Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மக்கள் பேரவை போன்று முடிச்சு மாறிகள், சமூகத்தில் தோன்றுவது எதனால்?

 

எப்போது மக்களின் பிரச்சனைகளுக்கு, உண்மையாகப் போராடுகின்ற இடதுசாரிகள் முன்னணிக்கு வரவில்லையோ அப்போது முடிச்சு மாறிகள் சமூகத்தின் தலைவிதியை தீர்மானிக்கின்றனர்.

உதாரணமாக முதல்வராக ஆட்சியில் இருக்கும் விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை யாழ்ப்பாணத்தில் "எழுக தமிழ்" கோசத்தில் நடத்திய கூத்துக்களை புரிந்து கொள்வது எப்படி? இன்று ஆட்சியில் இருக்கின்ற அவர்கள், இ;ன்று எதையும் செய்ய வக்கற்ற வெகுளிகள் என்பதைத் தாண்டி இதைப் புரிந்துகொள்ள முடியாது. மக்களை ஏமாற்றி தொடர்ந்து தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்த நடத்திய நாடகமாக விளங்கிக் கொள்ள முடியும். எல்லாம் மக்களை ஏமாற்றுகின்ற மோசடிகள் இவை.

எம் முன்னான கேள்வி எரியும் சமூகப் பிரச்சனைகள் மீது இடதுசாரிகள் என்ன செய்கின்றனர் என்பதே. இடதுசாரிய தனிமைவாதமும் குழுவாதமும் இன்று எதையும் செய்ய வக்கற்றுக் கிடக்கின்றது என்பது உண்மை.

தனியுடமை சார்ந்த தன்னிலைவாதமும் குழுவாதமும் போராட்டங்களை விட்டுவைக்கவில்லை. தனிநபர்களும், குழுக்களும் குறுகிய தன்னிலைவாதத்துக்குள் சிக்கி விடுவதும், கூட்டான பொதுப் போராட்டத்தை தவிர்த்துக் கொள்வதும் பொதுவில் நடந்தேறுகின்றது. மக்களின் பிரச்சனைகளுக்கு  தலைமை தாங்க வக்கற்றுவிடுவதும், பிற வர்க்கங்கள் மக்களை தலைமை தாங்குகின்ற அவலமுமாக தொடருகின்றது.

இந்த இடதுசாரிய பின்னணியில்

1. தன்னை அல்லது குழுவை முன்னிலைப்படுத்துவதன் மூலம் பொதுப் போராட்டங்களைச் சிறுமைப்படுத்துவதும் அல்லது தவிர்ப்பதும் நடந்தேறுகின்றது.   

2. இடதுசாரிய போராட்டங்கள் பின் இடதுசாரிய அணிகள் தன்னியல்பாக அணிதிரண்டு செல்வதைத் தடுக்க தலைமை மட்டத்தில் ஏற்படுகின்ற இணைவுகள் மூலம் அணிகளின் ஒன்றிணைந்த போராட்டங்களில் இருந்து விலக்கி வைப்பது நடந்தேறுகின்றது.

3. கடந்த யுத்த காலத்திய அளவுகோலான "துரோகம்  - தியாகம்" என்ற பொதுப்புத்தி அளவுகோள்களைக் கொண்டு, தனிநபர்களையும் குழுக்களையும் அளக்கின்ற தூய்மைவாதம் சார்ந்த தனிமைவாதக் கண்ணோட்டம் மூலம் போராட்டங்களின் அணிகள் இணைவதை தடுத்து நிறுத்துவது நடந்தேறுகின்றது.  

4. உலகம் கல்வி அறிவற்ற சமூகமாகவும், வெவ்வேறு சமூகக் குழுக்கள் அரசியல் விழிப்புறாததுமான கடந்த காலத்தில், மையப்படுத்தப்பட்ட ஒரு கட்சி தலைமையிலான  இடதுசாரிய இயக்க நடைமுறை இருந்து வந்தது. இன்று கல்வி அறிவு பெற்ற சமூகமாகவும், அரசியல் ரீதியாக சமூகக் குழுக்கள் விழிப்புற்று போராடுகின்ற நிலையில், கடந்த காலத்தில் நடந்தது போல் ஒரு கட்சி மூலம் போராட்டத்துக்கு தலைமை தாங்க முடியாது என்ற உண்மையை உணராத குழுவாதமும் சார்ந்த தனிமைவாதமும் போராட்டங்களை முடக்குகின்றது. ஒன்றிணைந்த பொதுக்கோரிக்கைகள், பொதுப் போராட்டங்கள் மூலம் மக்களை அணிதிரட்டுவதும், கட்சிக்குள் இருப்பது போல் அதற்கு உண்மையாக நேர்மையாகவும் செயற்படுவதும் நடந்தேறுவதில்லை.       

இப்படி இன்று இடதுசாரிய போராட்டங்களின் பின்னடைவுக்கு குறிப்பாக இந்தப் போக்குகளும் காரணங்களாக இருக்கின்றது. 

இன்று இதைக் கடந்தாக வேண்டும். பொதுக் கோரிக்கைகள், பொது விடையங்களின் மீது பொதுச் செயற்பாடுகள் அவசியமானது. தனித்து அணிதிரட்டுவதை விட, கூடி அணிதிரட்டுவது முதன்மையானதாக மாற வேண்டும்.

1. இடதுசாரிய தமிழ் தரப்புகளுக்கு இடையில் ஒன்றிணைந்த செயல்பூர்வமான நடைமுறை உருவாக்கப்பட வேண்டும். எந்தப் போராட்டமும் தனித்தாக அல்லாது ஒன்றிணைந்;த கூட்டு முயற்சி ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

2. இடதுசாரிய சிங்கள தரப்புகளுக்கு இடையில் இதே போன்று ஒன்றிணைந்த செயல்பூர்வமான நடைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

3. இடதுசாரிய தமிழ் - சிங்கள தரப்புகளின் ஒன்றிணைந்த செயற்பாடுகள், உதிரியாகவும்  அமைப்பு ரீதியாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இன்று இலங்கையில் அவசியமான அடிப்படையான உடனடி வேலைத்திட்டம் இதுவாகவே  இருக்க முடியும். இதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். இதனை தனித்தனியான அமைப்பு மற்றும்  கட்சியின் தனிச்செயற்பாட்டுடன் இதைக் குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை.

பொதுப் பிரச்சனைகள் மீது பொதுப் போராட்டம் என்பதை இடதுசாரிய கோசமாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும். இதை உணர்வது, கூடி விவாதிப்பதைக் கடந்து நடைமுறையில் முன்னெடுக்க வேண்டும். இன்று அங்குமிங்குமாக இது குறித்துப் பேசிய போதும் நடைமுறையில் குழுவாதம், தனிமைவாதம் முன்னுக்கு நின்று இதை இல்லாதாக்குகின்றது என்பதை கவனத்தில் எடுத்தாக வேண்டும். ஒவ்வொருவரும் உண்மையாகவும் நேர்மையாகவும் முன்வந்து முன்னெடுத்தாக வேண்டும். 

பொதுப் பிரச்சனை மீது பொதுப் போராட்டங்களில் முன்னணிக்கு வந்து அனைவரும் நேர்மையாக செயற்படாத வரை, தனிமைவாதமும் குழுவாதமும் மக்களைச் சார்ந்த உண்மையான ஒன்றாக இருக்காது என்பதுடன் நடைமுறையிலான செயல் பயனற்றதாகிவிடும்.