Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

இன உறவுகள் பற்றி…..

இன உணர்வு -- இனவாதம் -- இனவெறி

இலங்கையின் இன்றைய அரசியலின் முக்கிய அம்சம் இன உறவுகள் தொடர்பான
பிரச்சினையே. நாட்டின் பயங்கரமான பொருளாதார நெருக்கடியானது கடன், தங்குதடையற்ற இறக்குமதிகள், உற்பத்திக்கு உறவில்லாத வேலை வாய்ப்புக்கள், அயல்நாட்டு சம்பாத்தியம் போன்றவற்றால் பூசிமெழுகப்பட்டு, ஏகப் பெரும்பான்மையான மக்கள் உணராதவாறு மறைக்கப்பட்டு வந்துள்ளது.

நாட்டின் ஜனநாயக அரசுமுறையும் உரிமைகளும் சிதைக்கப்பட்டுள்ளன. இவை ஏதோ சம்பந்தா சம்பந்தம் இல்லாத நிகழ்வுகளாக, தற்செயலான நிர்ப்பந்தங்களாக அரசியலில் காணப்படுகின்றன. இனப்பிரச்சினையின் தீர்விற்கு அரசாங்கத்தால் வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. மாறாக அதை உக்கிரப்படுததும் முறையிலேயே காரியங்கள் செய்யப்படுகின்றன. அதைச் சாட்டாக வைத்து ஆயதப்படைகளினது அதிகாரமும் அரசாங்க எதேச்சதிகாரமும் அதிகரிக்கப்பட்டுள்ளன.  இனப் பிரச்சினையை தீர்க்கும் நோக்கம் பாராளுமன்ற அரசியல் கட்சிகளுக்கு இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அது போனால் பிழைப்பிற்கு வழி ஏது? சாதி, மதம், இனம், மொழி ஆகியன எல்லாமே பிற்போக்கு அரசியல் பிழைப்பிற்கு அவசியமான பண்டங்கள். எனவே…மக்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகளை பகைமையான முரண்பாடுகள் ஆக்கும் முயற்சிகளை நாம் கண்டிக்கத் தவறினால் அது பிற்போக்கிற்கே உதவி செய்யும். சிங்களப் பேரினவாதமும், தமிழ் இனவாதமும் எந்த வகையிலும் பரந்துபட்ட மக்களின் நலன்கட்கு உகந்தவை அல்ல. ஒரு சமுதாயத்தின் வெவ்வேறு இனங்கள் மத்தியில் மற்ற இனத்தவர்களைப் பற்றிய தவறான எண்ணங்கள் இருப்பது அதிசயம் இல்லை. அவை களையெடுக்கப்படாமல் திட்டமிட்டே வளர்க்கப்படும் போதுதான் அவை இன உறவுகளை அபாயகரமான முறையில் பாதிக்கின்றன.

இலங்கையில் பல காலமாகப் புறக்கணிக்கப்பட்டும், திட்டமிட்டே சீர்குலைக்கப்பட்டும் வந்துள்ள இனஉறவுகள் பற்றிய போக்குகள், இப்போதும் காலம் கடந்தும் விடுபடவில்லை என்பதால் எழுதுவது நல்லதென்றே நினைக்கின்றேன். இன உணர்வு இல்லாமை மட்டும் முற்போக்கு ஆகாது! இன உணர்வு பற்றி யாருமே அதிகம் கூச்சப்படுவதில்லை. சில சமயம் பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடிய விடயமாகவே இன உணர்வு இருந்துள்ளது. என்னளவில் இன உணர்வு என்பது ஆழந்த நோக்கில் அர்த்தமற்ற ஒன்று. ஆயினும் சமுதாயத்தில் இவ்வேறுபாடுகள் உள்ளபோது, அவ்வேறுபாடுகள் வாழ்வின் வெவ்வேறு துறைகளைப் பாதிக்கும்போது, அந்த உணர்வை பெரும்பாலோரால் தவிர்க்க முடிவதில்லை.

இன உணர்வு என்பது ஒரு மனிதனது தன்னடையாளங்களில் ஒன்றாக செயற்படுகின்றது. அது மொழி, மதம், கலாசாரம் போன்ற பல்வேறு வகைகளில் வெளிப்படும் காரணத்தால் அது முற்றாக புறக்கணிக்கக்கூடிய ஒன்றல்ல. மனித சமுதாயமும், மனித சிந்தனையும் மேலும் மேலும் வளர்ச்சி அடையும்போது, இன உணர்வுகள் சற்றே ஒதுங்கி வழிவிடவே செய்யும். ஆயினும் மனிதனை அவன் உள்ளவாறே ஏற்றுக்கொள்ளும் எந்தச் சிந்தனையும் இன உணர்வுகளை மதியாமல் இருக்க முடியாது. இன்றைய சூழ்நிலையில் இன உணர்வு என்பது இயல்பான ஒன்று என்ற அளவில் மதிக்கப்படவேண்டிய ஒன்றாக உள்ளது. இதைக் கடப்பவர்கள் குறுகிய சுயநலனுக்காக கடப்பவர்களாக இருக்கலாம், அல்லது பரந்துபட்ட மனித இன முழுமையினது நலன் நாடுபவர்களாகவும் இருக்கலாம். எனவே இன உணர்வு இல்லாமை என்பது மட்டும் முற்போக்கான ஒன்றாகிவிடாது. அதன் இடத்தில் பரந்துபட்ட மானுட உணர்வு உள்ளதா? அல்லது வெறும் சுயநலமோ சுரண்டும் வர்க்க நலமோ உள்ளதா என்பதையொட்டியே இன உணர்வு இல்லாமையை மதிப்பிட முடியும்.

மனிதர் மத்தியில் இன உணர்வுகள் வேறுபடும் அளவுகளிவ் இருக்கலாம். தன் இனத்தின் நலனை மற்ற இனங்களின் நலன்கட்கு முரணானதாக காணவும், காட்டவும் முனையும்போதும், தன் இனத்தின் இயல்புகளை இன்னொரு இனத்தினதும் மேலான ஒன்றாகக் காட்ட முனையும்போதும் இன உணர்வு இனவாதமாகிறது. இது மற்ற இனங்கள் பற்றிய இழிவான மதிப்பீடு, கலாசார வேறுபாடுகளை ஏற்றத்தாழ்வுகளாகத் தரம் பிரித்தல், பிரச்சினைகளை இனமொன்றின் கண்ணோட்டத்தில் மட்டுமே தனிமைப்படுத்திக் காண முனைதல் போன்று, தன்னை வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத்திக் கொள்கிறது. இன உணர்வு இனவாதமாகும்போது, முரண்பாடுகள் பகமைத்தன்மை பூண ஆரம்பிக்கின்றன. பகைமை உணர்வுகள் வளர்ந்து சகிப்பத் தன்மையின் எல்லை மீறப்படும் போது, இனவாதம் இனவெறியாகின்றது. "நாகரிக" சமுதாயத்திலும் இனவாதம் இல்லையென்றாகிவிடாது!ஒரு சமுதாயம் முன்னேறிய "நாகரிக" சமுதாயம் என்பதால் அங்கே இனவாதமும் இனவெறியும் இல்லை என்றாகாது. ஐக்கிய அமெரிக்காவில் நீக்கிரோக்களுக்கு எதிரான இனவெறி, தென்னாபிரிக்க வெள்ளை இனவெறி, கிட்லரின் ஜெர்மனியில் ஆரியஇனவெறி, ஜாரிஸ ரஸ்யாவில் ரஸ்யப் பேரினவாதம் இவையெல்லாம் பின்தங்கிய சமுதாயங்கட்குரியனவல்ல.

இனவாதமும், இனவெறியும் தொற்று நோய்களைப் போல் பரவுகின்றன. ஒரு இனத்தின் இனவாதமும், இனவெறியும் மற்ற இனங்களிடையே இனவாதத்தையும் இனவெறியையும் தூண்டி வளர்த்து, அதன்மூலம் தம்மையும் வளாத்துக் கொள்கின்றன. மனிதனது பலவீனங்களை சுரண்டும் வாக்கங்கள் எப்போதும் தமக்குச் சாதகமாக பயனபடுத்தி வந்தள்ளன. இன உண்ர்வு இன்றைய சமுதாயத்தின் தனி மனிதனுக்கு ஒரு ஆதாரமாக தோன்றினாலும், அது உண்மையில் அவனுடைய பலவீனமே. அந்த இன உணர்வு கொண்டு மனிதர்களை வேற்றுமைப்படுத்தவும், ஒடுக்கப்பட்வர்களை ஒன்றுபடாமல் தடுக்கவும் பயன்படுத்துவதில் பிற்போக்குச் சக்திகள் மிகவும் கவனம் செலுத்தி வந்துள்ளன. அறியாமையும் தெளிவீனங்களும் இன உணர்வுகளை உக்கிரப்படுத்த உதவும் சாதனங்கள். இனவாதப் பொய்களையும் அரை உண்மைகளையும் நம்பிப் பழகிவிட்ட மனங்களுக்கு உண்மை உடனடியாகப் புலனாகாது. அதற்காக நாம் சோர்ந்துவிட அவசியம் இல்லை.

இனவாதிகளும் இனவெறியர்களும் என்றைக்கும் மக்களை ஏமாற்ற முடியாது. அதற்காக கைகளை கட்டிக்கொண்டு காலம் வரும் என்று காத்திருக்கவும் தேவையில்லை. இனவாதச் சேற்றால், கலங்குண்ட மனங்களை தெளியவைக்கும் கடமை நம்முன் உள்ளது. மற்றவர்களின் இனவாதத்தை இலகுவாக இனம் காணும் நாம், நம்மத்தியிலுள்ள இனவாதத்ததையும் இனம் காணத் தவறக்கூடாது.

இனவாத்ததை ஒழிப்பது என்பது ஒரு பல முனைப் போராட்டம். அதற்கு மற்ற இனத்தவரைப் புரிந்து கொள்ளவும், உள்ளபடியே சக மனிதர்களாக ஏற்றுக்கொள்ளவும் நாம் தயாராக வேண்டும். -இன ஒடுக்கலும் விடுதலைப் போராட்டமும் எனும் நூலிலிருந்து….
--இமயவரம்பன்