலைக்கு செல்வதில்லை.

நான்காவது விடயம்  இதற்கு முன்னர் கருத்தாடல் செய்யப்பட்டிருக்கவில்லை. கல்வியிலிருந்து மாணவர்கள் விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டிருப்பதை எமது அன்றாட ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. பிள்ளைகள் விருப்பமில்லாமலேயே கல்வி கற்கின்றனர். அவர்க்கு கல்வி ஒரு தலைவலி.  அறிவை சிலர்வெறுக்கின்றனர். சிலருக்கு அதன் மீது கோபம். படிப்பிக்கும் பல பாடங்கள் அவர்களுக்கு சம்பந்தமில்லாத ஒன்று. இல்லாவிட்டால் தேவையானவாறு படிப்பிப்பதில்லை. அவர்களுக்கு தேவைப்படுவதெல்லாம் சான்றுப் பத்திரம் மட்டுமே. தொழிலுக்காக சான்றுப் பத்திரம் தேவைப்படுகிறது. ஆசிரியர்களுக்கு, விரிவுரையாளர்களுக்கு ஆராய்ச்சிக்குப் போதுமான கால அவகாசம் கிடையாது. அவர்களுக்கு கிடைக்கும் சம்பளம் போதாமையால் வருமானம் தேடுவதற்காக அவர்கள் வேறு வழிகளைத் தேடுகின்றனர். தற்போதைய கல்வி முறையினால் பிள்ளைகளின் வாழ்வு பறிக்கப்பட்டுள்ளது. அவர்களது குழந்தைப் பருவம், விளையாட்டு, பொழுது போக்கு நண்பர்களோடு உறவாடுவது போன்ற அனைத்தும் இடையூறு செய்யப்பட்டிருக்கின்றன. பல்கலைக் கழத்தில் விளையாட்டு கலை அரசியல் மற்றும் காதலிப்பதறகான் நேரம் கூட இல்லாமலாக்கப்பட்டுள்ளது. கல்வியினதும் அறிவினதும் கேந்திர நிலையமாக இருப்பதற்குப் பதிலாக, விரக்தியினதும் ஏமாற்றத்தினதும் கேந்திர நிலையமாக ஆக்கப்பட்டுள்ளது. கிளிப் பிள்ளையைப் போன்று பாடமாக்கும், தினந்தோரும் பரீட்சை எழுதும், கஷ்டமான, கசப்பான வாழ்க்கையை நடத்தும்  நற்சான்றுப் பத்திரங்களை சேகரிப்பவர்களின் சொர்க்கபுரியாக கல்விக்கூடங்கள் இன்று மாறியுள்ளன. கல்விக் கூடங்களில் உண்மையிலேயே கல்விமட்டும் இல்லாமலாகிக் கொண்டிருக்கிறது.

இவற்றுக்குப் பொறுப்பு கூற வேண்டியவர்கள் ஆட்சியாளர்களே! அவர்களுக்கு இலாபம் தேடுவதற்காகவே கல்வி தேவைப்படுகிறது. அரசியல் மேடைகளில் அமர வைப்பதற்காகவும், பத்திரிகை விளம்பரங்களில் ஒப்பமிடுவதற்காகவுமே, பேராசியர்கள் தேவைப்படுகிறார்கள். அதைத் தவிர விரிவான பார்வையொன்று அவர்களுக்கு இல்லை. சுதந்திரக் கல்வியை பரவலான அடிப்படையில் சமூகமயப்படுத்தினால் மாத்திரமே கல்வியின் உண்மையான விடுதலை மற்றும் அதனோடு தொடர்ப்புடைய மக்களின் உண்மையான விடுதலையும் கிடைக்கும்.அதற்குத் தேவையான கருத்தாடலுக்கு நாம் தயாராகவே உள்ளோம்.விரிவுரையாளர்களின் போராட்டத்திற்கு எமது அரசியல் நிலைப்பாட்டிலிருந்து விலகாமல் எங்களது ஒத்துழைப்பு நிச்சயமாக கிடைக்கும் என்பதை குறிப்படுகின்றோம்.

சஞ்சீவ பண்டார

அழைப்பாளர்

அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம்.

2012-09-19 

-http://www.lankaviews.com/ta