Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

கிளிநொச்சியில் தீயணைக்க வண்டி இல்லை; அய்யாமாருக்கோ அதிவிரைவு வாகனங்கள்

கிளிநொச்சி எரிகிறது. மகிந்த ராஜபக்ச என்ற இனப்படுகொலையாளனால் எரிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக்கப்பட்ட நகரம் மறுபடி எரிகிறது. இராணுவம் மண்ணில் புதைத்த ஊரை உழைப்பாளிகளும், உழவர்களும் உதிரத்தை சிந்தி கட்டி எழுப்பினார்கள். இன்று ஒரு சிறு நெருப்பை ஊதி அணைக்க வக்கற்ற வடமாகாணசபையின் பொறுப்பற்ற தன்மையினால் மறுபடி எரிகிறது. மக்கள் குறித்து, அவர் தம் உழைப்பு குறித்து எந்த விதமான அக்கறையுமற்ற அரசியல்வாதிகளாலும், அதிகார வர்க்கத்தினராலும் கிளிநொச்சி எரிகிறது.

பழக்கடைகள், புடவைக் கடைகள், காலணிக் கடைகள், அழகுசாதன பொருட்கடைகள் போன்ற சிறு வியாபாரிகளின் கடைகள் எரிந்துள்ளன. இந்தக் கடைகளின் உரிமையாளர்கள் வங்கிகளிலும், தனியாரிடமும் கடன் வாங்கி முதல் இட்டவர்கள் என்றும் கடைகள் எரிந்ததினால் அவர்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து கதியற்று கலங்கிப் போயிருக்கிறார்கள் என்றும் அவர்களின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி தொகுதி அடங்கிய யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 63.96 வீதமான வாக்குகளையும் ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருக்கிறது. கிளிநொச்சி அங்கம் வகிக்கும் வட மாகாணசபையில் முப்பது உறுப்பினர்களைக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரத்தில் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அய்யா விக்கினேஸ்வரன் அவர்கள் முதலமைச்சராக இருக்கிறார். இவ்வளவு பேர் இருந்தும் கிளிநொச்சி நகரத்திற்கு என்று ஒரு தீயணைப்பு வண்டி கூட இல்லை.

அண்ணளவாக அறுபத்தைந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து தான் தீயணைப்பு வண்டி வர வேண்டும். இல்லாவிட்டால் இம்முறை வந்தது போல் இலங்கை இராணுவத்தின் தீயணைப்பு வண்டி வர வேண்டும். ஆம், எம் மக்களைக் கொன்ற இலங்கை இராணுவத்திடம் கையேந்த வேண்டிய நிலையில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காரர்கள் எம்மக்களை வைத்திருக்கிறார்கள்.

ஆனால் அரசியல் தீர்வு ஒன்றினையோ, அழிந்து போன வாழ்வைக் கட்டி எழுப்ப பொருளாதார தீர்வு ஒன்றையோ மக்களிற்கு கொடுக்க முடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காரர்கள்; மக்களின் பிரச்சனைகளிற்காக மக்களுடன் இணைந்து இலங்கை அரசிற்கு எதிராக போராட முடியாத அரசியல் பச்சோந்திகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காரர்கள்; சாய்மனையில் சரீரத்தை தேய்க்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காரர்கள் ஆளுக்கொரு அதிவிரைவு வாகனங்களை இலங்கை அரசின் தயவில் வைத்திருக்கிறார்கள். நியாயப்படி பார்த்தால் மக்களிற்காக கணப்பொழுதையும் வீணாக்காமல் உழைக்கும் உத்தமர்களிற்கு ஆளுக்கொரு விமானமே கொடுத்திருக்க வேண்டும்.

போரினாலும், வறுமையினாலும் பாதிக்கப்பட்ட மக்கள் பசியுடன் வாடுகிறார்கள். உடைந்து போன வீடுகளில் வெய்யிலிலும், மழையிலிலும் ஒதுங்க முடியாது தவிக்கிறார்கள். பாடசாலைகளில் நம் குழந்தைகள் வகுப்பறைகள் இல்லாமல் மரத்தடிகளில் வதங்குகிறார்கள். தீவுப்பகுதி மக்கள் குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். ஆனால் வட மாகாணசபைக்கு இலங்கை அரசினால் ஒதுக்கப்படும் நிதியில் ஒரு பகுதி செலவளிக்கப்படாமல் வருடாவருடம் திருப்பி அனுப்பப் படுகிறது. இவ்வளவு பிரச்சனைகளும் இருக்கும் போது கிடைத்த பணத்தைக் கூட ஆக்கபூர்வமாக திட்டமிட்டு மக்களின் தேவைகளிற்கு பயன்படுத்த முடியாத மக்கள் விரோதிகள் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை நிர்வாகம்.இந்தளவிற்கு நிர்வாகத் திறனற்ற, மந்தமான மாகாணசபை கெட்ட கேட்டிற்கு மந்திரி பிரதானிகள்; அவர்களிற்கு ஒரு முதலைமைச்சர்.

தமிழ்நாட்டில் இருந்து வைரமுத்துவைக் கூட்டி வந்து காசையும், கவிதையையும் கரியாக்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொங்கல் விழா கொண்டாடியது. உழவர்களின் அறுவடை நாளைச் சாட்டி பொதுமக்களின் பணத்தை இப்படி ஊதாரித்தனமாக செலவழிக்கத் தெரிந்தவர்களிற்கு ஊர் மக்களின் தேவைகள் என்றுமே கண்ணிலே படுவதில்லை.

வாக்குப் போடுங்கள் ஈழம் பெற்றுத் தருவோம் என்று முதலில் சொன்னார்கள். பின்பு எம்மக்களின் இழப்புகளிற்கு, இனப்படுகொலைக்கு நீதி பெற்றுத் தருவோம் பாராளுமன்றத்திற்கு போக வையுங்கள் என்றார்கள். போரினால் அழிந்த மண்ணை அபிவிருத்தி செய்ய மாகாணசபை வேண்டும் அனுப்பி வையுங்கள் என்றார்கள். ஈழம் இல்லை; இனப்படுகொலைக்கு நீதி இல்லை; அபிவிருத்தி இல்லை. எரிக்கும் நெருப்பை அணைக்கக் கூட ஒரு வழியும் இல்லை; வக்கும் இல்லை என்பது தான் இவர்கள் தமிழ் மக்களிற்கு தந்த தீர்வு.