Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பார்க்குண்டா (Farkhunda), இஸ்லாமிய மதவெறியர்களின் படுகொலை

பார்க்குண்டா மாலிக்சாடா என்ற இருபத்தேழு வயது ஆப்கானிஸ்தானத்துப் பெண் இந்த வருடம் பங்குனி இருபதாம் திகதி காபுலில் வைத்து இஸ்லாமிய மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டாள். ஒரு சிறு பெண்ணை நூற்றுக்கணக்கான இஸ்லாமிய மதவெறி ஆண்கள் கூட்டம் அடித்துக் கொலை செய்து இஸ்லாத்தின் புனிதத்தை காப்பாற்றினார்கள். அந்த கொலைவெறியர்கள் அவளை காபூலின் தெருக்களில் இழுத்துச் சென்று அடித்தார்கள். ஒரு கூரை மீது இருந்து அவளை கீழே எறிந்தார்கள். அவள் மீது ஒரு காரை ஏற்றி நெரித்தார்கள். பின்பு ஒரு பள்ளிவாசலின் முன்பு வைத்து மறுபடியும் கற்களாலும், தடிகளாலும் அடித்தார்கள். அவளை தீ வைத்துக் கொளுத்தினார்கள். அவளின் உடல் காபுலின் நதியில் எறியப்பட்டது. இவ்வளவு கொடுமைகளும் ஆப்கானிஸ்தானத்து பொலிசாரின் கண் முன் தான் நடந்தது.

அந்த இஸ்லாமிய மதவெறிக் கும்பல் அவளை ஏன் கொலை செய்தது? இவ்வளவு காட்டுமிராண்டித்தனங்களிற்கும் காரணம் என்ன? அவள் குரானை எரித்து விட்டாள் என்று ஒரு இஸ்லாமிய மதகுரு சொன்ன பொய் தான் இவ்வளவு அநியாயங்களிற்கும் காரணம். பார்க்குண்டா பர்தா அணியும் ஒரு சராசரி முஸ்லீம் பெண். இஸ்லாமிய மதக்கல்வியில் பட்டப்படிப்பு படித்தவள். ஒரு மதக்கல்வி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவள். அவள் பணிபுரியும் பாடசாலைக்குப் பக்கத்தில் தான் அவள் குரானை எரித்ததாக பொய் சொன்ன சைனுடின் முல்லாவாக இருக்கும் சா-சாம்சிரா பள்ளிவாசல் இருக்கிறது. அங்கு சைனுடின் பேய், பிசாசுகளை விரட்டும் மந்திரக்கயிறுகளை விற்பது இஸ்லாத்திற்கு எதிரானது என்று பார்க்குண்டா அவனிடம் விவாதித்திருக்கிறாள்.

ஒரு பெண் தன்னை எதிர்ப்பதா? தனது வியாபாரத்தை எதிர்ப்பதா? என்ற ஆணாதிக்க வெறி, பண வெறியினால் அந்த முல்லா அவளை குரானை எரித்ததாக குற்றம் சாட்டினாள். "நான் ஒரு முஸ்லீம், முஸ்லீம்கள் குரானை ஒரு போதும்  எரிப்பதில்லை" என்று அவள் அந்த மதவெறியர்களிடம் பலமுறை தன் மீதான குற்றச்சாட்டை உறுதியாக மறுத்த போதும் அந்த ஆணாதிக்க இஸ்லாமிய மதவெறிக்கும்பல் அவளை சித்திரவதை செய்து கொன்றது. இஸ்லாத்திற்கு எதிரான மந்திரக்கயிறுகளை பகிரங்கமாக விற்றவன் குற்றவாளி இல்லை, அவனது செயல்கள் இஸ்லாத்திற்கு எதிரானது என்று எதிர்த்த ஒரு மதக்கல்வி ஆசிரியை தான் கொலை செய்யப்பட வேண்டியவள் என்பது தான் அந்த முட்டாள்களின் முடிவு.

அவளது கொலையின் பின் காபுல் பொலிசின் அதிகாரபூர்வ பேச்சாளர் பேஸ்புக்கில், " பார்க்குண்டா போன்ற மதநம்பிக்கை அற்றவர்கள் இஸ்லாத்தை எதிர்ப்பதன் மூலம் ஐரோப்பியாவிலோ, அமெரிக்காவிலோ குடியுரிமை பெறலாம் என்று நம்பி இவ்வாறு செய்கிறார்கள். ஆனால் தமது இலக்கை அடைய முதலே உயிரை இழக்கிறார்கள் என்று தனது மதவெறியையும், முட்டாள்தனத்தையும் காட்டினான். பண்பாடு, தகவல் துறைகளிற்கான துணை மந்திரி சிமின் காசன் காசன்சாடா " மதநம்பிக்கை அற்றவர்களிற்காக தொழிற்பட்டவள் பார்க்குண்டா" என்று குற்றம் சாட்டினான்.

பாராளுமன்றத்தின் முறையீடுகள், குற்றச்சாட்டு கமிசனின் தலைவரான சல்மாய் சாபுலி பேஸ்புக்கில் பார்க்குண்டாவின் சித்திரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட படத்தை போட்டு "இது தான் அந்த வெறுப்பூட்டும், கோரமான பெண், இவள் நமது முஸ்லீம் குடிமக்களால் தனது செயல்களிற்காக தண்டிக்கப்பட்டாள். இதன் மூலம் அப்கானிஸ்தானிற்கு வேண்டியது இஸ்லாம் மட்டுமே, அப்கானிஸ்தானியர்கள் ஏகாதிபத்தியம், இஸ்லாமிய எதிர்ப்பு, உளவாளிகளை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதை பார்க்குண்டா போன்றவர்களின் எஜமானர்களிற்கு அப்கானியர்கள் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள் என்று உளறிக் கொட்டினான்.

அமெரிக்காவுடனும், ஐரோப்பாவுடனும் சேர்ந்து அப்பாவி அப்கானி மக்களைக் கொல்லும் இந்த நாய்கள் தேசபக்தி பற்றி பேசுகிறார்கள். அப்கானிஸ்தான் மண் முழுக்க அமெரிக்க இராணுவம் இருக்கிறது. அமெரிக்காவின் தயவில் இந்த பொம்மைகளின் ஆட்சி நடக்கிறது. இந்த கோமாளிகள் ஏகாதிபத்தியம் பற்றி வீரவசனம் பேசுகிறார்கள். அமெரிக்க இராணுவம் இந்த அடிமைகளின் இராணுவத்திற்கும், காவல்துறைக்கும் பயிற்சி அளிக்கிறது. இந்த கோமாளிகள் உளவாளிகள் பற்றி உளறுகிறார்கள். "நமக்கு வாய்த்த அப்கானி அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்" என்று அமெரிக்க அதிபர்களிடம் பாராட்டு வாங்கும் இந்த வேதாளங்கள் "நாங்களும் ரெளடிகள் தான்" என்று மார்தட்டுகிறார்கள். இஸ்லாத்தில் நம்பிக்கையற்றவர்கள் கண்டுபிடித்த பேஸ்புக்கில் எழுதுவது மதத்திற்கு விரோதமாக இல்லையா என்பதைப் பற்றி இந்த அறிவுக்கொழுந்துகள் வாய் திறக்க மாட்டார்கள்.

பார்க்குண்டாவின் படுகொலையை எதிர்த்து ஆப்கானியப் பெண்கள் போராட்டத்தில் இறங்கினர். அவளின் உடலை பெண்களே தாங்கிச் சென்று அடக்கம் செய்தனர். அடக்கம் செய்யப்படும் இடத்திற்கு ஆண்கள் மட்டுமே செல்லும் இஸ்லாமிய மரபை மீறி பெண்கள் அவளை எடுத்துச் சென்றது அப்கானிய ஆணாதிக்க இஸ்லாமிய வெறியர்களிற்கு எதிரான முதலாவது போராட்டமாக அமைந்தது. போராட்டங்களின் விளைவாக அவளின் கொலையாளிகள் நால்வருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. சிலருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

ஆனால் ஆப்கானிஸ்தானின் மேல்நீதிமன்றம் நால்வரின் மரண தண்டனையை இருபது வருட சிறைத்தண்டனையாக குறைத்தது. ரிசானா என்ற இலங்கையின் ஏழைச்சிறுமி சவுதிப்பணக்காரனின் குழந்தையைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு கழுத்து வெட்டி இஸ்லாமிய சட்டப்படி கொலை செய்யப்பட்டாள். அவளிற்கு மரணதண்டனையைக் குறைக்கும்படி கேட்ட போது அந்த சவுதி பெற்றோர்கள் மன்னித்தால் தவிர மரண தண்டனையைக் குறைக்க இஸ்லாமிய சட்டத்தில் இடமில்லை என்றார்கள். இஸ்லாமியர்கள் என்ற காரணத்திற்காக இலங்கையில் இருக்கும் சில முஸ்லீம்கள் கூட ரிசானாவின் கொலை சரி என்று ஊளையிட்டார்கள்.

ஆனால் இன்றைக்கு முல்லா போய் சொன்னான் என்பது நிருபிக்கப்பட்ட பின்பு காபுலின் பொலிஸ்காரர்களின் கண்களிற்கு முன்னால் நூற்றுக்கணக்கான மதவெறி மிருகங்கள் செய்த கொலைக்கு இஸ்லாமிய சட்டம் வளைந்து கொடுத்திருக்கிறது. பார்குண்டாவின் தாய், தந்தையர் கொலையாளிகளை மன்னிக்கவில்லை. ஆனால் கொலை செய்தவர்கள், பொய் சொன்னவர்கள் முல்லாக்கள், ஆண்கள் என்பதினால் ஆணாதிக்க இஸ்லாமிய சட்டங்கள் அவர்களை விடுதலை செய்திருக்கிறது. வாஸ்மா என்ற  ஆப்கானிய பெண் உரிமைப் போராளி "தலிபான்கள் மட்டுமல்ல முழு அப்கானிய அமைப்புமே பெண்களிற்கு எதிராக இருக்கிறது" என்றார்.

அதனால் தான் இடதுசாரிகளான நாங்கள் சொல்கிறோம் எல்லா மதங்களுமே ஏழை மக்களிற்கு எதிரானவை. பெண்களிற்கு எதிரானவை. முதலாளித்துவம், மதங்கள் ஒழிக்கப்படும் வரை ஒடுக்குமுறைகள், அநீதிகள் சமுதாயத்தை அரித்துக் கொண்டே இருக்கும். சமத்துவ சமுதாயமே சகலருக்கும் சமமான உரிமைகளை வழங்கும். சமத்துவ சமுதாயம் அமைக்கும் போராட்டத்தில் ஒடுக்கப்படும் அனைவரும் ஒன்று சேருவோம்.