Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

சாதியத்திற்கெதிரான போராட்டத்தில் -- யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ்

சாதியமும் தமிழ்த் தேசியமும்….பகுதி-4

1917-ல் நடைபெற்ற ரஸ்ய-அக்டோபர் புரட்சி, உலகின் அடக்கியொடுக்கப்பட்ட மானிடத்தை எழுச்சியுற வைத்தது. நாம் வாழும் உலகை வரலாற்று பொருள்முதல்வாதக் கண்கொண்டு பார்க்குமிடத்து, அக்டோபர் புரட்சிக்கு

முந்திய சமுதாய மாற்றங்கள் அனைத்தும், அதிகார வர்க்கங்களின் தொடர் அடக்குமுறைக்கு உட்பட்ட (அடங்கலான-ஏற்றத்தாழ்வான) சமுதாயங்களுக்கூடாகவே அசைவியக்கம் பெற்றுவந்துள்ளன.  ஆனால் அக்டோபர் புரட்சிக்கூடாகவே அடக்கியொடுக்கப்பட்ட வர்க்கங்களும், மக்களும் தமதாட்சியை நிறுவமுடியுமென்ற  மாக்சிஸத் தத்துவக்கோட்பாடு  உயிரோட்டம் உள்ளதாக்கப்படுகின்றது.

உலகில் அடக்கியொடுக்கப்படும் மானிடத்திற்காய் எண்ணற்ற (மத-சமூக-அரசியல்) தத்துவவாதிகள்- தத்துவ ஆசிரியர்கள் ஏகப்பட்ட தத்துவங்கள், தத்துவக்கோட்பாடுகளை தந்துள்ளார்கள். இவையனைத்தும் ஒடுக்கப்பட்ட மானிடத்தின் ஆட்சி மாற்றத்திற்கும், அரசியல் அதிகாரத்திற்குமானதல்ல. தவிரவும் இவை யாவும் ஏதோவொரு வகையில் அடக்கியொடுக்கும் வர்க்கங்களுக்கு இசைவாகவே சேவை செய்தன, செய்கின்றன.  இந்நிலையில் அக்டோபர் புரட்சியின் வீச்சு உலகின் ஓடுக்கபபட்ட மானிடத்தை எழுச்சியுற வைத்தது. அதோடில்லாமல் (மத-சமூக-அரசியல-போன்ற இன்னோரன்ன) தத்தம் தளங்களில் நின்று சிந்தித்த சிந்தனையாளர்கள், செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் பல சிந்தனைச்செயற்பாட்டு மாற்றங்களையும் ஏற்படுத்திற்று! இத்தகைய சமூக சிந்தனைப் பிரக்ஞைக்கூடானதோர்  பிரசவிப்பே யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் ஆகும்.

1920-ல்  எஸ்.எச்.கன்டி பேரின்பநாயகம், ஒறேற்றர் சுப்பிரமணியம் ஆகியோர் வாலிபர் காங்கிரஸின் ஸ்தாபகர்கள் ஆகின்றனர். இவர்களோடு எஸ்.சிவபாதசுந்தரம் போன்ற முற்போக்கு சமூக நல்லெண்ணம் கொண்ட பல இளைஞர்களும் வாலிபர் காங்கிரஸில் இணைகின்றார்கள்.

1924-ல் நடைபெற்ற மாநாட்டின் பத்துத் தீர்மானங்களில் மூன்றாவது முக்கிய தீர்மானம். தமிழர் சமுதாயத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சாதி-தீண்டாமைக்கு எதிரான கண்டனக்குரலாகும். இதை இல்லாது ஒழிப்பதற்கு வாலிபர் காங்கிரஸ் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமெனவும் அம்மாநாடு தீர்மானித்தது.


இக்காலகட்டத்தில் காங்கிரஸை நோக்கி "உங்களால் ஓடுக்கப்பட்ட மக்களின் வீடுகளில் உணவருந்த முடியுமா" என சாதித்திமிர் கொண்டவர்களால் சவால் விடப்பட்டது. இதையேற்று வாலிபர் காங்கிரஸின் கன்டி பேரின்பநாயகம் உட்பட்ட முக்கிய தலைவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளில் உணவருந்தி அச்சவாலை முறியடித்தனர்.

காந்தியின் வருகையும் சாதிமான்களின் குழப்பமும்

1927-ல் காந்தி இலங்கைக்கு வருகை தந்தார். அச்சமயம் அவரை யாழப்பாணத்திற்கு வாலிபர் காங்கிரஸ் அழைத்திருந்தது. யாழின் பல இடங்களில் அவருக்கான கூட்டங்களும் ஒழுங்குபடுத்தப்பட்டது. காந்தியின் யாழ்-வருகைக்கு முன்பாக, யாழின் பல இடங்களில் வாலிபர் காங்கிரஸால் பல தயாரிப்புக் கூட்டங்கள் நடாத்தப்பட்டன. இதில் ஓடுக்கப்பட்ட சமூகப்பிரதிநிதிகளும் பங்கெடுத்தனர். சில இடங்களில் இதைப் பொறுக்காத சாதிமான்கள் அவர்களின் பங்கெடுப்பின்றித் தாங்கள் "தனித்தமிழர்களாக" காந்திக்கு வரவேற்புக் கொடுக்கப் போகின்றோம் என வாதிட்டனர்.

வடமராட்சி துன்னாலையில் நடைபெற்றதோர் தயாரிப்புக் கூட்டத்தில் ஓடுக்கப்பட்ட மக்களின் பங்குபற்றல் பற்றிய வாதப்பிரதிவாதங்களில், காந்தியை வரவேற்பதில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமத்துவம் வழங்காது, அவர்கள் புறக்கணிக்கப்பட்டால் காந்தியை அழைத்து அவருக்கு கௌரவம்
வழங்குவதில எந்தவித அர்த்தமும் இல்லையெனக் கூறி சாதிமான்களின் கோரிக்கையை வாலிபர் காங்கிரஸ் தலைவர்கள் முற்றாக நிராகரித்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த சாதிவெறியர்கள், தெல்லிப்பழையில் காந்தியை வரவேற்பதற்கென அமைத்த வரவேற்புப் பந்தலை தீயிட்டு கொழுத்தி நாசப்படுத்தினர்.


இவ்வெதிர்ப்புக்கும் மத்தியில் 26-11-1927-அன்று யாழ் முற்றவெளியில் நடைபெற்ற கூட்டத்தில் காந்தி கலந்துகொண்டார். அக்கூட்ட மேடையில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளும் சமமாக பங்கெடுத்தனர்

இதையடுத்து 1929-ல் வாலிபர் காங்கிரஸின் 5-வது மாநாடு அன்று தமிழகத்தில் இருந்து விசேட பிரதிநிதியாக வருகை தந்திருந்த "’தமிழ்த்தென்றல்' வி.கல்யாணசுந்தர முதலியார் தலைமையில் காங்கேசன்துறையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் சம ஆசனம், சம போசனம் என்ற வாலிபர் காங்கிரஸின் உறுதியான கோட்பாடு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இதை அன்றைய டெயிலி நியூஸ் பத்திரிகை "யாழ்ப்பாணத்தில் காங்கிரஸின் புரட்சிகர நடவடிக்கை" என எழுதியிருந்தது. இம்மாநாட்டிலேயே ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட முன்னேடியான யோவல் போல் அவர்களும் வாலிபர் காங்கிரஸின் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட வரலாற்றுப் போக்கை திரும்பிப்பார்க்கையில், வாலிபர் காங்கிரஸின் போராட்டங்கள் அம்மக்களின் அடுத்த கட்டப்போராட்டங்களுக்கு ஓர் மைல் கல்லாகவே அமைக்கின்றது.

 1920-களில் வாலிபர் காங்கிரஸை நோக்கி உங்களால் ஒடுக்கப்பட்ட மக்களை சமமாக நடாத்த முடியுமா? என கேட்கப்பட்ட கேள்விக்கான "சாதிய சமூகச் சாத்தியங்களிலான செயற்பாடுகளின் தொழிற்பாடுகள்" இன்றும் எம் சமூகத்தில் தொடர்கின்றன.

இந்நிலையில் சாதிய-தீண்டாமையை புலிகள் எப்படி வலு சிம்பிளாக உடைத்தார்கள் என மார்தட்டி சவால் விடும் ஜான்பவாங்களும் உள்ளார்கள்.  இதற்கு புலம்பெயர் புலி நண்பர் ஒருவரின் இணைய தளப் பிரகடனத்தையும் பகிர்வோம்!

புலிகளின் புரட்சிகர நடவடிக்ககைள்!

"ராஜபக்ச்சாவின் பக்கம் சார்ந்து புலிப் பாசிஸ கூச்சல் போடும் எங்கட புகலிட உல்லாச பயணிகளின் கவனத்திற்கு!

"தமிழர் வரலாற்றில் இன்றுவரையும் ஒருவராலும்  நினைத்துக் கூடப் பார்கக முடியாத அளவு சாதி அடக்குமுறைக்கு எதிராக புரட்சிகர மாற்றங்களை கொண்டு வந்தது புலி இயக்கம்.

இந்த இயக்கத்தினால் தான் எங்கள் பலர் பெரும் நிர்வாக பொறுப்பை பெறமுடிந்தது. எங்களில் பலர் ஆயுதபாணி ஆக்கப்பட்டனர். எம்மிடம் ஆயுதம் இருக்கும்போது இன்று எமக்கு எதிராக கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்ட முற்படுபவர்களால் அன்று ஒரு துரும்பைக்கூட ஆட்ட முடியவில்லை. புலியின் அழிவினால் தமிழ்தேசியத்துக்கு எற்பட்ட அழிவைவிட அதனால் எங்கள்
சுயமரியாதைக்கு ஏற்பட்ட பேரழிவுதான் அதிகம்."

அப்போதய தமிழீழ காவல்துறையில் 90% வீதமானவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் வேலை பார்த்தார்கள்.

இக் காலகட்டத்தில் நினைத்துப் பார்க்க முடியாத அளவு கலப்புத்திருமணங்கள் நடந்து ஏறியது. புலிகள் இதை வரவேற்றார்கள். காதல் ஜோடிகளும் இச்சார்பு நிலையை சரியாக பயன்படுத்தினார்கள்.


அக்காலத்தில் பரவலாக கதைக்கப்பட்ட ஒரு வாழைக்குலை வழக்கு சாதிப்பாகுபாட்டை புலிகள் எப்படி கையாண்டார்கள் என விளக்க உதவும்.....


ஒரு ஆதிக்க சாதிப் பெண் தமிழீழ் காவல்துறைக்கு வந்து "தம்பி எனது வாழைக்குலையை வெட்டிப் போட்டாங்கள்” என்றார்.


”யாரயம்மா வெட்டினது?” 

"வேறு ஆருதம்பி இங்க வாரது, அவன் பக்கத்து வீட்டு நளவந்தான்”

தமிழீழ காவல்துறை சம்பந்தப்பட்ட அண்ணையை கூப்பிட்டு விசாரித்து விட்டு, அண்ணையை 50 ரூபா வாழைக்குலைக்கு கட்டிப்போட்டு போகும்படி கூறிவிட்டு; "அம்மா சாதிவேறுபாடு பார்ப்பது தமிழீழ்ச் சட்டப்படி குற்றம் நீங்கள் அவரை நளவன் என சாதி பெயரில் அழைத்ததால் உங்களுக்கு இரு கிழமை கடூழிய சிறைத்தண்டணை" என்று கூறி அவரை சிறையில் அடைத்தது. சாதி பாகுபாடு பார்த்த இன்னும் ஒருவருக்கும் பெரும் கடூழியத் தண்டணை ஒன்று கொடுத்தார்கள் அது பற்றி இங்கு குறிப்பிட விரும்பவில்லை...


"புலிகளின் பல சட்டங்களையும், நடவடிக்கைகளையும் நான் வெறுத்தாலும் புலிகளின் தலைமையிலான தமிழ்தேசியம் ஒடுக்கப்பட்ட எங்களின் பொற்காலம் எனபதை துணிந்து கூறலாம்". மிகுதி நேரம் கிடைக்கிற போது...............

"புரட்சிகரமான புலிசார் சமூகவியலாளர்கள் சொல்வதுபோல, தமிழர் வரலாற்றில் இன்றுவரையும் ஒருவராலும் நினைத்துக் கூடப் பார்கக முடியாத அளவு சாதி அடக்குமூறைக்கு எதிராக புரட்சிகர மாற்றங்களை கொண்டுவந்தது புலி இயக்கம்" எனும் போது….....

"சாதிகள் இல்லையடி பாப்பா பாடல் வரிகள் தெரியுமா? தெரியாவிடின் அதைப்படி,  கடைப்பிடி" இதுதான் எங்கள் சாதிய ஒழிப்புக் கொள்கை!  இல்லாவிடில், குற்றங்களுக்கு ஏற்ப தமிழீழச் சட்டத்தின்படி….சாதாரண-மத்திம-அதியுயர், "சொல்ல விரும்பாத" பெரும் தண்டனைகள் எல்லாம் தருவோம. இதுதான் புரட்சிகர நடவடிக்கைகள் என்றால்….? இதனூடாக சாதி ழிந்தது என்றால்…?

புலிகளின் "தமிழர் வரலாற்று ஆட்சி"யில் சாதி சொன்னதற்கும், களவு எடுத்ததிற்கும் கொடுத்த தண்டனைகள்தான்  "புரட்(ள்)சிகர"மானவைகளே தவிர, ஆனாலும் அதுகொண்டும்---சாதியும்-களவும்—அதன் இன்னோரன்னவும் ஒழிக்கப்படவில்லை.

"புலிகளின் பல சட்டங்களையும் நடவடிக்கைகளையும் நான் வெறுத்தாலும்"…….? எனத் தாங்கள் வெறுத்திடும் போதினிலே, தாங்களே வெறுக்கின்ற, மக்களுக்கு உதவாச் சட்டங்கள் இராணு நடவடிக்கைகளால்  தமிழ் சமூகத்தில் புரையோடிப்போன சாதி-தீண்டாமை ழிந்ததா? ழியுமா?

"ஓரம் போ, ஓரம் போ ருக்குமணி வண்டி வருகுது" என்ற சினிமாப் பாடல் போலத்தான், உங்கள் காவல்துறை வண்டி சாதி பார்ப்பவனை தாண்டிச் செல்லும்வரை அவன் சாதி பார்க்கான்! ஓரம் போவான்!  மற்றப்படி அவன் ஓர் "சாதித் தமிழன்தான்"!  இது இன்றைய மகிந்த "ராணுவ வண்டிகளுக்கும் தமிழ்மக்களுக்கும்" பொருந்தும்!

-தொடரும்

18/03/2012

சாதியமும் தமிழ்த் தேசியமும் (பகுதி-1)

சாதியமும் தமிழ்த் தேசியமும் (பகுதி-2)

சாதியமும் தமிழ்த் தேசியமும் (பகுதி-3)