Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

நிமலருபனைப் படுகொலைச் செய்தது அரசாங்கமே! கோட்டை புகையிரத நிலையம் முன் ஆர்ப்பாட்டம்!



நிமலருபன் மரணத்திற்கு நியாயம் வேண்டும் - வவுனியா சிறைச்சாலையில் சிறை அதிகாரிகளினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த அரசியல் கைதி நிமலரூபனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் முன்னால் ஆர்ப்பாட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் 2.30மணியளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 'அரசியல் கைதிகளை விடுதலைச் செய்வதற்கான அமைப்பு' அழைப்பு விடுத்திருந்தது.

நாட்டில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிமலரூபனின் படுகொலை மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் இன்று நடைபெற்ற அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என பலர் கட்சி, மத பேதம் பாராது கலந்து கொண்டதுடன், அரசாங்கத்திற்கு எதிரான தமது எதிர்ப்பலைகளையும் வெளிப்படுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், மக்கள் கண்காணிப்பு குழுவின் அமைப்பாளருமான மனோ கணேசன் இவ்வாறு குறிப்பிட்டார்,



நிமலரூபனின் படுகொலையை அடுத்து அவருக்கு நியாயம் வழங்கப்படவேண்டும் என்பதற்காக தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஒன்றினைந்து ஒருமித்து குரல் எழுப்புகின்றோம்.

நிமலருபனைப் படுகொலைச் செய்தது இந்த அரசாங்கமே. தமிழ் அரசியல் கைதிகளை அடித்து துன்புறுத்தி நாட்டின் பல்வேறு சிறைகளிலும் அடைத்து வைத்திருக்கும் இந்த அரசாங்கம் அவர்களுக்கு தேவையானவர்களை மாத்திரம் விடுதலை செய்கின்றது.

அந்த வரிசையில் கருணா, பிள்ளையான், கே.பி, ஏன் தமிழினியையும் விடுதலை செய்துள்ளது. ஆனால் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை.

நிமலருபன் தொடர்பில் அரசு இழைத்திருப்பது பாரிய தவறு என்பதுடன், இது பாரிய கொலையாகும். இந்த கொலைக்கு அரசாங்கம் கூடிய விரைவில் பதில் தரவேண்டும் எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மனித உரிமை செயற்பாட்டாளாரும் நாம் இலங்கையர் அமைப்பின் தலைவருமான உதுல் பிரேமரத்ன இவ்வாறு தெரிவித்தார்,

விடுதலைப் புலிகள் என அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் அவர்கள் எமது சகோதரர்கள் என குறிப்பிடுவதற்கு நான் அச்சப்படமாட்டேன்.

இவ்வாறான ஒரு சகோதரனையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொலை செய்தனர். அரசாங்கத்தின் பாதுகாப்பு தரப்பினரால் விசேடமாக கொழும்பிலிருந்து சென்ற சிறைச்சாலை அதிகாரிகளினால் தாக்கப்பட்டு நிமலரூபன் உயிரிழந்துள்ளார்.

இதனை நாம் மறக்க கூடாது. இது சாதாரண ஒரு விடயமல்ல. கைது செய்யப்பட்டு அரச பாதுகாப்பு பிரிவின் பாதுகாவலில் இருந்த ஒருவர் அடித்துக் கொல்லப்படுவதானது ஒரு பாரிய விடயமாகும். இதனை யாரும் மறந்துவிடக்கூடாது.

இந்த தாக்குதலானது இந்த நாட்டிலே தமிழர்களுக்கு உரிமை இல்லை, அப்படி உரிமை கோரினால் தடியடிப் பிரயோகம் நடத்தப்படுவதுடன், மண்டை உடைக்கப்படும் என்பதனையே வெளிப்படுத்தியுள்ளது.

எனவே கொல்லப்பட்ட நிமலருபனுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்பதுடன், அவரது இறுதிக் கிரியைகள் அவரது சொந்த கிராமத்திலேயே நடத்தப்படவேண்டும் எனவும் உதுல் பிரேமரட்ண வலியுறுத்தினார்.

http://www.lankaviews.com/ta/