Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

பல்கலைக்கழக இனவாத வன்முறையின் பின்னணியில்… குற்றவாளிகள் யார்?

"யாழ்.பல்கலைக்கழக மோதல் தற்செயலாக நடந்த சம்பவமல்ல!" என்கின்றார் சுமந்திரன். இப்படிக் கூறிய சுமந்திரன், வன்முறையில் ஈடுபட்டதாக கூறி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட மாணவர் ஒன்றியத் தலைவர் த.சுசீந்திரனுக்காக, நீதிமன்றத்தில் ஆஜராகி இருப்பதன் பின்னணி என்ன? ஓரு கட்சியின் தலைவர் இனவன்முறையில் ஈடுபட்டதாகக் கூறிய ஒருவருக்காக நீதிமன்றம் செல்லும் பின்னணியில், இந்த வன்முறைக்கான தொடர்பு என்ன?

1970 களில் கூட்டணி அல்லாத மாற்று அரசியலை கொண்டவர்களை துரோகியாகக் காட்டி சுட்டுக் கொல்லவும், அவ்வாறு கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறைகளில் இருந்து மீட்க வழக்காடி, சிறைமீண்டவர்களை வீரர்களாக வரவேற்றவர்களின் தொடர்ச்சியில் தான், மக்களைக் கொன்று இயக்கங்கள் இறுதியில் முள்ளிவாய்க்காலில் மக்களையே பலியிட்டது. பழைய அதே அரசியல் செயற்பாட்டைத் தான் கூட்டமைப்பு சுமந்திரன் மூலம் மீள அரங்கேற்றத் தொடங்கி இருக்கின்றது.   

மாணவர் ஒன்றிய தலைவர் த.சுசீந்திரனின் வன்முறை தொடர்பான தனது பேட்டியில் "பிற இன, மத மாணவர்களுக்கான மதிப்பினை நாம் எப்போதும் வழங்குகிறோம். ஆனால் எங்கள் இன, மத கலாச்சாரத்தை நசுக்குவதற்கு எவருக்கும் இடமளிக்கமாட்டோம்" என்று கூறுகின்றனர். இப்படிக் கூறுவதன் பின்னால்

1. "பிற இன, மத" மாணவர்களின் தலைவரல்ல பல்கலைக்கழக மாணவ ஒன்றியத் தலைவர் என்கின்றார். தன் இன மாணவருக்கு மட்டும் தான் தலைவர் என்பதன் மூலம், எப்படி பல் இன மொழி பேசும் மாணவர்களின் தலைவராக பல்கலைக்கழகத்தில் இருக்க முடியும்? எப்படி இன மத முரண்பாடுகளைத் தீர்க்க முடியும்?

2. "எங்கள் இன, மத கலாச்சார.."  த்திற்குள் உள்படாத எதற்கும் "இடமளிக்கமாட்டோம்" என்னும் குரலில் இங்கு வன்முறை தீர்வாகின்றது. இங்கு இன, மத கலாச்சாரம் என்பது, இந்து வேளாள யாழ் மையவாதத்தைக் குறிக்கின்றது. எது மதம்? எது கலாச்சாரம்? எது இனம்? இந்தப் பின்னணியில் அண்மைக்காலத்தில் சாறி கட்டாத பெண்களை "நடத்தை கெட்டவளாக" இதே மாணவர் அமைப்பு கூறியதை திருப்பிப் பார்க்க முடியும்.          

இங்கு மாணவர் ஒன்றிய தலைவர் த.சுசீந்திரனின் கூற்றுக்கும், நடந்த வன்முறைக்கும், அதன் பின்னான கைதுக்குமான தொடர்பு குறித்து நாம் கேள்வி எழுப்பியாக வேண்டும். இனவாதத்தை அரசியலாகக் கொண்ட சுமந்திரன், இவருக்காக நீதிமன்றம் சென்ற பின்னணியில் வைத்து, வன்முறையை அவர்கள் கைக்கொண்டதை நோக்க வேண்டும். 

மேலும்  சுமந்திரன் கூறுகிறார் "சில முற்போக்கு மாற்றங்களை விரும்பாதவர்கள், குறிப்பாக ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டவர்கள், இவ்வாறு பல்கலைக்கழகங்களை தளமாக பயன்படுத்துகிறார்கள்" என்று கூறுகின்ற பின்னணியில், அவ்வாறு கூறிக்கொண்டு தங்கள் சொந்த இனவாத நடத்தையை மூடிமறைக்க மற்றவர்கள் மீது மட்டும் பழியை சுமத்த முற்படுவது ஏன்? எந்த ஆதாரத்தையும் முன்வைக்காது "ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டவர்கள்" அது நடந்திருப்பதாக கூறுவது, எப்படி சாத்தியம்?  "முற்போக்கு மாற்றங்களை விரும்பாதவர்கள்" என்று கூறுகின்ற நீங்கள் - அரசுடன் சேர்ந்து என்ன "முற்போக்கை" கொண்டு வந்துவீட்டீர்கள்?       

மேலும் சுமந்திரன் கூறுகின்றார் "ஊவா வெல்லச, சப்ரகமுவ, மற்றும் கிழக்கு பல்கலைக்கழகம் போன்றவற்றில் குறிப்பிட்ட காலத்திற்குள் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவை தற்செயலாக நடைபெற்றிருக்காது. எனவே இதில் நாங்கள் அதிகம் கவனமாக இருக்க வேண்டும்" என்று கூறுவதன் மூலம், தமிழ் இனவாதத்தையும் அதன் வன்முறையையும் நியாயப்படுத்துகின்றார்.

இந்த பின்னணியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் குற்றவாளிகள் அல்ல. மாறாக நடந்த இனவாத செயற்பாட்டை தன் இனம் சார்ந்து நேர்மையாக இனம் காட்டி கண்டிக்காது, அதற்கு ஆதரவாக செயற்படும் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், கலை இலக்கியவாதிகள் தான் உண்மையான குற்றவாளிகள். சமூகத்தை தவறாக வழிநடத்தி, வன்முறையைத் தூண்டிவிட்டு குளிர்காய்பவர்கள்.