Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

கிரேக்க தேசமும் முதலாளித்துவத்தின் அழுத்தமும்...!

கிரேக்க நாட்டின் நிதி நெருக்கடியினை தீர்க்க ஐரோப்பிய ஒன்றியம் 60 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி வழங்க உடன்பட்டுள்ளது. கிரேக்க பராளுமன்றத்தில் 251 வாக்குகளால் ஒப்புதல் பெறப்பட்ட இந்த தீர்வுத் திட்டம் கிரேக்க நாட்டின் சாதாரண மக்களின் வாழ்வுரிமைக்கும், தொழிலாளர்களின் நலன்களுக்கும் எதிராகவே எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு பிரதமர் அலெக்சியஸ் சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்திருந்தது.

இந்த கடன் உதவிக்கு ஐரோப்பிய ஓன்றியமும் நிதிநிறுவனங்களும் முன்வைத்த நிபந்தனைகள் ஓய்வூதியங்களைக் குறைப்பது, வரிகளை உயர்த்துவது போன்ற திருத்தங்களை அமுலுக்கு கொண்டு வரவேண்டும் என்பதேயாகும். ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்த இந்த நிபந்தனைகள் மக்களுக்கு எதிரானதும், ஆனால் பல்தேசிய தொழில் நிறுவனங்களுக்கு சார்பாகவும் அமைந்துள்ளது.

கிரேக்க தேசத்தில் உருவான இடதுசாரிகளின் ஆட்சியினை விரும்பாத முதலாளித்துவ நாடுகளான ஐரோப்பிய நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் தொடந்து பல வழிகளில் கிரேக்க தேசத்திற்கு அழுத்தத்தினை கொடுத்த வண்ணமே இருந்தன. தங்களது சுரண்டல் பொருளாதாரக் கொள்கைக்கு கிரேக்க நாட்டு இடதுசாரிய அரசியல் முட்டுக்கட்டையாக ஆகிவிடுமோ என்று மிரண்டு போன இந்த முதலாளித்துவ நாடுகள் கடனை காட்டி கிரேக்க நாட்டை ஆட்டிப் படைக்க ஆரம்பித்துள்ளன. இவர்களுடைய இந்த கொள்கைக்கு கிரேக்க தேசத்தில் முதலாளித்துவ கொள்கையினை ஆதரிக்கும் உள்ளுர் அரசியல்வாதிகளும் ஆதரவாக இருப்பதால் நாட்டின் கடன் சுமைகள் மக்கள் மீதே சுமத்தப்பட்டு விட்டது. ஏற்கனவே கடந்த கால அரசியலால் பஞ்சம், பசி, வேலையின்மை போன்ற பாரிய பிரச்சனைகளுக்குள் சிக்கி தவிக்கும் கிரேக்க மக்கள் இன்று வரி உயர்வு, ஓய்வூதிய தொகை குறைப்பால் மேலும் சிக்கலான வாழ்வுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

பல்தேசிய தொழில் நிறுவனங்கள் முடிந்தளவு மக்களை சுரண்டி பொருளைப் பெருக்க வேண்டும், அதனால் முதலாளிகளும், ஐரோப்பிய, உலக நிதி நிறுவனங்கள் கொளுத்து செழிப்புற வேண்டும், அதற்காக சாதாரண மக்களது வாழ்வுரிமைகளை பறித்தெடுக்கலாம் என்பதே இந்த முதலாளித்துவத்தின் பிரதான கொள்கையாகும். கத்தை கத்தையாக கொள்ளை அடிக்கும் தொழில் நிறுவனங்களின் வரியைக் குறைத்து சலுகைகளை கூட்ட வேண்டும், ஆனால் அன்றாடம் நாயாய் ஓடி உழைத்து எதையுமே அனுபவிக்க முடியாமல் தவிக்கும் சாதாரண மக்களின் உரிமைகளை பறிக்க வேண்டும். இதுவே முதலாளித்துவம். இது கிரேக்க நாட்டில் மட்டுமல்ல, எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் தலையெடுத்து வரும் பாரிய பிரச்சனையாகும். மக்களுக்கான சோசல் உதவி குறைப்பு, ஓய்வூதிய குறைப்பு, சம்பள குறைப்பு, வயோதிபர் பராமரிப்பு உதவி குறைப்பு, மருத்துவ வசதி குறைப்பு, பாடசாலை கல்வி வசதிகளின் குறைப்பு இப்படி மக்களின் பல உரிமைகள் இல்லாதொழிககப்படுகின்றன.

இந்த ஐரோப்பிய முதலாளித்துவ கொள்கை தற்போது எங்கள் தேசத்தை நோக்கி அணுகிக் கொண்டிருக்கின்றது. எங்கள் மக்கள் மேல் அனுதாப்படுகின்றது இந்த ஐரோப்பிய ஒன்றியம். இன்றைய அனுதாபம் நாளைய அடக்கு முறை. இதற்கு உடன்பட்டு வால் பிடிக்க எங்கள் அரசியல்வாதிகளும் தயார். இன்று உலக நாடுகள் வழங்கும் கடன் உதவி நாளை மக்களின் உரிமைகளை அழித்தொழிப்பதாகும். இதை மக்களாகிய நாங்கள் தெரிந்து புரிந்து செயற்பட வேண்டும். எங்களது பிரச்சனைகளுக்கு உண்மையான காரணம் என்ன? எங்கள் உரிமைகள் யாரால் பறிக்கப்படுகிறது? இந்த அரசியல்வாதிகளின் உள் நோக்கம் என்ன? என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நாம் சரியான மக்கள் அரசியலை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.