Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

சினிமாவிற்கு போன சித்தாளும், நண்பனிற்கு பாலாபிசேகம் செய்தவர்களும்

கணவனும், மனைவியும் காதலின்பத்தில் களிப்புடன் முத்தமழை பொழிகிறார்கள். உள்ளம் எங்கும் உவகையுடன் இருந்த கணவனின் கண்கள் திடீரென கோவத்தால் சிவக்கின்றன. எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டிருந்திச்சு, இப்ப என்ன வந்திச்சு என்று பார்க்கிறீங்களா? மன்மதபூசையிலே கரடியாக வாத்தியார், அவரு தான் நம்ம எம்ஜிஆர் நுழைஞ்சிட்டார். ஒண்ணுக்கடிக்க போனாக் கூட கறுப்புக்கண்ணாடியும், வழுக்கை விழுந்த மொட்டையை மறைக்க தொப்பியும் போட்டுக் கொண்டு தான் போவார் போலே இருப்பாரே அவரே தான். கவர்ச்சிக்கன்னி சொப்பனவல்லியின் காரை நாம வைச்சிருக்கிறோம், சொப்பனவல்லியை யாரு வைச்சிருக்கிறாங்க என்று ஒரு சந்தேகம் வந்தது போல எந்த ஒரு சந்தேகமும் தனது அதிமுக என்கிற அடிமுட்டாள், ரெளடி கூட்டத்திற்கு வரக்கூடாது என்பதற்காக, ஜெயலலிதாவையும், தமிழ்நாட்டையும் நான் வைச்சிருந்தேன் இனி தமிழ்நாட்டை ஜெயலலிதா வைச்சிருப்பா என்று சொல்லி விட்டு மண்டையை போட்டாரே அவரே தான்.

 

மனைவி முத்தமிட்டது தன்னையல்ல, தன்னுடைய சட்டையிலே இருந்த எம்ஜிஆரின் படத்தை தான் என்பதை அவன் உணர்ந்ததினால் தான் கோபப்படுகிறான் என்பதை ஜெயகாந்தன் தன்னுடைய “சினிமாவிற்கு போன சித்தாளு” என்னும் நாவலிலே யதார்த்தமாக, மிக நுணுக்கமாக எடுத்துக் காட்டிய காட்சி இது. இந்த கோமாளிகள் திரையிலே தான் வீராதிவீரர்கள் என்பதை “அவன் படத்திலே மட்டும் தான் வீரன், நான் நிஜமாவே வீரன் என்று அந்த சேரிப்புறத்து மனிதன் சொல்வதாக எழுதியிருப்பார். பிள்ளை இல்லாதவன் ஆம்பிளை இல்லை என்ற தமிழ் சமுதாயத்தின் பொது புத்தியையும், எம்ஜிஆரின் மனைவிகளிற்கும், ஆசைநாயகிகளிற்கும் பிள்ளைகள் இல்லை என்பதையுமே அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“ஜய,ஜய சங்கர” என்ற கதையினை எழுதி பிராமணியத்திற்கும், பின்பு காங்கிரசு களவாணிகளிற்கும் தலைசாய்ப்பதற்கும் முன்பு முற்போக்கு, இடதுசாரி கொள்கைகளை தூக்கிப்பிடித்து ஜெயகாந்தன் எழுதிய கதை சினிமாவிற்கு போன சித்தாளு. அன்றைய காலகட்டத்து தமிழ்ச்சினிமா அடிமட்ட மக்களது வாழ்க்கையை எப்படி சீரழித்தது என்பதன் இலக்கிய ஆவணம் இந்தக்கதை. அரசியலிலும், சினிமாவிலும் உச்சத்தில் இருந்த எம்ஜிஆரை அம்பலப்படுத்தி எத்தனையோ வருடங்களிற்கு முதல் எழுதிய கதை இது.

 

 

அண்மையில் நண்பன் என்னும் படத்தில் நடித்த கத்தரித்தோட்டத்து  வெருளியின் கட் அவுட்டிற்கு பாலாபிசேகம் செய்தார்கள் என்ற செய்தி, சினிமாவிற்கு போன சித்தாளு காலகட்டத்து சமுதாயத்து பகுத்தறிவற்ற தன்மையையும், பாமரத்தன்மையையும் நாம் எள்ளளவும் கடந்து விடவில்லை என்பதை உறுதி செய்கிறது.

அதுவும் இந்தக்கொடுமை ஈழத்தில் நடந்தது. ஒட்டக்கூத்தரின் கலிங்கத்து பரணியில் போர் நடந்த இரவுகளில் பேய்கள் பிணம் தின்று, குருதியும் நிணமும் குடிக்கும் கற்பனைக்காட்சிகளை விட பயங்கரமான கொலைகளும், வன்முறைகளும் நடந்த நம் தேசத்து மண்னில் தான் இது நடந்தது.

இராணுவ வெறியர்களின் வன்முறைகளிற்குள் தினமும் சிக்கி, சிதறி நம்பெண்கள் அவலக்குரல் எழுப்பும் மண்ணில் தான் இந்த சோளக்கொல்லை பொம்மையின் ரசிகர்கள் என்னும் வீணர்கள் கும்பலின் விசிலடிச்சத்தம்  காதைப்பிளக்கிறது.

 

போசாக்கற்ற உணவினால் பாதிக்கப்பட்ட வன்னிக்குழந்தை

பச்சிளம்பிள்ளைகள் பாலிற்கு அழுகையில் கல்லிற்கு பால் ஊற்றுகிறார்கள் என்று தமிழ்நாட்டு பகுத்தறிவாளர்கள், கடவுள் என்னும் கற்சிலைக்கு பால் ஊற்றுபவர்களை பார்த்து கோபத்தோடு அன்று கேட்டார்கள். பாலும் இன்றி, பால் தந்த தாயும் இன்றி பல ஆயிரம் குழந்தைகள் அனாதைகளாக, ஆதரவற்றவர்களாக நெல்லிக்காய்மூட்டை சிதறியது போல ஈழமண் எங்கும் சிதறிப்போன போது இந்த மூன்றாம்தர தமிழ்படத்தில் வந்து போகிற (நடித்தான் என்று எழுதி நடிப்பு கலைஞர்களை அவமதிக்க நான் விரும்பவில்லை) கோமாளியை பார்த்து ஊளையிடுபவர்களை பார்த்து என்னவென்று சொல்ல!!

கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும் தலைவர்கள் என்று மணிமுடி தரித்து மப்பிலே உலவுகிற சமுதாயத்திற்கு கோமாளிகள் தான் கலைஞர்கள் என்று ஆகிப்போனதும் பொருத்தம் தான்.

-விஜயகுமாரன் (15/01/2012)