Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இந்திய அமைதிப்படையை நியாயப்படுத்தும் ஜெயமோகனிற்கு இலக்கிய தேட்ட விருது!!!

ஒரு படைப்பு என்பது எப்பொழுதும் மக்களிற்கானது. மக்கள் பக்கம் இருந்து எழுதும் படைப்பாளியின் எழுத்துகள் மக்கள் விரோத கருத்துக்களை அம்பலப்படுத்தும். பொய்களை தோலுரிக்கும். நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம், கத்தோலிக்க திருச்சபை என்பவற்றை எதிர்த்துப் போரிட்டன மாக்சிம் கோர்க்கியின் எழுத்துக்கள். அதனால் தான் அவரின் "தாய்" இன்றைக்கும் இலட்சக்கணக்கானவர்களால் வாசிக்கப்படுகிறது.

"தாயை" படிப்பவர்களின் மனதில் புரட்சித்தீயை அவரின் கருத்துகள் ஏற்றி விடுகின்றன. "வால்காவில் இருந்து கங்கை வரை" என்று இராகுல சங்கிருத்தியன் எழுதியவைகள் புராணப்பொய்களை சின்னாபின்னமாக உடைத்து மக்கள் வரலாற்றை உண்மையின் வெளிச்சத்தில் எடுத்துரைக்கின்றன.

லூ சன் சீனாவின் புரட்சிகர காலகட்டத்தை தன் எழுத்துகளின் மூலம் கண் முன்னே நிறுத்துகிறார். சீன மக்களின் எதிரிகள் கட்டவிழ்த்து விட்ட கொலைகளையும், கொள்ளைகளையும் இரத்த சாட்சியமாக வரலாற்றில் பதிவு செய்தார். ஆ கியூவின் உண்மைக்கதை என்ற அவரது சிறுகதை ஒரு கிராமத்து மனிதனின் வாழ்வு அந்தக் கொந்தளிப்பான காலகட்டத்தில் எப்படி பயணிக்கிறது என்பதை எள்ளலுடனும், மிக நுண்ணிய மன உணர்வுகளுடனும் எழுத்தோவியமாக வரைந்து காட்டுகிறது. லூ சன் என்றைக்குமே சீன கம்யுனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்ததில்லை. ஆனால் பொதுவுடமைத் தத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்ட மனிதாபிமானியாக இருந்ததினால் என்றைக்குமே மக்கள் பக்கம் நின்ற படைப்பாளியாக அவரின் எழுத்துக்கள் இருக்கின்றன.

எழுபத்தேழில் கொடுங்கோலன் ஜெயவர்த்தனாவினால் இலங்கைத் தமிழ் மக்களின் மேல் கட்டவிழ்த்து விட்ட இனப்படுகொலையை அருளரின் "லங்காராணி" பதிவு செய்தது. லங்கா ராணி என்ற கப்பலில் கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கு இனக்கலவரத்தில் தப்பிப் பிழைத்த தமிழ்மக்கள் பயணிப்பதை சொல்வதன் மூலம் அக்கலவரத்தின் கொடுமைகளை, தமிழ்மக்களின் வலி சுமந்த வாழ்வினை அது எடுத்துச் சொன்னது. இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு அகதிகளாக வந்த தமிழர்களிற்குள்ளே இருந்த வர்க்கப்பிரிவுகள், சாதி வேற்றுமைகளையும் அது நுண்ணியமாக சொல்வதன் மூலம் ஒரு சமுதாயத்தின் உள்ளிற்கும், வெளியிலும் இருக்கும் பிரச்சனைகளை எடுத்துக் காட்டியது.

இலங்கைப் பேரினவாத அரசின் ஒடுக்குமுறைகளிற்கு எதிராக போராடச் சென்றவர்கள் தாம் சேர்ந்த இயக்கத்தலைமைகளாலேயே ஒடுக்கப்பட்ட அவலத்தை கேசவன் என்ற நோபேட்டின் "புதியதோர் உலகம்", சீலனின் "வெல்வோம் அதற்காக" போன்ற நூல்கள் மரண வலியுடன் எழுதிச் செல்கின்றன. இலங்கை மக்களின் வாழ்வினை, போராட்டங்களை நூற்றுக்கணக்கான படைப்பாளிகள் தமது கதைகள், கவிதைகள், கட்டுரைகள் மூலம் எடுத்துச் சொன்னார்கள். ஆனால் இவை எதுவும் கனடா தமிழ் இலக்கியத் தேட்டம் என்ற அமைப்பிற்கு தெரியவில்லை. அவர்களது வருடாந்திர இயல் விருது இந்த வருடம் ஜெயமோகனிற்கு வழங்கப்படுகிறது.

ஜெயமோகன் ஆயிரம் கதைகளை, கட்டுரைகளை, காப்பியங்களை எழுதிய பெரும் எழுத்தாளராக இருக்கலாம். அவை இலக்கியத்தின் உச்சத்தினை எட்டியவையாக இருக்கலாம். ஆனால் அவரின் கருத்துக்கள் பிற்போக்குத்தனத்தின் உச்சக்கட்டங்கள். மனிதர்களை வர்ணங்களாக, சாதிகளாக பிரிக்கும் இந்துமதத்தை எந்தவித கூச்சமுமின்றி நியாயப்படுத்துவதுதான் அவரின் எழுத்துகளின் சாராம்சம். முதலாளியத்தின் ஆதரவாளர், அதனால் பொதுவுடமைக் கொள்கைகள், பெரியாரியம் என்பவற்றை எதிர்த்து எழுதிய குப்பைகள் தான் அவரின் தத்துவமுத்துகள். ராஜீவ்காந்தி என்ற கொலைகாரன் அனுப்பிய இந்திய அமைதி காக்கும் படை இலங்கைத் தமிழ் மக்களிற்கு எந்தவிதமான அக்கிரமங்களையும் செய்யவில்லை என்று பார்ப்பன நாய்கள் சுப்பிரமணிய சுவாமி, சோ ராமசாமி போன்றவைகள் ஊளையிடுவதை வழிமொழிபவர்.

இடதுசாரியம், பெரியாரியம் என்பவற்றின் மீது இவர்களைப் போன்றவர்கள் ஆயிரம் விமர்சனங்களை வைக்கட்டும். விமர்சனம், சுயவிமர்சனம் என்பது மார்க்கசியத்தின் அடிப்படை. எல்லாவற்றையும் கேள்வி கேள் என்றார் பெரியார். விமர்சனங்களே தவறுகளை திருத்தவும், முன்னோக்கிச் செல்லவும், தத்துவங்களை செழுமைப்படுத்திக் கொள்ளவும் அடிப்படையாக இருக்கின்றன. ஆனால் இவர்கள் மக்கள் நலன் என்ற அடிப்படையில் விமர்சிப்பதில்லை. வெறும் காழ்ப்புணர்வே இவர்களிடமிருந்து வருகின்றன. இந்தியாவின் ஏழ்மைக்கு முதலாளித்துவம் காரணமில்லை. காங்கிரசு கள்வர்களோ, பாரதிய ஜனதா கட்சி கொள்ளையர்களோ காரணம் இல்லை. நக்சலைட்டுகள், தொழிற்சங்கங்கள் என்பவற்றின் போராட்டங்களே இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கின்றன என்பது இவரின் அரிய கண்டுபிடிப்பு.

சாதி இல்லை, சமயம் இல்லை என்ற ஈ.வே ராமசாமி இவரின் முதல் எதிரி. மனிதர்களிற்குள் பிரிவு வேண்டாம் என்பவனை நமது தத்துவஞானிக்கு ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் நாலுவர்ணங்களை, மனிதர்களை பிறப்பின் மூலம் பிரிக்கும் இந்துமத குப்பைகளை தூக்கிப்பிடித்த காந்தியை போற்றிப்பாடுவார். முதலாளித்துவம், உலகமயமாக்கல், தனியார்மயம் என்பன இந்தியாவை சீரழிப்பது குறித்து வாய்திறக்க மாட்டார். ஆனால் கேரளாவில் கம்யுனிஸ்ட் கட்சி என்ற போலிகள் ஆட்சி செய்வதையே பொறுக்க முடியாமல் கேரளாவின் வறுமைக்கு கம்யுனிஸ்ட்டுக்களே காரணம் என்று அறச்சீற்றம் கொள்வார்.

"எல்லா மிருகங்களும் சமம், ஆனால் சில மிருகங்கள் கூடுதலாக சமமானவை" என்று ஜோர்ச் ஆர்வெல் என்ற பிரித்தானிய அரச உளவாளி எழுத்தாளர் என்ற முகமூடி போட்டுக் கொண்டு கம்யூனிசத்தை விமர்சித்தார். ஆனால் பிரித்தானிய அரச குடும்பம், பெருங்குடிப் பிரபுக்கள் என்று பிறப்பை வைத்துக் கொண்டு அந்தஸ்தையும், அதிகாரத்தையும் அனுபவித்த கூடுதலாக சமமான மிருகங்களைப் பற்றி அவர் வாயே திறக்கவில்லை. ஜோர்ச் ஆர்வெல் போன்றவர்களின் தமிழ்ப்பதிப்பு தான் இந்த ஜெயமோகன். அவர் எப்படி வேண்டுமென்றாலும் இருந்து விட்டு போகட்டும், ஆனால் இந்திய அமைதிப்படையை நியாயப்படுத்துபவரை பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களில் இருந்து வந்த கனடா தமிழ் இலக்கியத் தேட்டம் விருது கொடுத்து கெளரவிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது.