Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி - அடிப்படைத் திட்டம்

இது, புதிய ஜனநாயக (ஜனநாயக) புரட்சியை நிறைவு செய்வதாற்கான திட்டமாகவும். இது புரட்சிக்குப் பிந்திய பாட்டாளி வர்க்கப் புரட்சியை முன்னெடுப்பதற்கான குறைந்த பட்சத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் அடிப்படையில் விரிவுபடுத்தப்பட்ட அரசியல் அறிக்கை - போராட்ட தந்திரத்தை, தனது அரசியல் வழிகாட்டலாகக் கொண்டே முன்னணி இயங்கும். இது ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மக்களின் ஒரு முன்னணியாக, இந்த புதிய ஜனநாயக மக்கள் முன்னணி இயங்கும்.

புதிய ஜனநாயகப் புரட்சிக்கான இத்திட்டம், அதிக பட்சம் புதிய ஜனநாயகப் (ஜனநாயக) புரட்சியை நிறைவு செய்வதை நோக்கமாகக் கொண்டது. இந்த வகையில், மார்க்சிய   லெனினிய மாவோசிய சிந்தைனையின் அடிப்படையை, இது தன் வழிகாட்டியாகக் கொண்ட ஒரு தலைமையின் கீழ், கட்டப்படும் முன்னணியாகும். இந்த முன்னணி மேலிருந்து கட்டப்படுவதல்ல, கீழிருந்து கட்டப்படுவதாகும். புரட்சியின் முதல் கட்டத்தை நிறைவு செய்யும் வண்ணம், மார்க்சிய லெனினிய மாவோசிய சிந்தைனை வழிகாட்டலின் கீழ், பல்வேறு வர்க்கங்களையும், பல்வேறு சமூகப் பிரிவுகளை அணிதிரட்டும் ஒரு கட்சியின் (மார்க்சிய லெனினிய மாவோசிய சிந்தைனை) கீழான முன்னணி அமைப்பாகும்.   
 
இந்த வகையில், மக்களுக்கு எதிரான அனைத்து விதமான ஒடுக்கு முறைகளுக்கும் எதிராக செயல் பூர்வமான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதுடன், இந்தப் போராட்டத்துக்கு முன்னணிப் படையாக தலைமை தாங்கி, அதை முன்னெடுத்துச் செல்லும். சமூகத்தின் ஏற்றத் தாழ்வான அனைத்து சமூகப் படிநிலைகளிலும் காணப்படுகின்ற ஒடுக்கப்பட்ட மக்களையும், ஒடுக்கப்பட்ட வர்க்கங்களையும் சார்ந்து, அவர்களது சொந்த விடுதலைக்கான பாதையில், அவர்களை முன்னணி அணிதிரட்டும். அத்துடன் சுரண்டல் அமைப்புக்கு எதிராகவும், இன, மத, சாதி, பால், பிரதேச... ரீதியான சகல சமூக ஒடுக்கு முறைகளில் இருந்து மக்கள் விடுதலையடையும் வண்ணம், மக்களைக் கிளர்ந்தெழுந்து போராடுமாறு, முன்னணியின் இத்திட்டமூலம் அறைகூவல் விடுக்கின்றது.
 
1. புதிய ஜனநாயக மக்கள் முன்னணி அமைப்பின், வர்க்க அடிப்படை மற்றும் அதன்   அரசியல் அடிப்படை  
 
•இது, மார்க்சிய லெனினிய மாவோசிய சிந்தைனைக்கும், அதன் வழிகாட்டலுக்கும் உட்பட்ட, அதனைத் தனது அரசியல் தலைமையாக ஏற்றுக் கொண்ட முன்னணி அமைப்பாகும்.


• இது, புதிய ஜனநாயகப் புரட்சியை, அதாவது ஜனநாயகப் புரட்சியைக் கோருகின்ற தேசிய முதலாளிகள் வரை, மார்க்சிய லெனினிய மாவோயிச சிந்தைனையின் கீழ் அணிதிரட்டும் வண்ணம், கீழிருந்து கட்டப்படும் முன்னணி தான் புதிய ஜனநாயக மக்கள் முன்னணியாகும்.
 
2. இலங்கையில் காணப்படும் பிரதானமான சுரண்டல் வடிவங்கள்
 
•இலங்கை மக்களின் உழைப்பு, நேரடியாக உள்நாட்டு ஆளும் வர்க்கங்களால் சுரண்டப்     படுகின்றது.
 
•நாட்டினது தேசிய வளங்களும், உழைப்புச் சக்தியும் அந்நிய சக்திகளால் நேரடியாகவும்,     மறைமுகமாகவும் சுரண்டப்படுகின்றது.


•இலங்கையின் ஆளும் வர்க்கத்தினால், திட்டமிட்ட வகையில் தேசிய வளங்கள் அந்நிய சக்திகளுக்கு தாரை வார்க்கப்படுகின்றது.


•இலங்கைப் பல்தேசியக் கம்பனிகளுக்கும், நிதி மூலதனத்துக்கும் திறந்துவிடப்பட்டுள்ளது. இதில் மலிவான உழைப்பு, நிலங்கள், மூலவளங்கள், நிதி வளங்கள், மனித உழைப்பில் உருவான தேசிய சொத்துகள் அனைத்தும், சுரண்டுவதற்காக தாரை வார்க்கப்படுகின்றது. நிதி மூலதனம், இலங்கையின் தேசிய வருமானத்தை பாரியளவில் வட்டியாகவும், முதலாகவும் சுரண்டும் தேசிய உறுப்பாகிவிட்டது.


•தேசத்தின் கலாச்சாரங்கள் பாரம்பரியங்கள், உழைப்பின் ஆற்றல், உழைப்பின் நுட்பத்திறன், பாரம்பரிய அறிவு, மனித ஆற்றல்.., என அனைத்தும் அன்னிய சக்திகளின் சுரண்டல் நலன்களுக்குள்ளும், தலையீடுகளுக்குள்ளும் சிக்கி அழிவுக்குள்ளாகின்றது.


•மனித உரிமைகளை காலில் மிதிக்கும் வகையில், உழைப்பை கேள்விக்கு இடமின்றி சுரண்டும் வண்ணமும் சட்டங்களும், தீர்மானங்களும் தொடர்ச்சியாக நிறைவேற்றுப்படுவதன் மூலம், உழைக்கும் மக்களின் உரிமைகள் நாள்தோறும் தொடர்ந்து பறிக்கப்படுகின்றது.
 
3. சமூக ரீதியாக காணப்படும் ஒடுக்குமுறையின் பிரதானமான வடிவங்கள்
 
•இனரீதியான ஒடுக்குமுறைகளும், சுரண்டலும்.


•பாலியல் ரீதியான ஒடுக்குமுறைகளும், சுரண்டலும்.


•சாதிய ரீதியான ஒடுக்குமுறைகளும், சுரண்டலும்.


•மதரீதியான ஒடுக்குமுறைகளும், சுரண்டலும்.


•பிரதேச ரீதியான ஒடுக்குமுறைகளும், சுரண்டலும்.


•பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு பழக்க வழக்கங்கள் மூலமான ஒடுக்குமுறைகளும், சுரண்டலும்.
 
4.இலங்கையையும், இலங்கை அரசையும் வரையறுத்தல்
 
•இலங்கை அரசு ஒரு நிலப்பிரபுத்துவ பண்பாட்டு எச்சசொச்சங்களைக் கொண்ட, நவ காலனிய தரகு முதலாளித்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.


•இலங்கை அரசு ஏகாதிபத்தியங்களின் உலகமயமாதல் பொருளாதாரத்துக்கு உட்பட்ட, ஏகாதிபத்தியங்களின் நேரடி ஆளுமைகளுக்கும் அதன் நிகழ்ச்சி நிரலுக்கும் உட்பட்ட ஒரு நாடு.


•இலங்கை அரசு கைக்கொள்ளும் ஆட்சிமுறைமை பாசிசமாகும். அது தனது பாசிசத்தை மூடிமறைத்துக் கொள்வதற்கும், அது புலப்படாதிருக்கும் வண்ணமும், மக்களின் போராட்டங்கள் தணிந்து போகும் வண்ணமும், நாடாளுமன்ற 'ஜனநாயகத்தை" முன் நிறுத்துகின்றது.


•இலங்கை அரசு, சிங்களப் பேரினவாதத்தையும், பௌத்தமத அடிப்படைவாதத்தையும் அடிப்படையாகக் கொண்டு, மக்களை சுரண்டுகின்றது.


•இலங்கைப் பேரினவாத அரசு, இன மத அடிப்படையில் மக்களைப் பிரித்து, அவர்களை மோதவிட்டு பலவீனப்படுத்துவதன் மூலம், தனது ஒடுக்குமுறை ஆட்சியைத் தக்கவைத்து     கொள்கின்றது.


•அன்னிய மூலதனம் மற்றும் தரகு முதலாளித்துவத்தைச் சார்ந்து, இலங்கைத் தேசியக் கூறுகளைத் தொடர்ந்து அழிக்கின்றது. இந்த வகையில், தேசிய முதலாளித்துவ உற்பத்திகளையும், உழைத்து வாழும் மக்களின் தேசியக் கூறுகளையும் திட்டமிட்டு அழிக்கின்றது.
 
5. மக்களுக்கு எதிரான உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளை இனங்காணல்
 
•இலங்கை அரசு, உழைக்கும் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை, அவர்கள் மேல் நேரடியாக பிரயோகிக்கும் ஆட்சி அதிகாரமுடைய அரசு. இது இலங்கை மக்களைச் சுரண்டும் வர்க்கத்தைப் பிரநிதித்துவப்படுத்தும் ஒடுக்குமுறை அலகாகும்.


•இலங்கை அரசும், அதிகார வர்க்கமும் தரகு முதலாளித்துவத்தையும், அன்னிய மூலதனத்தையும், நிதி மூலதனத்தையும் சார்ந்து, மக்களை ஒடுக்கும் சட்ட அதிகாரம் கொண்ட பாசிச உறுப்பாகும்.  

                                                 
•ஏகாதிபத்திய சக்திகளும், பிராந்திய சக்திகளும் இலங்கையை சுரண்டவும், சூறையாடவும் வழிகாட்டும் ர்க்க உறுப்பாக இலங்கை அரசு செயற்படுகின்றது.


•பிராந்திய மற்றும் சர்வதேச செல்வாக்கு மண்டலங்களுள், இலங்கையை அடிமைப்படுத்தும் வண்ணம், இலங்கை அரசு அவர்களுக்கு துணை புரிகின்றது.


•பிராந்திய மேலாதிக்க அரசுகளான இந்தியாவும் சீனாவும், இலங்கையில் பொருளாதார     அரசியல் மேலாதிக்கத்துடன் தலையிடுகின்றன. இவை இலங்கை மக்களின் விடுதலைப் போராட்டங்களுக்கு எதிராக, பிரதான எதிர்ப்புரட்சிப் பாத்திரத்தை தொடர்ந்து வகிக்கின்றன.
 
6. ஒடுக்குமுறை வடிவங்களை இனங்காணல்
 
• பௌத்த சிங்கள பேரினவாத ஆட்சி மூலம், இலங்கையின் ஏனைய சிறுபான்மை இனங்கள் ஒடுக்கப்பட்டுச் சுரண்டப்படுகின்றனர்.


•சிறுபான்மை இனங்களை பிளந்தும், பிரித்தும், அவர்களுக்குள் மோதவிடுவதன் மூலம் சிங்களப் பேரினவாதம் முன்னிலைப் படுத்தப்படுகின்றது.


•ஜனநாயகம் என்ற போலியான தனது போர்வைக்குள் இருந்தபடி, தனது பாசிச நடவடிக்கைகளை மூடி மறைத்தபடி, அதை மக்கள் மேல் திட்டமிட்ட ஏவுகின்றது.


•ஒட்டுமொத்த இலங்கை மக்களைச் சுரண்டும் வண்ணம், இனவாதம் மதவாதத்தினை     முன்னிலைப் படுத்தப்படுகின்றது.
 
7.இலங்கையின் பிரதான முரண்பாடும் அரசியல் விளைவுகளும்
 
•இலங்கையின் பிரதான முரண்பாடு இனவொடுக்கு முறையாகும்.


இனரீதியான - இனங்களுக்கிடையிலான முரண்பாடாக இது உள்ளது. இது இன்று இரண்டாம் நிலைக்குப் பின்தள்ளப்பட்டு, வர்க்க முரண்பாடு யுத்தத்தின் பின் முதன்மை முரண்பாடாக மாறும் அரசியல் சூழலை தடுக்கும் வண்ணம் அரசு செயற்படுகின்றது. இந்த வகையில் தொடர்ந்து பேரினவாதத்தையும், மத முரண்பாட்டையும் ஆழமாக்கிக் கூர்மை ஆக்கி வருகின்றது. இன முரண்பாட்டை அடக்கியொடுக்கக் கையாண்ட பாசிச வழி முறைகள் யாவும், இன்று இனமத வேறுபாடுகள் கடந்து அனைத்து சுரண்டப்படும் வர்க்கங்களின் மேலான பாசிசமாக மாறியுள்ளது.


•யுத்தமும், யுத்தத்தின் பின்னான சூழலும், இலங்கையில் அதிகரித்த அந்நிய சக்திகளின் தலையீட்டுக்கு வழிவகுத்துள்ளது. இதனால் அன்னிய சக்திகளின் உலகளாவிய நலன்களும், உள்நாட்டு வளங்கள் மீதான சுரண்டலும், மக்கள் வாழ்வாதரங்கள் மீதான சுரண்டலும் அதிகரித்திருக்கின்றது. மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றது. இது சமூகத்தில் கூர்மைபெற்ற ஒரு பாரிய ஜனநாயகப் பிரச்சினையாக மாறி உள்ளது. மக்களின் உரிமைகள் தொடர்ச்சியாக மறுக்கப்படுவதால், அது இயல்பாகவே அவர்களின் தன்னெழுச்சியான போராட்டங்களுக்கு அவர்களை இட்டுச் செல்லுகின்றது.


•இலங்கையின் வடக்கு கிழக்கு, சிறுபான்மை இன மக்களின் பாரம்பரிய பிரதேசமாகும். தமிழ் மக்கள் ஒரு இனம் என்ற அடிப்படையில், அவர்கள் சுயநிர்ணய உரிமையை கொண்டவர்கள்.


•இலங்கையின் அனைத்து சிறுபான்மை இனங்களின் தனித்துவத்தை அங்கீகரித்து, சுயநிர்ணய உரிமை அடைப்படையில், அவர்களிற்கு தீர்வு காணவேண்டும்.


•இலங்கையின் இனரீதியான பிரதான முரண்பாட்டால், அடிப்படையான முரண்பாடான வர்க்க முரண்பாடு மறைந்துவிடவில்லை. அது இரண்டாம் நிலைக்கு  பின்தள்ளப்பட்ட போதும், இன ரீதியான பிரதான முரண்பாட்டுக்குள்ளும் -வெளியிலும் அது தொடர்ந்து  இயங்குகின்றது.
 
8.எமது எதிரிகளையும், நண்பர்களையும் வகைப்படுத்தல்.
 
•தரகு முதலாளித்துவ வர்க்கமும், நவகாலனித்துவ சக்திகளும் எமது மக்களின் முதன்மை எதிரிகள்.


•ஏகாதிபத்தியமும், பிராந்திய வல்லாதிக்க சக்திகளும் எமது மக்களின் முதன்மை எதிரிகள்.


• மூலதனமும், நிதி மூலதனமும் மக்களை சுரண்டும் கருவிகள்.
 
•நிலப்பிரபுத்துவ பண்பாடுகளும், கலாச்சாரங்களும் உழைக்கும் மக்களின் வாழ்வுக்கும், ஐனநாயகத்துக்கு விரோதமானவையாக நீடிக்கின்றது.


•தொழிலாளர் வர்க்கத் தலைமையில், விவசாயிகள் உள்ளிட்ட தேசிய முதலாளிகள் வரையான அனைத்து ஒடுக்கப்படும் வர்க்கங்களும், சமூகப் பிரிவுகளும் எமது போராட்டச் சக்திகளாவர்.


•உலக மக்கள் எமது நண்பர்கள். அவர்களை ஆளும் வர்க்கங்கள் அவர்களின் எதிரி மட்டுமல்ல, எமது எதிரியுமாவர்.


• உலகப் புரட்சிகர சக்திகள், எமது கூட்டாளிகள்.
 
இத் திட்டமானது, அரசியல் அறிக்கையாயும், போராட்டத் தந்திரோபாயத்தையும் அடிப்படையாகக் கொண்டது.

21-23/09/2012