Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

நம் அன்னையர் அழும் கண்ணீர் ஒரு நாள் மகிந்தாவை எரிக்கும்!!

தவப்புதல்வன் கொடுஞ்சிறை போகிறான். தந்தையவன் கண்ணீர் சிந்துகிறான்.

"இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே

ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி

நம்மதென்று நாமிருப்ப, நாய் நரிகள் பேய் கழுகு

தம்மதென்று தாமிருக்கும் தான்"

என்று பட்டினத்தார் பாடியது போல வாழும் ஒரு தந்தை அழுதால் நாமும் சேர்ந்து அழுவோம். இங்கு அழுபவன் ஒரு தந்தை அல்ல, அவன் ஒரு மனிதனே அல்ல. இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய இனப்படுகொலையாளி. பச்சைக் குழந்தைகள் மேல் எரிநெருப்புக் குண்டுகள் வீசிக் கொன்றவன். சுற்றிக் கொலைகாரர்கள் சூழ்ந்து நின்ற போதும் நடக்கப் போவது என்ன என்று தெரியாமல் கையில் இருந்த பிஸ்கட்டை கடித்து தின்ற குழந்தை பாலச்சந்திரனை கொல்லச் சொன்ன கொலைகாரன்.

கடற்தொழிலாளர்களிற்கு எரிபொருட்களை மானிய விலையில் வழங்கியதில் இவன் கை வைத்து மானியங்களை குறைத்த போது நாடு முழுவதும் கடற்தொழிலாளர்கள் போராடினர். சிலாபத்தில் இவனது ஏவல்நாய்கள் சுட்டதில் ஏழைத்தொழிலாளி அந்தோனி மரணமடைந்தார். அந்தோனியின் சின்னமகள் அப்பாவை இழந்து சிந்தும் கண்ணீருக்கு என்ன மறுமொழி சொல்வாய் நாயே!

இவனால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களிற்கு நீதி கேட்டுப் போராடிய தொழர்கள் லலித்தும், குகனும் யாழ்ப்பாணத்தில் வைத்து இவனது எடுபிடிகளால் கடத்தப்பட்டனர். இன்றுவரை அவர்களின் நிலை என்ன என்று இவனும் சொல்லவில்லை, இவனிற்கு பின்பு வந்தவர்களும் சொல்லவில்லை. தோழர் லலித் சிறு வயதில் தாயை இழந்தவர். தந்தை இரப்பர் மரத்தில் பால் வெட்டும் தொழிலாளி. பல்கலைக்கழகத்தில் லலித்திற்கு கிடைத்த வேலை ஏழைக் குடும்பத்திற்கு நம்பிக்கை ஒளி தரும் விளக்காக இருந்தது. தானும், தன் குடும்பமும் என்று லலித் வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் ஒரு போராளி, எனவே காணாமல் போன தமிழ்மக்களிற்கு நீதி கேட்டு முன்னிலை சோசலிசக்கட்சி ஒழுங்கு செய்த போராட்டங்களை முன்னெடுக்க யாழ்ப்பாணம் வந்து இவனது கொலைகாரர்களால் கடத்தப்பட்டார்.

வயது முதிர்ந்த லலித்தின் தந்தை இன்றும் இரப்பர் மரங்களை தளர்ந்த கரங்களினால் வெட்டிக் கொண்டிருக்கிறார். வறுமையும், மகனை இழந்த துயரமும் சூழ மதுவின் கருணையிலே இரவுகள் கழிகின்றன. உன் மகன் ஊரைக் கொள்ளையடித்து உல்லாச வாழ்வு வாழ்ந்த உத்தமன், அந்த தறுதலை சிறைக்குப் போன சோகத்தில் கண்ணீர் விடுகிறாயே, இந்த தந்தைக்கு நீ என்ன மறுமொழி சொல்வாய்.

தோழர் குகன் மிக இளவயதில் மனைவியையும், தன் கண்ணின் மணி போல் கட்டிக் காத்த செல்ல மகளையும் விட்டு உன் கொலைகாரர்களால் கடத்தப்பட்டார். குகன் இருக்கும் போதே வறுமையில் ஒரு குச்சுவீட்டில் தான் வாழ்வு இருந்தது. இன்று அவர் மனைவி தோட்டங்களில் கூலிவேலை செய்து தன்னையும், தன் சின்ன மகளையும் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறார். அப்பாவைவைப் பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டபோது அடக்க முடியாமல் அழுத குகனின் செல்ல மகளிற்கு மக்களின் இரத்தத்தில் குளித்த கொலைகார நாயே என்ன மறுமொழி சொல்வாய்.

உன் ஊழல்களை பிரகித் எக்னலிகொட ஊர் முன்னே அம்பலப்படுத்தியாதால், அவரை 2010 ஆம் ஆண்டு கடத்தினாய். தன் இரு சிறு பிள்ளைகளையும் கையில் பிடித்துக் கொண்டு பிரகித்தின் மனைவி சந்தியா நீதி கேட்டு எல்லாக் கதவுகளையும் தட்டிக் கொண்டிருக்கிறார். சிரிப்பு மறந்து போன அந்த சின்னக்குழந்தைகளிற்கும், வாழ்வு மறந்து போன சகோதரி சந்தியாவிற்கும் என்ன மறுமொழி சொல்வாய்.

உனக்கும், இன்றைய ஆட்சியாளர்களிற்கும் இடையில் இருக்கும் அதிகாரச் சண்டைக்காக உனது மகனில் ஊழல் வழக்கு எடுக்கப்பட்டு அவனை சிறையில் தள்ளியிருக்கிறார்கள். ஆனால் உனது அரசினதும், உனது இராணுவத்தினதும் இனப்படுகொலைகளிற்குக் இந்த அரசு மட்டுமல்ல, இனி வரும் எந்த அரசும் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை. ஏனெனில் இவர்களும் உன்னோடு சேர்ந்து கொலை செய்தவர்கள். உன்னைப் போன்ற கொலைகாரர்கள். உன்னைப் போன்ற மக்கள் விரோதிகள். எனவே ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்கப் போவதில்லை.

அதனால் தான் ஊழல் செய்த குற்றத்திற்கு வழக்கு நடத்துபவர்கள் இத்தனை ஆயிரம் மக்கள் படுகொலை செய்ததிற்கு எந்த விதமான வழக்கும் நடத்துவதில்லை. உன்னால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களைப் பற்றி எந்த தகவலையும் இவர்கள் சொல்வதில்லை. இவ்வளவு கொலைகளையும், கொள்ளைகளையும் செய்த நீயும், உன் கும்பலும் சுதந்திரமாக வெளியில் திரியும் போது உன்னால் சிறை பிடிக்கப்பட்ட அப்பாவிகளை வெளியில் விட முடியாதாம். அவர்கள் பயங்கரவாதிகளாம், இன்றைய "நல்லாட்சியாளர்கள்" சொல்கிறார்கள்.

ஆனால் உன்னால் கொல்லப்பட்ட தம் அன்புக்குரியவர்களை நினைத்து, நினைத்து அழும் எம் தாய்மாரின் கண்ணீர் ஒரு நாள் உன்னை எரிக்கும். உன் ஏவல் நாய்களால் குதறப்பட்ட நம் சகோதரிகளின் கதறல்களிற்கு நீ மறுமொழி சொல்லும் காலம் ஒரு நாள் வந்தே தீரும். தம் தாய்தந்தையரை இழந்து தவிக்கும் நம் குழந்தைகளின் கண்ணீர் உன்னை மக்கள் மன்றத்தில் நிறுத்தி இறுதித்தீர்ப்பு வழங்கும் ஒரு நாள் வந்தே தீரும். உன்னைப் போலவே மக்கள் விரோதிகளான எந்த ஆட்சியாளரும் அல்ல, ஏழை மக்கள் தான் உனக்கு தீர்ப்பு வழங்கி சாவுமணி அடிப்பார்கள்.