Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

500, 1000 ரூபா நோட்டுக்களை செல்லாததாக்கிய, மோடி தலைமையிலான முதலாளிகள்

வருடாந்தம் 25 லட்சம் கோடி கறுப்பு பணத்தை உருவாக்கும் இந்தியத் தனியுடமை முறையானது, வெளிநாட்டு வங்கிகளில் 70 லட்சம் கோடி கறுப்பு பணத்தைப் பதுக்கி வைத்திருக்கின்றது. 

இப்படி உண்மை இருக்க பணச் சுழற்சியிலான பரிவர்த்தனையே கறுப்பு பணத்தை உருவாக்குவதாகவும், வங்கிப் பரிவர்த்தனையில் கறுப்பு பணம் கிடையாது என்றும் கூறி, ஒருங்கிணைந்த ஒரு தாக்குதலை மோடி தலைமையிலான முதலாளிகள் நடத்தி இருக்கின்றனர். பணப் புழக்கத்தில் இருந்த, 85 சதவீதமான 500, 1000 ரூபா பண நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த அந்தக் கணம் முதல், வர்க்க ரீதியான பாரிய தாக்குதலை நடத்தி இருக்கின்றனர். 

அன்றாடம் உழைத்து வாழும் மக்கள் உணவுண்ண முடியாது பட்டினி கிடக்க, ஒரு பகுதி மக்கள் செல்லாத பணக்கட்டுக்களைக் கொண்டு தங்கத்தை வாங்கி கொள்வதுமாக, இந்திய நாடு வர்க்க ரீதியாக இரண்டுபட்டது. உதாரணமாக பணம் செல்லாது என்று அறிவித்த அன்று, பம்பாய் நகரின் தங்க விற்பனையானது முந்தைய நாளை விட 23 (16 கோடி ரூபா) மடங்கு அதிகமாக விற்பனையானது. நாடு முழுக்க, செல்லாத 500, 1000 நோட்டுகள் தங்கமாக மாறிக் கொண்டு இருந்தது.  இப்படி செல்லாத பணம் தங்கமாக மாறும் பின்னணியில் தங்கமாகவும், ரியல் எஸ்டேட்டாகவும் குவிந்து கிடக்கும் கள்ளப் பணம் பெருந்தொகையானது. 

கள்ளப் பண ஒழிப்பு என்ற பெயரில், வங்கிச் செயற்பாட்டுக்கு மக்களைக் கொண்டு வருவதை மோடி தலைமையிலான பன்நாட்டு முதலாளிகள் விரும்புகின்றனர். இந்திய சந்தையானது இரண்டாக இயங்குவது தான், இதற்கான காரணமாகும். உற்பத்தியும், நுகர்வும் மோடி தலைமையிலான பன்னாட்டு முதலாளிகளின் சந்தைக்கு வெளியில் தனித்துவமான ஒன்றாக  இயங்குவதற்கு, வங்கி வெளியிலான பணச் சுழற்சி காரணமாக இருக்கின்றது. இது தனியான மூலதனச் சுழற்சியை உருவாக்குகின்றது. வங்கிக் கட்டமைப்புக்கு வெளியில், பெரும் தொகையான இந்திய மக்களின் உழைப்பும், நுகர்வும் நடந்து வருவதால் மோடி தலைமையிலான முதலாளிகளால் சுரண்டலை முழுமையாக நடத்த முடிவதில்லை. 

உதாரணமாக ஒவ்வொரு நாளும் வர்த்தக நடவடிக்கையில் 87 சதவீதமானது, பணத்தாள் மூலம் தான் நடந்து வருகின்றது. மொத்த வர்த்தக நிலையங்களில், வங்கிக் காட் கொண்டவை 10 சதவீதம் (14லட்சம்) மட்டுமே. இந்தியா 33 சதவீதமான (15 கோடி) தொழிலாளர்கள் பணத்தாள் மூலமே கூலியைப் பெறுகின்றனர். 

வங்கிப் பரிவர்த்தனை அல்லாத, பணப் பரிவர்த்தனை மூலமான உற்பத்தியும் நுகர்வும், இந்தியக் கோடீஸ்வரர்களின் சுய இழப்பாக இருக்கின்றது. இதைச் சரிசெய்யத்தான், அதாவது பண சுழற்சியிலான உற்பத்தி மற்றும் நுகர்வை முடக்கவே, 85 சதவீதமான 500, 1000 ரூபா பணத் தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பாகும். இந்த அறிவிப்புக்கு பின்னாலான பார்ப்பனியத்துக்குரிய மனவக்கிரங்களே, மக்களை நடுரோட்டில் கொண்டுவந்து நிறுத்தியது.   

இந்தியாவில் 5000 பேரில் ஒருவரிடம் தான் கிரடிக்காட்டே இருந்தது. 1000 க்கு ஐந்து பேரிடம் தான் டெபிட் காட்டு இருந்தது. இதில் 90 சதவீதம் வங்கியிலிருந்து பணம் எடுக்கத்தான் அதை உபயோகித்தனர். ஆனால் பணத்தை எடுக்க பணம் இருக்கவில்லை. அதேநேரம் ஒவ்வொரு ஐந்து கிராமத்துக்கும் 4 கிராமத்தில் வங்கியே கிடையாது. மொத்தம் 134000 வங்கிகள் 84000 நகரங்களில் இருந்தது. இப்படிப்பட்ட சூழல் உழைத்த பணத்தை மாற்ற முடியாத மக்கள் மேல், பரந்துபட்ட தாக்குதலை மோடி தலைமையில் நடத்தினர்.   

பணம் செல்லாத சூழலில், வங்கி அட்டை, செக் முறை அல்லாத அனைத்து  உற்பத்தியையும் - நுகர்வையும் முடக்கியது. சிறு வர்த்தகங்கள் முடங்கியது. விவசாயம் விதைக்கவும் விதைத்ததை விற்கவும் முடியாது முடங்கியது. கடல் உற்பத்தியை நிறுத்தியது. பால், முட்டை என்று எல்லாவற்றையும் அழுகுமாறு பார்த்துக் கொண்டது. சிறு தொழில்கள் முதல் சிறு வணிகம் வரையான அனைத்தையும் முடக்கும், பெரும் மூலதனத்தின்  தாக்குதலே இந்தப் பண நீக்க நடவடிக்கையாகும். 

பெரும் மூலதனங்கள் கறுப்பு பணமாக காட்டியது, தங்கள் சுரண்டலை விரிவாக நடத்த தடையாக இருக்கின்ற சிறு உற்பத்தியையும் மற்றும் சிறு வர்த்தகத்தையும் தான். உதாரணமாக பன்நாட்டு சுப்பர்மாக்கற்றுகளின் பொருளைவிட, சிறு வர்த்தகத்தில் பொருட்களின் விலை குறைவாக இருக்கக் காரணம், சிறு வர்த்தகத்தில் பொருட்கள் விற்பனை வரிமுறைக்கு உட்படாது இருப்பதாகும். தனியான பண வர்த்தகமாக இருப்பதால், உற்பத்தி மற்றும் விநியோகத்துக்கு இடையில் தரகர்கள் முறை இருப்பதில்லை. விலை குறைந்த பொருட்களாக மக்களுக்கு சென்று அடைவதால், பெரும் மூலதனங்களின் எதிர்த் தாக்குதல் தான் பணம் மீதான அதிரடித் தாக்குதல். கறுப்புப் பணத்தின் பெயரில், மோடி தலைமையில் அரங்கேறி இருக்கின்றது.   

தேர்தல் காலத்தில் மோடி சுவிஸ் வங்கியில் உள்ள கள்ளப் பணத்தை மீட்டு, குடும்பத்துக்கு 16 லட்சத்தை போடப்போவதாகக் கூறித் தான் ஆட்சியைப் பிடித்தார் என்பது தனிக் கதை. உண்மையான கள்ளப்பணங்கள் எங்கே குவிந்து இருக்கின்றது என்பது தெரிந்திருக்க, அதைச் செய்யாது 500, 1000 ரூபா நோட்டுக்களை செல்லாதாக்கிய மோசடி மூலம் கள்ளப்பணத்தை காப்பாற்றி இருக்கின்றனர்.

உதாரணமாக 12 லட்சம்  மக்கள் தொகையக் கொண்ட மொரீசியஸ் தீவு, 40 சதவீதமாக அன்னிய முதலீட்டை இந்தியாவில் போட்டு இருக்கின்றது. கள்ளப்பணம் அன்னிய முதலீடாக திரும்பி வருவதற்கான, இது போன்ற பற்பல சுற்றுப் பாதைகள் தான், கள்ளப்பணத்தின் பிறப்பிடமாகவும், கள்ளப் பணத்தின் குவியலாகவும் இருக்கின்றது. அன்னிய முதலீடுகளின் போர்வையில் நடக்கும் கறுப்பு நடவடிக்கைகளே, கறுப்புப் பணத்தின் ஊற்று மூலமாக இருக்கின்றது. 

சுவிஸ் வங்கி உள்ளிட்ட கறுப்புப் பணம் குவிகின்ற இடங்களில் உள்ள பணத்தில் 3 சதவீதமானது அரசியல் மற்றும் அதிகாரிகளுடையது.  போதைவஸ்து மற்றும் முறைகேடான தொழில்கள் மூலம் 33 சதவீதம் கிடைக்கின்றது. மிகுதியான 63 சதவீதம் பன்னாட்டு  முதலாளிகளுடையது. சர்வதேச நிதி தொடர்பான ஆய்வுகள் இதைத் தெளிவாக்குகின்றது. மோடி தலைமையில் பன்னாட்டு முதலாளிகளின் கள்ளப் பணத்தை சுவிஸ் வங்கி முதல் மொரீசியஸ் வரை குவித்து வைத்திருக்கின்றவர்கள் தான், பண நீக்க நடவடிக்கை மூலம் கள்ளப் பண ஒழிப்பு என்று கூறி மக்கள் மேல் பாய்ந்து இருக்கின்றனர்.  

உள்ளுர் கள்ளப் பணம் எங்கே இருக்கின்றது என்றால் முதலாளிகள், பணக்காரர்கள், அதிகாரிகள், கோயில்கள், ஊகவாணிபம் செய்பவர்கள், பெரும் வியாபாரிகள், அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், திடீர் பணக்காரர்கள், கட்டுமானங்களை கையாள்பவர்கள், வங்கிகள், சினிமாத்துறை .. என்ற ஒரு நீண்ட பட்டியலே இருக்கின்றது. அவர்களின் வீடுகளையும், சொத்துக்களையும் தோண்டினால் போதும், உள்ளுர் கள்ளப் பணத்தின் பெரும் பகுதியை கைப்பற்றிவிட முடியும். அதை மோடி செய்யவில்லை. 

இன்று பணப் பெறுமதி நீக்கத்துக்கு விதிவிலக்களித்துள்ள கோயில்கள், அரசியல் கட்சிகள்.. நாட்டின் கள்ளப்பணப் புழக்கத்தின் ஊற்று மூலமாக இயங்குகின்றது. இப்படி இருக்க வங்கிக் கணக்கு இல்லாத, வங்கி அட்டையே இல்லாத கோடானுகோடி மக்களையே  கள்ளப் பண பேர்வழியாக மாற்றியது பண நீக்க நடவடிக்கை. அவர்களை வங்கி முன் கொண்டு வந்து நிறுத்தியதுடன், கொல்லுகின்ற அளவுக்கு வக்கிரமாக வங்கி செயற்பாட்டையும் பணபட்டுவாடாவையும் மட்டுப்படுத்தின.  

மறுபக்கத்தில் கட்டுக்கட்டாக பணத்தை வைத்திருந்தவன், கட்டுக்கட்டாக மாற்றிவிட்டதையும், அதில் சில பிடிபடுவதையும் காண முடிகின்றது. வங்கிகள் மூலம் நடக்கும் கள்ளப் பண பரிவர்த்தனை என்பது, வங்கிக்கே உரியது தான். இறக்குமதி ஏற்றுமதி வர்த்தகங்கள் மூலம்,  நாட்டுக்கு வெளியில் கள்ளப் பணத்தை கொண்டு செல்ல உதவிய வங்கிகள் தான், உள்ளுர் கள்ளப் பணத்திற்கு பதிய தரகராக மாறி இருக்கின்றது. 

வங்கிகளே கள்ளப்பணத்தின் ஆதி மூலமாக இருக்க, வங்கிகள் செயற்பாடுகள் மூலம் கள்ளப் பணத்தை ஒழிக்கும் என்ற கூறுகின்ற பித்தலாட்டத்தை நடத்துகின்றனர்.

பணம் அல்லாத வங்கி செயற்பாடுகள் மூலம் பணம் பரிவர்த்தனையானது, ஊழலையும், லஞ்சத்தையும் ஒழிக்கும் என்பது கண்கட்டு வித்தை. வங்கி செயற்பாடுகளைக் கொண்ட மேற்குநாடுகளில் கூட, கள்ளப்பணம் கரைபுரண்டு ஓடுகின்றது. 

உதாரணமாக பெரும் பன்நாட்டு நிறுவனங்கள் வரி மோசடிகளில் ஈடுபடுவது அம்பலமாவது உட்பட தண்டனைக்குள்ளாவது வரை, மேற்கிலேயே ஆயிரம் உதாரணங்கள் உண்டு. கள்ளப் பணம், ஊழல், லஞ்சம் முதலாளித்துவத்தினுள்ளானது. 

சட்டரீதியான தனிச்சொத்துடமை குவிகின்றதன் பின்னால், உழைத்துத் திரட்டி பணமோ, உழைப்பைச் சுரண்டி திரட்டிய பணமோ, வட்டிப் பணமோ, ஊகவணிக பணமோ பணமாக இருப்பதில்லை. இவை கணிசமானது. மாறாக கறுப்பு பணமும், மக்களின் சொத்தை திருடியும், சட்டத்தை வளைத்தும், பொதுச்சொத்தை தனதாக்கியும், அரசை கொண்டு செல்வத்தைக் குவிக்கின்ற தனியுடமைக்குள் தான், அக்கம்பக்கமாக கள்ளப்பணம் குவிகின்றது. 

உண்மையில் வங்கி முறைக்கு உட்படாத வர்த்தகங்கள், தொழில்கள் கறுப்பு பணத்தை பெருமளவில் உற்பத்தி செய்வதில்லை. மாறாக மக்களின் தேவை என்ற, குறுகிய எல்லைக்குள்ளானது. அதாவது நாட்டின் செல்வம் எந்தளவுக்கு பகிரப்பட்டுள்ளதோ, அந்த எல்லைக்கு உட்பட்டது.  

கள்ளப்பணம் என்பது செல்வம் குவிக்கின்ற தனியுடமைக் கண்ணோட்டத்திலும் நடத்தையிலும் உள்ளது. தனியுடமையை ஒழிக்காது தனியுடமை உருவாக்கும் குற்றங்களை ஒழிக்க முடியாது.