Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

"கபிலவஸ்து" பார்வைக்கு இருக்கையில் மிருகபலி வேண்டாமாம்! மனிதபலிதான் வேண்டுமாம்!

இப்போ புத்த-மகிந்த சிந்தனைக்கு, மனிதப்பலியை விட மிருக பலிதான், கருணையுள்ளம் கொண்ட மிகப்பெரிய ஜீவகாருண்ணியமாக சகஜீவனம் பெற்றுள்ளது. கபிலவஸ்து இருக்கையில் மிருகபலி வேண்டாமாம். அப்போ இலங்கையில் உள்ள கசாப்புக்கடைகள் யாவும் கபிலவஸ்துவிற்காக மூடப்பட்டுள்ளனவா?

 மேவின்ட் சில்வா, உட்பட ஜனாதிபதியின் குடும்ப ஆட்சியில் உள்ள மந்திரி பிரதானிகள் முதலான மகிந்த சிந்தனையாளர்கள் எல்லாம் "வித்தவுட்" மாமிசபட்சனிகளா?

முள்ளிவாய்க்காலில், இந்நூற்றாண்டின் மிகப்பெரிய மனித வேள்வியை செய்தவர் தான், கருணையுள்ளம் கொண்ட எங்கள் "கபிலவஸ்து மகிந்தர்"! இதைவிட கபிலவஸ்து வந்தபின், தமிழ் கைதியான சுந்தரம் சதீஸ் எனும் தமழ் இளைஞன், உங்கள் "மனிதப் பலியாளர்களர்களின்" பலிச்செயல்களால் மருத்துவமனையில் மரணப்படுக்கையில் உள்ளார்.

சுந்தரம் சதீஸிற்கு மூளையில் இரத்த ஒழுக்கு ஏற்பட்டு மூளைத் தொழிற்பாடு சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது!

மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல்க் கைதி சுந்தரம் சதீஸ் வழக்கு ஒன்றிற்காக காலி நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டு வழக்குத்தவணையின் பின் திடீர் என காலி கராப்பிடிய வைத்தியசாலையில் சுயநினைவற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டு,  கொழும்பு பெரிய வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டார். இம்மாற்றம் கூடஜனநாயக மக்கள் முன்ணணித் தலைவர் மனோகணேசனின் முயற்சியாலேயே நடைபெற்றது.

மாற்றத்தின்பின் மருததுவமனைக்கு  மனைவி  சென்று பார்த்தபோது அவர் தலையில் பாரிய கட்டுப்போடப்பட்டுள்ளதுடன், கண் விழித்திருந்தாலும் வருபவர்களை அடையாளம் காணமுடியாத சூழ்நிலையிலும் அவரின் கால் சங்கிலியால் கட்டிலுடன் இணைக்கப்பட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. கடமையில் இருந்த டாக்டருடன் தொடர்பு கொண்டு விபரம் கேட்டபோது மூளையில் இரத்த ஒழுக்கு ஏற்பட்டு அதிகூடிய இரத்த அழுத்தம் காரணமாகவும் மூளைத்தொழிற்பாடு சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கண்விழித்திருந்தாலும் கூட மற்றவர்களை அடையாளம் காணமுடியாத சூழ்நிலை காணப்படுவதாக தெரிவித்தார்.


இப்பலிச்செயலை மகிந்த சிந்தனையின் "கபிலவஸ்து" அகராதியில் எப்படிக் கணிக்கலாம்? புத்தர் எப் படுகொலைகளையும் ஏற்றுக்கொண்டவர் அல்ல. இரு அதிகார வெறிகளுக்கிடையில் நடைபெறப்போகும் யுத்த வேள்வியில் ஒரு பக்கம் நிற்க வேண்டுமென்ற வேண்டுகோளை நிராகரித்தே, அவர் துறவறம் பூண்டதான வரலாறும் உண்டு. இப்போ அவரின் "கபிலவஸ்தில" மகிந்தாவிற்கு மிருகவதை வேண்டாமாம். இது பகுத்தறிவு கொண்டு பார்க்கப்பட வேண்டியதொரு விடயம்.


இன்றைய 21-ம் நூற்றாண்டின் விஞ்ஞான காலத்தில் மிருக-வேள்வியென்பது, மூடநம்பிக்கையின் பாற்பட்டதே. அதைவிட மூடநம்பிக்கை, கபிலவஸ்து காட்சிக்கு இருக்கும், காலத்தில் மிருகபலி வேண்டாமென்பது, அடிப்படையில் ஆழ்ந்து சிந்தித்தால், இவ்வாதங்கள் மூடநம்பிக்கையெனும் நாணயத்தின் இருபக்கங்கள் ஆகும். இதில் மகிந்த-மேவின்ட் சில்வா கோரிக்கை, அதிகாரத்தின் மூடம் கொண்ட போக்காகும்.

-அகிலன் 30/8/2012