Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

அடிமையானாலும் இந்திய எசமானர்களின் அடிமையாவோம், அய்யா சம்பந்தன்

"மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்" என்ற செளந்தரராஜனின் பக்திப்பாடல் ஒன்று பல வருடங்களிற்கு முன் பிரபலமாக இருந்தது. இப்பொழுது காதல் கடிதம் எப்படி எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. அந்த நாட்களில் காதல் கடிதங்களில் கவிதை மழையாக பொழிந்து தள்ளியிருப்பார்கள். சொந்தமாக வசனமே எழுதத் தெரியாத வயதுகளில் கவிதை எழுத எங்கே போவது, எனவே காதல் கடிதங்களில் பாடல்வரிகளை மாற்றி எழுதுவார்கள். மணி என்ற எங்களது கூட்டாளிக்கு வசந்தி என்ற பெண்ணின் மேல் காதல் வந்தது. வழக்கம் போல கவிதை வரவில்லை.

அவன் முதல் வரியை மண்ணானாலும் வசந்தியின் முற்றத்து மண்ணாவேன் என்று ஒழுங்காகத்தான் தொடங்கினான் . பொன் ஆனாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன் என்ற வரிகளை மாற்றி எழுதியபோது தான் விதி சதி செய்தது. பொன்னுக்கு எதுகை மோனையாக அவனிற்கு பேனின் ஞாபகம் வந்து தொலைக்க "பேன் ஆனாலும் வசந்தியின் தலைப் பேனாவேன்" என்று எழுதித் தொலைத்து விட்டான். "செருப்பானாலும் உன் மண்டையைப் பிளக்கும் செருப்பாவேன்" என்ற மறுமொழி எழுதிய மை உலர முதல் வந்து சேர்ந்தது.

அய்யா சம்பந்தன் சம்பூரில் இந்தியா அமைக்கும் அனல் மின்நிலையத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய மக்களிடம் இந்தியா அனல் மின்நிலையம் அமைப்பதை நிறுத்தினால் அந்த இடத்தில் சீனா அனல் மின்நிலையத்தை கட்டாயம் அமைக்கும்; அதனால் "அடிமையானாலும் இந்திய எசமானர்களின் அடிமையாவோம்" என்று தனது டெல்லி எசமான விசுவாசத்தைக் காட்டிய கண்றாவியை கண்டபோது "செருப்பானாலும் உன் மண்டையைப் பிளக்கும் செருப்பாவேன்" என்ற வசந்தியின் மறுமொழி தான் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

அனல் மின்நிலையம் கொண்டு வரப்போகும் அழிவுகள்

  • காற்றுவெளி எங்கும் கரி அமில வாயுவின் (CO2) அளவை அதிகரித்து மூச்சுக்காற்றை நஞ்சாக்கும்.
  • கடல் நீர்மட்டம் உயர்வதற்கு முக்கிய காரணி
  • மின் உற்பத்தியின் போது குளிர்வாக்கம் செய்வதற்கு மிக அதிக அள்வில் தண்ணீர் தேவைப்படும். (விவசாயத்திற்கு தேவையான நீரை உறிஞ்சி எடுத்து இத்திட்டத்திற்கு கொடுப்பார்கள்)
  • குளிர்வாக்கம் செய்யப்படுவதற்காக உபயோகிக்கப்படும் நீர் சூடாகி கழிவாக நீர்நிலைகளில் கலக்கும் போது அவற்றில் வாழும் உயிரினங்களையும், சூழலையும் நாசமாக்கி அழிக்கும்.

இந்திய பெருமுதலாளிகளின் இலாபவேட்டைகளிற்காக இலங்கை அரசுத் தரகர்களினால் இத்தகைய பெருங்கேட்டை தமிழ்மக்களிற்கும், தமிழ்மண்ணிற்கும் கொண்டு வரும் பேரழிவை யார் எதிர்த்துப் போராட வேண்டும்? தமிழ்மக்களின் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதிர்த்துப் போரிட வேண்டும். தமிழ் மக்களின் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்கிற அய்யா சம்பந்தன் போன்றவர்கள் தலைமை ஏற்றுப் போரிட வேண்டும்.ஆனால் அய்யாவும் போரிடவில்லை. அவர் தம் கட்சியும் போராடவில்லை.

ஆனால் மக்கள் தமக்காக, தம் பிள்ளைகளிற்காக, தம் மண்ணிற்காக போராடும் போது அய்யாவும் அவர் தம் அடிப்பொடிகளும் பதறிப் போய் வருகிறார்கள். எதற்காக வருகிறார்கள்? தமிழ் மக்களின் பிரதிநிதிகள் யாருடைய பிரதிநிதிகளாக வருகிறார்கள்?

"தின்னுற சோத்துல ஏன் அய்யா நஞ்சு வச்சீங்க?

எங்கட புள்ளயள நிம்மதியா வாழ விடுங்க ஐயா!"

என்று ஒரு தாய் நம் மக்களின் வாழ்வை அழிக்கவரும் அனல் மின்நிலையம் என்ற ஆபத்தை உணர்ந்து அய்யா சம்பந்தனிடம் அழுது நியாயம் கேட்ட போது அய்யாவிற்கு நம் மக்களின் வாழ்வு அழியப் போகிறதே என்ற கவலை வரவில்லை. நம் மண்ணும், விண்ணும் நஞ்சாகப் போகிறதே என்ற கவலை வரவில்லை. தம் எஜமானர்களான இந்திய அதிகார வர்க்கத்தினரின் கொள்ளையடிக்கும் திட்டம் தடைபடப் போகிறதே என்ற கவலை தான் அய்யாவிற்கு வந்தது.

அதனால் தான் தனது உறவினர்களை, தனது குருமார்களை கொல்லத் தயங்கிய அருச்சுனனிற்கு அந்த நாளைய கிட்லரான கிருஷ்ணன் பகவத்கீதையில் "நீ விட்டு விட்டாலும் அவர்கள் என்றைக்கோ செத்துத் தான் போவார்கள். அதனால் நீ இன்றைக்கே இவர்களை கொன்று விடு. அதில் ஒன்றும் பிரச்சனையே கிடையாது என்று "தர்ம உபதேசம்" பண்ணியதைப் போல அய்யா சம்பந்தன் "இந்தியா விட்டு விட்டாலும் சீனா அனல் மின்நிலையம் கட்டியே தீரும், அதனால் இந்தியா கொல்லாவிட்டாலும் சீனா கொன்றே தீரும். ஆகவே உங்களின் வாழ்விற்காக போராடாமல் மெளனமாக மரணித்துப் போங்கள் என்கிறார்.

இன்றைக்கு கிருஷ்ணன் இருந்திருந்தால் கொலை செய்யத் தூண்டிய குற்றத்திற்காக வழக்கு தொடர்ந்திருக்கலாம். அய்யா சம்பந்தனின் அரும்பதவிளக்கத்திற்கு என்ன தண்டனை கொடுப்பது? அடுத்த முறை வாக்கு கேட்டு வருவார்கள். பழைய செருப்புகளை பக்கத்திலேயே வைத்திருங்கள்.