Mon03182024

Last updateSun, 19 Apr 2020 8am

இன-மத-சாதிகளின் அதிகாரம் குறித்து..!?

உலகமயமாதல் முன்வைக்கும் நவதாராளவாதத்தையே, பேரினவாத அரசு முன்னெடுக்கின்றது. நவதாராளமயம் மூலம் மக்கள் சுரண்டப்படுவதை மூடிமறைக்கவே, மக்களிடையே இன-மத-சாதி.. போன்ற சமூக வேற்றுமைகளைத் தூண்டிவிடுவதன் மூலம், அரச ஒடுக்குமுறைகளை ஏவுகின்றது. இன-மத-சாதி மோதலை தூண்டி விட்டவர்கள், அரசின் பொருளாதார அடிப்படையில் தமக்குள் முரண்படாது ஒன்றுபடுகின்றனர்.

நவதாராளவாத சமூகப் பொருளாதார அரசியல் பின்னணியில், இனம்–மதம்–சாதியை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் கட்சிகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இந்த அரசியல் பின்னணியில் இன-மத-சாதி ரீதியாக சிந்திக்கின்ற அறிவியலாக மனித சிந்தனையைக் குறுக்கி, அதை வாழ்க்கை முறையாக்கி விடுகின்றனர். இந்த இன-மத-சாதிவாதக் கட்சி அரசியல், அறிவியல், வாழ்க்கைமுறை, சிந்தனை.. என்று அனைத்தும், எந்த விதிவிலக்குமின்றி, நவதாராளவாத முதலாளித்துவ முறைமையை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது.

 

இப்படி நவதாராளவாத பொருளாதார சுரண்டல் முறைமையை தங்கள் அரசியல் கொள்கையாகக் கொண்ட கட்சிகளும், சிந்தனைகளும்;…, தங்கள் இன-மத-சாதிகளைச் சார்ந்து மக்களுக்கு சேவை செய்வதாகவே காட்டிக்கொள்ள முனைகின்றது. சொந்த இன-மத-சாதி மக்களை ஏமாற்ற, பிற இன-மத-சாதி மக்கள் மேலான இன-மத-சாதி ஒடுக்குமுறைகளைக் கையாளுகின்றனர். பிற இன-மத-சாதி மக்களை ஒடுக்குவதன் மூலம் கிடைப்பதே, சொந்த இன-மத-சாதிக்கு கிடைக்கும் உரிமைகள் - சலுகைகள் என்று கூறுகின்றனர்.

பிற இன-மத-சாதி மக்களால் தான், சொந்த இன-மத-சாதி மக்களின் வாழ்வியலின் அவலம் என்று, அனைத்து இன-மத-சாதி வாதிகளும் கூறுகின்றனர். தாங்கள் பொருளாதார ரீதியாக ஆதரிக்கும் நவதாராளமய முதலாளித்துவமே, ஒட்டுமொத்த மக்களின் அவலங்களுக்கு காரணமாக இருக்க, பிற இன-மத-சாதி மக்களின் வாழ்க்கையே காரணம் என்கின்றனர். அதாவது முதலாளித்துவச் சுரண்டலை மூடிமறைக்கும், இன-மத-சாதிவாதிகளின் கொள்கை இதுவேயாகும்.

இந்த வகையில் இந்த இன-மத-சாதி ஒடுக்குமுறையை கையாள்வதில், இலங்கையில் இருக்கும் எந்த இனத்துக்கும், சாதிக்கும், மதத்துக்கும் விதிவிலக்கு கிடையாது. கிடைக்கும் அதிகாரத்தைப் பொறுத்தே, ஒடுக்குமுறையின் அளவுகளும், இடங்களும் மாறுபடுகின்றன. அதேநேரம் தன் இன-மத-சாதி சுரண்டும் வர்க்கம் சார்ந்து, தன் சொந்த இனத்தை - மதத்தை - சாதியை சுரண்டுவதும், ஒடுக்குவதுமே, இனவாதத்தின் - சாதிவாதத்தின் - மதவாதத்தின் அடிப்படையாக இருக்கின்றது.

நவதாராளமயமானது அன்னிய சுரண்டும் மூலதனத்தின் நலனை அடிப்படையாகக் கொண்டது. இந்த வகையில் ஒட்டுமொத்த மக்களுக்கும் எதிரான தரகுமுதலாளித்துவத்தைச் சார்ந்து, ஏகாதிபத்திய மூலதனத்தை விரிவாக்குவதே அரசின் பொருளாதாரக் கொள்கையாகும். இந்த கொள்கையுடன் எந்த இனத்தை - மதத்தை – சாதியைச் சேர்ந்த, தலைமைமைகளும் முரண்படுவதில்லை. இலங்கை மக்களைச் சூறையாடும் அன்னிய நவதாராளவாத மூலதனத்துக்கு ஆதரவான, தேசிய மூலதனத்துக்கு எதிரான நவதாராளவாதக் கொள்கையே, இனவாதத்தினதும், மதவாதத்தினதும், சாதிவாதத்தினதும் அடிப்படைக் கொள்கையாகும்;. இது இயல்பில் இலங்கை மக்களை வரைமுறையின்றி சூறையாடுவதற்கு உதவுவது தான்.

மக்களின் சமூகப் பொருளாதார அடிப்படை ஆதாரங்கள் தொடங்கி அரசின் சமூக நிதிகள் வரையான அனைத்தும், மக்களுக்கு கிடைப்பதை தடுக்கின்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டதே நவதாராளவாதக் கொள்கை. இந்த வகையில் ஒட்டுமொத்;த மக்களுக்கு கிடைத்து வந்த வாழ்வியல் வளங்களை மறுதளிப்பதை மூடிமறைக்கவும், பறிக்கவும், இன-மத-சாதியாக பிரிந்து நின்று இன-மத-சாதி மக்களுக்கான சலுகைகள், சேவைகள் பற்றி பேசுவதே இலங்கை தேர்தல் அரசியலாகியிருக்கின்றது.

இந்த இன-மத-சாதி வாதம் மூலம் சொந்த இன-மத-சாதி மீதான ஒடுக்குமுறை மூலம் ஆதிக்கம் வகிக்கும் நவதாராளவாத சுரண்டும் வர்க்கத்துக்கு சேவை செய்வது தொடங்கி, பிற இன-மத-சாதி மக்களை வெறுத்து ஒடுக்குமாறு பார்த்துக் கொள்கின்றனர்.

நவதாராளவாத இன-மத-சாதி வாதமானது, தேசிய பொருளாதாரத்தைக் கொண்டிருப்பதில்லை. இதன் பொருள், தேசிய பொருளாதாரத்தை அடிப்படையாக் கொண்டிராத அனைத்தும், நவதாராளவாதமாகவும் இருக்கின்றது.

இந்த அடிப்படையில் உருவானதே தமிழ் - முஸ்லீம் - மலையக - சிங்கள  தலைமைகள்.  இவர்கள் அனைவரும் நவதாராளவாத பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட, இனவாதத்தையோ, மதவாதத்தையோ, சாதிவாதத்தையோ முன்வைக்கின்றனர். இலங்கையில் நவதாராளவாத பொருளாதாரத்தை முன்னெடுப்பதில் ஒன்றுபட்டு நிற்கும் இத் தலைமைகள், மக்களுக்குள் இன-மத-சாதி முரண்பாடுகளை தோற்றுவிக்கின்றனர். மக்களைப் பிரித்து சுரண்டுகின்ற தங்கள் நவதாராளவாத சுரண்டல் சமூக பொருளாதார அரசியல் கண்ணோட்டத்தின் அடிப்படையில், அரசை அங்கீகரித்தபடி கூடிக் குலாவுவதும், முரண்படுவதும் நடக்கின்றது.

அரசுடன் கூடிக் கிடைக்கும் அதிகாரத்தைக் கொண்டு பிறஇன-மத-சாதி மக்களை ஒடுக்கியபடி தன் இன மக்களை சுரண்டுவதும், அரசுடன் முரண்பட்டபடி பிற இன-மத-சாதி மக்களை எதிரியாகக் காட்டி சொந்த இன-மத-சாதி மக்களை சுண்டுவதும், இன-மத-சாதி வாதக் கட்சிகளின் நவதாராளவாதக் கொள்கையாக இருக்கின்றது.

இப்படி மக்களைப் பிரித்து வைத்திருப்பதும், மோத வைப்பதும், சமூகரீதியாக ஒடுக்கி வைத்திருப்பது.. என்று எல்லா கேடுகெட்ட மனிதவிரோத கொள்கைகளையும் ஆதரிக்கும் வரை, மனிதத்தனத்தை எம்மில் காண முடியாது. இனம்-மதம்-சாதி.. அடையாளம் கடந்து சிந்திக்கவும் செயற்படவும், அதேநேரம் இனம்-மதம்-சாதி.. அடையாளங்களை, ஒடுக்குமுறைகைளையும் எதிர்த்துப் போராடவும் கற்றுக்கொள்ள வேண்டும். இதிலிருந்து தான், மனிதவிரோத ஒடுக்குமுறை, சிந்தனை, வாழ்க்கைமுறையில் இருந்து மனிதனாக வாழமுடியும்.