Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

நாளை வரும் போர்க்களங்களில் அவனது பாடல்களை நாம் பாடுவோம்...

தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் மட்டும் வாழ மனிதர்களை நிர்ப்பந்திக்கும் தனியுடமை உலகில் தன் சக மனிதர்களிற்காக வாழுதல், சமுதாயத்திற்காக போராடுதல் என்ற கல் நிறைந்த பாதையில் கால் வலிக்க நடந்த போதும் களைக்காமல் பொதுவுடமை என்னும் போர்க்கொடியை தூக்கிப் பிடித்தவன் எங்கள் தோழன் எம்.சி.லோகநாதன். எம்மைச் சுற்றிய எல்லாம் இனவாதம், சாதியம், ஆயுதம் தாங்கியவர்களின் அராஜகங்கள் என்று மனிதத்தை குழி தோண்டி புதைத்த போது கும்மிருட்டில் மிளிரும் ஒரு நட்சத்திரம் போல எழுந்தவன் எங்கள் எம்.சி.

அவனது கவிதைகளும் அவனைப் போலவே பொதுவுடமை என்னும் போர்க்குரலைப் பற்றியே பேசுகின்றன. வலி சுமந்த மனிதர்களின் வதைகளே அவனது பாடல்கள். இனம், மொழி, சாதி, சமயம் என்று மனிதர்களைப் பிரிக்கும் மானுடத்தின் எதிரிகளை வாள் கொண்டு பிளக்கின்றன அவனது வரிகள்.

அழிந்தவையும், அழிக்கின்றவையும்

மறைந்தவையும், மறைக்கப்பட்டவையும் - அவை

அத்தனை மேல் நீதியிடும் மீட்புக்காய்

ஆர்ப்பரிக்கும் மக்கள் போர் வெடிக்கட்டும்

என்று இனவாதம், சர்வாதிகாரம் என்னும் புதைமணலில் கால்கள் புதைந்தபடி அவலங்களும், துயரங்களுமே வாழ்க்கையாகிப் போன எமது மக்களிற்கு போராட்டம் என்ற ஒன்றே எம்மை விடுதலை செய்யும் எனவே எழுந்து வாரும் எம் சகோதர, சகோதரியரே என்று உந்துசக்தியை, ஊன்றுகோலைக் கொடுக்கின்றன அவனது கவிதைகள். விழியிழந்த குதிரைகள் வீடு போய்ச் சேர்வதில்லை, தமக்குள் பிளவு கொள்ளும் மனிதர்கள் விடுதலை பெறுவதில்லை. சேர்ந்து வாழ்வதும், போராடுவதுமே சமத்துவ சமுதாயம் ஒன்றைக் கொண்டு வரும் என்று வைகறையின் வரவைச் சொல்லும் பறவையைப் போல பாடுகின்றன அவனது பாடல்கள்.

மதம் மக்களின் அபின் என்றான் ஆசான் கார்ல் மார்க்ஸ். மாணிக்கம் என்ற பெயரில் கவிதைகள் எழுதிய லோகநாதன் அவனை வழிமொழிகின்றான்.

சொர்க்கமும், நரகமும்

ஆவிகளும், பேய்களுமாய்

அந்த மூடத்தனங்களை

கொண்டு அலைகின்ற மனிதர்களை மனம் பயம் இல்லாமல் எங்கே இருக்கிறதோ அங்கே மகத்துவமான வாழ்க்கை இருக்கிறது வாருங்கள் என்று வழி காட்டுகின்றன அவனது கவிதைகள்.

அப்பா எங்கே என்று கேட்டபோது அடக்கமுடியாமல் தன் அன்பு முழுவதையும் கொட்டி அழுத கடத்தப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் தோழர் குகனின் மகள் சாரங்காவுக்காக லோகநாதனால் "அழும் குழந்தை சின்னமடி நீ எமக்கு " என்ற கவிதை எழுதப்பட்டது.

உனக்கு மட்டுமல்ல

எமக்குந்தான்

இந்தச் சோக வாழ்வு சொந்தமடி என்று அந்த சின்னஞ்சிறு குஞ்சின் கண்ணீர் துடைக்கின்றன அவனது கவிதை வரிகள். முட்களின் நடுவே தனியே தவிக்கும் அந்தக் குழந்தைக்காக பனி போல் கரைகிறது கவிதை.

கொடிய மிருகத்தின் இரையென மனிதரை

முறைவைத்துக் கொன்று கொழுக்கின்ற வர்க்கத்தை

அடியொடு அழித்து மனித விடுதலை காண

எழுந்து வாருங்கள்

என்று தனது கவிதைகளுடன் மக்களின் போராட்டங்களுடன் முப்பது வருடங்களாக இணைந்திருந்த மாணிக்கம் செல்லம் லோகநாதனின் வாழ்வு மரணத்துடனான போராட்டத்துடன் முடிவுக்கு வந்த போதும் அவனது கவிதைகள் என்றும் வாழும். நாளை வரும் போர்க்களங்களில் அவனது பாடல்களை நாம் பாடுவோம். கத்தும் கடல் அலையை மேவி அவை ஒலிக்கும். காற்றைக் கிழித்துச் செல்லும் அம்புகள் போல காலத்தை கடந்து அவனது கவிதைகள் நாட்டார் பாடல்கள் போல் நாளும் வாழும்.

குறிப்பு: தோழர்  லோகநாதனை நினைவு கூர்ந்து வெளிவரவிருக்கும் "ஒரு வெம்மையான நாளில் நின்று போன கவிதை" நூலுக்கான முகவுரை இது