Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மீண்டும் வேதாளம் முருக்க மரத்தில்

செய்தியும் செய்திக்கண்ணோட்டமும் 03-05-2010

மீண்டும் வேதாளம் முருக்க மரத்தில்
 
வர்த்தக நிலையங்களில் சிங்களத்தில் பெயர்ப்பலகை எழுதுதல்,  சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகை வீடு கொடுத்தல்,  சிங்களவர்களுக்கு வீடு, காணி விற்றல்,  தனியார் சிற்றூர்திகளில் சிங்கள பாடல்களை ஒலிபரப்புதல் ஆகிய நான்கு விடயங்களுக்கும் தீர்வு காணுமாறு கோரி,  தமிழ்ப் பற்றுள்ள தேசிய விடுதலை இயக்கம் என்ற அமைப்பு சார்பில் யாழ்ப்பாணத்தில் இந்தத் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டுள்ளது.

“இன்று தமிழ் மக்களாகிய நாம் மிகப்பெரிய ஆபத்திற்குள் சிக்கியுள்ளோம். எமது மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பேரினவாத அரசும் இராணுவமும் எமது இருப்பை அழித்துவிட பல உத்திகளை வகுத்துள்ளன. இந்த உத்திகளில் ஒன்று தான் தென்னிலங்கையில் இருந்து அநேக சிங்களவர்கள்,  சுற்றுலாப் பயணிகள் எனும் போர்வையில் எமது மண்ணை ஆக்கிரமித்து தமிழ் மக்களாகிய எம்மை சிறுபான்மையினராக்கும் முயற்சி.

இந்த நடவடிக்கைகள் ஒருவார காலத்திற்குள் முடிவுக்கு வருதல் வேண்டும். இல்லையேல் நீங்கள் கடும் விளைவுகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படும். அதியுச்ச தண்டனைகளையும் பெறுவீர்கள்.
எமது சக்தியான விடுதலைப் புலிகளின் இயங்குநிலை ஸ்தம்பிதமடைந்துள்ள அதே வேளை, எம்முடன் ஒத்துழைத்து சிங்களமயமாக்கலில் எமது தாய் மண்ணையும் தாய்மொழியையும் எதிர்கால சந்ததியையும் பாதுகாப்போம்”

இந்த “தமிழ்ப் பற்றுள்ள தேசிய விடுதலை இயக்கம்” என்ற துண்டுப் பிரசுரக்காரர்களிடம் சில கேள்விகள். இது போன்ற (புலனற்ற) பிரசுரங்களை உங்களைப் போன்றவர்கள் தென்னிலங்கையில் விட்டால், எம் மக்களின் நிலை எப்படியிருக்கும். கொழும்பு மாநகரம் உங்களின் “தாயக பூமியின்” ஒரு பகுதியோ?  இம் மாநகரம் முழுக்க எப் பாடல்கள் ஒலிக்கின்றன. பெரும்பாலான சொந்த-வாடகை வீடுகள் யாருடையவை?  இப்படித் தான் ஏனைய பல சிங்கள தலை நகரங்களின் நிலையும். உங்களைப் போன்றவர்களின் “குறுந் தேசிய இன வெறிப்பித்து” முள்ளிவாய்க்காலுடன் முற்றுப் பெற்றதாக நினைத்து, தமிழ் மக்கள் நின்மதிப் பெருமூச்சு விட்டார்கள். அம் மக்களைப் பற்றி கொஞ்சமாவது சிந்தியுங்கள். சிங்களப் பேரினவாதத்தின் திட்டமிட்ட அரசியல் நடவடிக்கைகளுக்கும், சாதாரண சிங்கள மக்களின் இயல்பான வாழ்லியல் நடவடிக்கைகளுக்கம், வித்தியாசம் தெரியாத, குறுந்தேசிய வனாந்திர அரசியலே எம்மை இந்நிலைக்கு கொண்டு சென்றது. எதிர்காலத்திலாவது மக்களின் அபிலாசைகனைக் கணக்கில் கொண்டு சரியானதைச் சொல்லுங்கள், செய்யுங்கள்.

ஊடகத்துறைக்கு எதிராக பிழை செய்திருந்தால் பதவி விலகுவேன்:   மேர்வின் சில்வா

ஊடகத்துறைக்கு எதிராக பிழை செய்திருந்து, அது  நிரூபிக்கப்பட்டால்,  தான் அமைச்சு பதவியில் இருந்து விலகுவதாக பிரதியமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் பின் மேர்வின் சில்வா ஊடகத்துறையின் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பல ஊடக நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

இந்நிலையில் இன்று கிருலப்பனையிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் மேர்வின் சில்வா ஊடகத்துறை பிரதியமைச்சருக்கான பொறுப்புகளை ஏற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகவியாளர் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உங்கள் சித்தப்பிரமையில் ஏற்பட்ட மாற்றம் தான் என்னவோ?  “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை கொடுப்பேன்” என்கின்றீர்கள். நித்தியானந்தா “சாமியார்”  போன்று செய்வது எல்லாவற்றையும் செய்துவிட்டு, நான் சட்டப்படி குற்றம் எதுவும் செய்யவில்லை. நிருபியுங்கள் பார்ப்போம் என்கின்றீர்கள். பிள்ளையான்-கருணா போன்ற்  “ஜனநாயகவாதிகளின் – ஜனநாயக நீரோட்டத் தத்துவததிற்கு”  நீங்களும் வந்தடைந்துள்ளீர்களோ?