Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

எல்லாப் புகழும் இறைவனிற்கு, எல்லாப் பணமும் எங்களிற்கு

அந்த நாளைய இயக்குனர் கோபாலகிருஸ்ணன் தனது படங்களிற்கு "உயிரா மானமா", "குலமா குணமா", "பணமா பாசமா" என்று பெயர் வைப்பார். மானம், குணம், பாசம் தான் படத்தின் இறுதியில் வெல்லும் என்பதை படம் பார்க்கப் போகும் சிறுவர்களும் அறிவார்கள். ஆனால் முஸ்லீம் மக்களிற்காகவே தமது  உடல், பொருள், ஆவி அத்தனையையும் அர்ப்பணித்திருப்பதாக கூறும் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர்கள் மகிந்துவா, மக்களா என்ற கேள்விக்கு மகிந்து தான் எமது இறைவன் என்று மறுமொழி சொல்லியிருக்கிறார்கள். எல்லா வெற்றியும் மகிந்துவிற்கே என்று அடிமைசாசனம் எழுதிக்கொடுத்திருக்கிறார்கள்.

தமிழ் மக்களின் பிரச்சனைகளிற்கு வெறும் கண்துடைப்பாக இனவாத அரசுகள் பேச்சுவார்த்தைகள் நடத்தும் போது முஸ்லீம் மக்களின் பிரச்சனைகள் திடீரென்று இவர்களிற்கு ஞாபகம் வரும். கோமாவில் இருந்து திடுக்கிட்டு கண் முழிப்பார்கள். முஸ்லீம் மக்களின் பிரச்சனைகளிற்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என்று கூச்சல் போடுவார்கள். பேரினவாத அரசுகளுடன் தமது சொந்த முஸ்லீம் மக்களையே காட்டிக்கொடுத்து பெற்ற பதவிப்பிச்சைகளை ஒரு போதும் உதறி எறியாமல், "உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் உரிமைகளிற்காக போராடியே தீருவோம்" என்று வசனமழை பொழிவார்கள். ஒப்பந்தங்கள் எழுதிய மை உலர முதலே குப்பைக்கூடைக்குப் போய்விடும். இவர்களிற்கும் முஸ்லீம் மக்களின் பிரச்சனைகள் மறுபடியும் மறந்து போகும்.

முஸ்லீம் மக்களைக் கொன்ற புலிகளுடன் கூட்டு வைத்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எப்படி ஆதரவு அளிக்க முடியும் என்று தமது மகிந்து ஆதரவிற்கு ஒரு நியாயம் கற்பிக்கிறார்கள். புலிகள் பலத்துடன், அதிகாரத்துடன் இருந்த போது கூட்டமைப்பு புலிகளை ஆதரித்தது போலத்தான் இன்று உலகமகா கொலைகாரன் மகிந்து அதிகாரத்துடனும், ஊழல் பணத்துடனும் இருப்பதால் முஸ்லீம் காங்கிரஸ் மகிந்துவை பதவிக்காகவும், பணத்திற்காகவும் ஆதரிக்கிறது. பேரினவாத அரசுகளை ஆதரிக்கும் இவர்கள் என்றைக்காவது முஸ்லீம் மக்களின் பிரச்சனைகளை முன் வைத்து பேசியதுண்டா? எவனிற்கு என்ன பதவி என்பது தானே  இவர்களின் பிரச்சனை.

அதிகாரப் பகிர்வு தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அதிகாரப் பகிர்வு குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளும் கட்சியின் சில முக்கியஸ்தர்கள் அதிகாரப் பகிர்வு குறித்த தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆகா என்ன ஒரு அதிர்ச்சியான செய்தி. நீதிக்கும், நேர்மைக்கும் எடுத்துக்காட்டாக இந்த மண்ணிலே ஒரு சொர்க்கமாக விளங்கும் மகிந்துவின் ஆட்சியிலே இப்படி நடக்கலாமா என்று மேன்மை தங்கிய அமைச்சர் பெருமான் தலையை பிய்க்கிறார். பள்ளிவாசலிலே விக்கிரகம் ஒன்றைக் கண்டதைப்போலே பதறுகிறார்.  இன்றைவரைக்கும் முஸ்லீம், தமிழ், சிங்கள மக்களிற்கு சகல உரிமைகளையும் கொடுத்து வந்த நாட்டிலே எப்படி இது நடக்கலாம் திடுக்கிடுகிறார்.

ஆனால் இந்த ரணகளத்திலும் பதவிக்கு பங்கம் வராமலே வார்த்தைகளை குறுகத் தரித்த குறள் போலே அளந்து விடுகிறார் அமைச்சர் பெருமான் . அரசாங்கத்திலே உள்ல சிலர் தான் ஆப்பு வைக்கிறார்களாம். மகிந்துவும், குடும்பமும் தான் சகலதும் என்றிருக்கும் அரசிலே, மகிந்துவைப் பார்த்தவுடனேயே வாயையும், மற்றதையும் சேர்த்துப் பொத்திக் கொண்டு இருக்கும் கோமாளி மந்திரிகளையும் கொண்ட அரசிலே, மகிந்துவிற்கு தெரியாமலே இப்படி எல்லாம் நடக்குதாம். அண்ணே நீங்க பாவியா, அப்பாவியா?

பள்ளிவாசல்களை இடிப்பதற்கோ சேதப்படுத்துவதற்கோ இடமளிக்கமாட்டேன் என ஜனாதிபதி உறுதியளித்திருந்த நிலையில் அநுராதபுரம், மல்வத்துஓயா பள்ளிவாசல் ஹஜ் தினத்தன்று தீயிட்டு எரிக்கப்பட்டது முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்துவதாக இருக்கின்றது. அரசாங்கம் இது குறித்து உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் எம்.ரி.ஹஸனலி நேற்று தெரிவித்தார். கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்ட மஹிந்த ராஜபக்ஷ தான் இருக்கும் வரை ஒரு பள்ளிவாசலையாவது இடிக்கவோ அல்லது அதன் மீது தாக்குதல் நடத்தவோ இடமளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்தார். ஆனால் முஸ்லிம்களின் ஹஜ் தினத்தில் பள்ளிவாசல் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது வேதனையளிப்பதாகவுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாதவாறு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அண்ணே, செயலாளர் அண்ணே போன மாதம் தான் கழனிகங்கையிலே கரைக்கப்பட்ட ஏழை மக்களது குடும்பங்களினது கண்ணீர் துடைக்கப்பட்டது. அதுக்கு முதல்வாரம் தான் வன்னியிலே புதைக்கப்பட்ட தமிழ் மக்களினது குழந்தைகளிற்கு அன்பையும், ஆதரவையும் அதி உத்தம ஜனாதிபதி அழுது கொண்டே வாரி வழங்கினார்.  முந்தா நாள் தான் அம்பாறையில் அபகரிக்கப்பட்ட நிலங்களை முஸ்லீம்களிற்கும், தமிழர்களிற்கும் முழுசாகத் திருப்பிக் கொடுத்தாங்க. உங்களிற்கும் சீக்கிரமே நீதி கிடைச்சிடும். ஆனா அதுக்கு முதலே ஆராவது வீணாய்போனவன் நீங்களும் தானே அரசாங்கம் என்று உங்களை கேள்வி கேட்டிடப் போறான். ஆனா அதுக்கெல்லாம் அசரப்போற ஆட்களா நீங்கள். இதை வைச்சே இன்னொரு பதவியை கெஞ்சி வாங்க தெரியாதவங்களா நீங்க.

கொழுப்பு பூதங்களின் பிரச்சனை வெடித்த நேரத்தில், முஸ்லீம் பொதுமக்கள் காட்டிக் கொடுத்த தலைமைகளை காலில் போட்டு மிதித்து விட்டு களம் இறங்கியது போலவே, இப்போதும் பதவிக்காகவும், பணத்திற்காகவும் பல்லைக் காட்டும் இவர்களை உதறி எறிந்து விட்டு, இலங்கையின் ஒடுக்கப்படும் மக்களுடன் இணைந்து போராடுவதன் மூலமே பிரச்சனைகளிற்கு தீர்வு காண முடியும்.

-28/10/2012