Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

ஜெயமோகனும் - ஈழத்து இலக்கியமும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்

கலை-இலக்கியத்தில் மக்களின் வாழ்வியல் சாரத்தை மறுப்பதில் இருந்துதான், ஜெயமோகனும் - "ஈழத்து இலக்கிய" ஜாம்பவான்களும் கொடுக்கு கட்டிக்கொண்டு நிற்கின்றனர். நடக்கும் வாதப் பிரதிவாதங்களின் அரசியலென்பது, ஒரு நாணயத்தின் இருபக்கங்களாக இருக்கின்றது. மக்களின் வாழ்வியலை ஒடுக்குகின்ற சமூகப் பொருளாதார சாரத்தை கொண்டாட்டமாக கொண்டாடும், கலை இலக்கியத்தையே ஜெயமோகனும், "ஈழத்து இலக்கிய"வாதிகளும் படைப்பாக்குகின்றனர்.

ஈழத்துக் கலை - இலக்கியவாதிகளின் எந்தப் படைப்பும், எந்தப் படைப்பாளியும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒருங்கிணைந்த விடுதலைக்கான சிந்தனையின் அடிப்படையில் செயற்படுவதைக் காண முடியாது. ஒடுக்கும் இந்தச் சமூக அமைப்பின் உள்ளான அக முரண்பாடுகளை சார்ந்து நின்று தான், கும்மி அடிக்க முடிகின்றது. நானும் நீயும் ஒன்று என்று கூறுமளவுக்கு,     ஈழத்து கலை இலக்கிய போக்கில் ஜெயமோகனும் பயணிக்கின்றார்.

இந்தியாவில் பார்ப்பனிய பாசிச மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக, ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களும் - இலக்கியங்களும் வளர்ச்சி பெற்றுக்கொண்டு இருக்கும் காலத்தில் தான், ஜெயமோகன் போன்ற பார்ப்பனிய இலக்கியவாதிகளின் கூத்தும் கும்மாளமும் அரங்கேறுகின்றது. இந்தியாவில் பார்ப்;பனிய இலக்கிய பிரதிநிதியாக இருக்கக்கூடிய ஜெயமோகன் போன்றவர்கள், கலை கலைக்காக என்று வாதிடக் கூடிய கூட்டத்தின் பிரதிநிதியே. ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்த இலக்கியத்தின் பிரதிநிதிகளல்ல. ஈழத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான ஒடுக்கும் இலக்கியமாக சீரழிந்துவிட்ட இலக்கிய  சூழலில், தங்களையொத்த ஜெயமோகனின் அங்கீகாரத்துக்கான முரண்பாடு தான் -  ஈழத்தில் எதிரும் புதிருமான கருத்துகளும்;, விவாதங்களுமாக அரங்கேறுகின்றது.

இந்த விவாதம் ஈழத்து ஒடுக்கப்பட்ட மக்களின் இலக்கியம் குறித்தான அக்கறையில் இருந்தோ, அதை முன்னிறுத்தியோ ஜெயமோகனுக்கு எதிராக யாரும் தங்களை முன்னிறுத்தவில்;லை. ஈழத்து இலக்கியம், ஒடுக்கப்பட்ட மக்களின் கலை - இலக்கியமாக இல்லை என்பது உண்மை.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானதே, ஈழத்து கலை - இலக்கியமாக இன்று பரிணமித்து இருக்கும் சூழலில், சாராயத்துக்கு தொட்டுக் கொள்ளும் ஊறுகாய் போன்று - சமூகப் பிரச்சனைகள் மாறி இருக்கின்றது.  ஒடுக்கும் சமூக அமைப்பு முறைமைக்குள் தீர்க்கக் கூடிய முரண்பாடாக, முரண்பாடுகளை குறுக்கிக் காட்டுவதே, கலை - இலக்கியமாகின்றன. அதாவது சினிமாவில் முரண்பாடுகளை முன்வைத்து கனவுலகில் தீர்வு காண்பது போன்று, ஈழத்து இலக்கியம் மக்களை சார்ந்து நிற்பதில்லை.  தேசியம், சாதியம், ஜனநாயகம், பெண்ணியம், பாலியல், வர்க்கம்  .. போன்ற எல்லாவற்றையும், ஒடுக்கும் தரப்பு கையாளும் அதே உத்தியில் பயன்படுத்துகின்றனர். ஒடுக்கும் இந்த சமூக அமைப்பில் மாற்றமின்றி முரண்பாடுகளை பற்றி பேசும் ஈழத்து இலக்கியத்தில், பெரும் எண்ணிக்கையில் வலதுசாரிய எழுத்தாளர்கள் இருப்பது என்பது, தனியுடமை சமூக அமைப்பு முறைமை சார்ந்த இலக்கியத்துக்கு முரணானது. இது தான் ஜெயமோகனின் தர்க்கம்.

அதாவது சொத்துடமை என்பது செல்வம் சிலரிடம் குவிவதை அடிப்படையாக கொண்டது போன்று, இலக்கியம் என்பது விரல்விட்டு எண்ணக் கூடிய சிலரை முதன்மையாகக் கொண்டது. இந்த வகையில் ஈழத்தில் ஒரு சிலரை முன்னிறுத்தும் சமூக அமைப்பு முறைமைக்குள் நின்று ஜெயமோகன் கோருவது என்பது, தனியுடமை சமூக அமைப்பு முறைமையில் இயல்பானது, இயற்கையானது. அதற்குரிய தகுதியை அடைவதற்காக, ஜெயமோகன் குறித்ததான கூச்சலே ஈழத்து இலக்கியவாதிகளின் பொது அங்கலாய்ப்பு.

ஈழத்து கலை இலக்கியம் என்பது, வெள்ளாளிய இலக்கியத்தை தூக்கி நிறுத்துவது தான்.

1940 களில் இலங்கையில் அறிமுகமான மார்க்கியமும் - வர்க்கப் போராட்டமும், அதைத் தொடர்ந்து 1960 களில் சாதிய போராட்டமும் தான், தமிழில் முற்போக்கான இடதுசாரிய இலக்கியத்துக்கு வித்திட்டது. 1960 களில் ஒடுக்கப்பட்ட சாதிகள் தங்கள் மீதான தீண்டாமைக்கு எதிரான போராட்டமானது, ஒடுக்கப்பட்ட இலக்கியத்துக்கான கருவாக மாறியது. இப்படி ஈழத்து இலக்கியம் அன்று வெள்ளாளியமல்லாத ஒடுக்கப்பட்ட மக்களின் கலை - இலக்கியத்திற்கு வித்திட்டது.

தீண்டாமைக்கு எதிராக வித்திடப்பட்ட போராட்டமானது, சாதிய ஒழிப்பை முழுமையாக கொண்டு இருக்கவில்லை. மாறாக வெள்ளாளிய சமூக வரம்புக்குள் தீண்டாமையை ஒழிக்கும் சீர்திருத்தமாக மாறியதால், சாதியொழிப்புக்கு மாறாக தீண்டாமை ஒழிப்பு வெள்ளாளியமாக வடிந்த போன அரசியல் பின்னணியில், ஒடுக்கப்பட்ட இலக்கியத்தை எதிர்த்து வெள்ளாளிய இலக்கியமும் தோற்றம் பெற்றது. ஒடுக்கப்பட்ட இலக்கியத்தை மறுதளிக்கும் வண்ணம் திறனாய்வுகளும், இலக்கியமும் தோற்றம் பெற்றது. ஒடுக்கப்பட்ட மக்கள் இலக்கியத்தின் சாரத்தை, ஒடுக்கும் வெள்ளாளிய சிந்தனைக்குள் கலை இலக்கியமாக மடைமாற்ற முடிந்தது.

1970 களில் ஒடுக்கப்பட்ட மக்கள் இலக்கியம் என்பது அருகிவர, ஒடுக்கும் இலக்கியம் மேன்மை பெற்றது. ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்த வந்த எழுத்தாளர்கள் கூட, ஒடுக்கும் வெள்ளாளிய சிந்தனையிலான படைப்புகளையே தந்தனர். ஜெயமோகனின் கூட்டாளியான எஸ்.பொ வும், எஸ்.பொ வை முன்னிறுத்திய ஜெயமோகனின் உரையும், ஒடுக்கும் தங்கள் இலக்கியத்தின் பெருமையை பற்றியே பேச முடிகின்றது.

1980 களில் ஒடுக்கப்பட்ட மக்களின் தேசியவிடுதலைப் போராட்டத்தின் தலைமை, தமிழ் மக்களை ஒடுக்கும் வெள்ளாளிய சிந்தனையிலான தலைமையாக சீரழிந்த பின்புலத்தில், மறுபடியும் ஒடுக்கப்பட்ட இலக்கியமும் கருவுற்றது. வர்க்கம், தேசியம், பெண்ணியம், ஜனநாயகம் என்று ஒருங்கிணைந்த குரல்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் போராட்டங்களுக்கும் - இலக்கியத்துக்கமான கருக்களை கொண்டதாக உருவானது. மார்க்சியம், இடதுசாரியம் .. சார்ந்த சிந்தனையானது, ஒடுக்குமுறைமைக்கு எதிரான ஆயுதமானது.

1990 களில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் போராட்டங்களை, ஒடுக்கும் தமிழ் வெள்ளாளிய தலைமை வன்முறை மூலம் அழித்தொழித்ததன் மூலம், ஒடுக்கப்பட்ட மக்கள் போராட்டங்கள் முடிவுக்கு வந்தது. ஒடுக்கப்பட்ட மக்கள் குரல்கள், மக்களின் நடைமுறையிலிருந்து விலகிய கருத்துருவாக்கமாகவே மார்க்சியமும், இடதுசாரியமும் எஞ்சியது. கொழும்பிலும் - புலத்திலும் கருத்துருவமாக எஞ்சி இருந்த ஒடுக்கப்பட்ட மக்களின் சிந்தனை முறை, நடைமுறையின்றி  சீரழியத் தொடங்கியது. ஒடுக்கப்பட்ட மக்களின் ஒருங்கிணைந்த விடுதலையை மறுதளிக்கும் வண்ணம், மார்க்சியத்தை மறுதளிப்பது கலை இலக்கியமானது. புலம்பெயர் இலக்கிய சந்திப்பு இதற்கான மையமானது. இந்தப் பின்புலத்தில் தலித்தியமாக - பின்நவீனத்துவமாக பரிணமித்ததன் மூலம், வெள்ளாளியமாக மறுவடிவம் எடுத்தது.

இடதுசாரியம், பெண்ணியம், தலித்தியம், பின்நவீனத்துவம், ஜனநாயகம்… என்ற எந்த முகத்தை போட்டு இருந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை அடிப்படையாக கொண்டு இருக்கவில்லை. புலியெதிர்ப்பும் -  ஜனநாயகமும் "முற்போக்கானது" "புரட்சிகரமானது" என்ற, போலி வேசத்தையே போட்டுக் கொள்ள முடிந்தது.

2009 இல் புலி அழிவுடன் புலியெதிர்ப்பு முடிவுக்கு வர, புலி மறுத்த ஜனநாயகம் மீண்ட போது, ஒடுக்கப்பட்ட மக்கள் மீட்பாரின்றி அடிமையாக்கப்பட்டனர். புலம்பெயர் கலை - இலக்கியம் மற்றும் அரசியல், மக்களைக் கண்டுகொள்ளவேயில்லை. இந்த வகையில் 2009 க்குப் பிந்தைய  கலை - இலக்கிய உலகமானது ஒடுக்கப்பட்ட மக்களை கண்டுகொள்ளாது, ஒடுக்கும் வெள்ளாளிய சிந்தனையில் முதுகு சொறிவதையும், சுய அங்கீகாரத்துக்கும் - அடையாளத்துக்குமான போராட்டத்தை, கலை -  இலக்கியமாக்கி இருக்கின்றது.  ஜெயமோகனுடன் தர்க்கம் இதற்குள் தான் அரங்கேறுகின்றது.

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையுடன் தொடர்ந்து பயணிக்க கூடிய வகையில், கலை - இலக்கியம் எதையும் இன்று காட்ட முடியாது. இன்று கலை - இலக்கியமாக இருப்பது ஒடுக்கப்பட்ட மக்களின் இலக்கியமல்ல. மாறாக இருப்பது ஒடுக்கும் சமூக அமைப்பினுள்ளான அக முரண்பாட்டு இலக்கியம் தான். அதாவது வெள்ளாளிய சமூகம் சார்ந்த சிந்தனையிலான ஒடுக்கும் இலக்கியம் தான்.