Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

"தமிழர் என்ற ஒரு இனம் உண்டு தனியே அவர்க்கொரு குணம் உண்டு" அது என்ன குணம்?

ஒரு மனிதனின் சிந்தனைகள் எங்கிருந்து தோன்றுகின்றது? பிறக்கும் போதே இருப்பதில்லை. கற்பனையில் இருந்து தோன்றுவதில்லை. சமூகத்தின் அங்கமாக மனிதன் இயங்கும் போது அதில் இருந்தே சிந்தனை தோற்றம் பெறுகின்றது. அதேநேரம் சமூகத்தில் தொடர்ந்து இயங்குவதாலே சரியான சிந்தனையாக உருவாக முடியும். சிந்தனை செயல் வடிவம் பெறும் போது இருக்கும் நிலையில் இருந்து மாற்றம் நிகழ்கின்றது.

சமூகத்தின் அங்கமாக இயங்காத கூட்டமைப்பும், அதன் பிரதிநிதியான முதலமைச்சர் விக்கினேஸ்வரனும், வடக்கு சமூகத்தின் இன்றைய நிலை குறித்து சரியான சிந்தனையையும் தீர்வையும் எப்படித்தான் முன்வைக்க முடியும்? அவரால் பழைய ஒடுக்கும் சாதிய சமூகத்தை ஒட்டி சிந்திக்கவும், அதை நோக்கியே செயற்படவுமே முடிகின்றது.

முதலமைச்சர் விக்கினேஸ்வரன் "தமிழர் என்ற ஒரு இனம் உண்டு தனியே அவர்க்கொரு குணம் உண்டு என்று" கூறி, தமிழனின் பண்பாடு குறித்தும், ஒழுக்கநெறி குறித்தும், உயர்நிலை பற்றியும் முன்வைத்த கருத்துகளின் சாரமானது, யாழ்ப்பாணிய வெள்ளாளச் சாதியமாகும். யாழ் ஒடுக்கும் சாதிய சமூகத்தால் தெரிவு செய்யப்பட்ட சாதிய பிரதிநிதியாக இருப்பதால் தானோ என்னவோ, 1980க்கு முந்தைய சாதிய வாழ்க்கைமுறையை உருவாக்குவது பற்றி உபதேசம் செய்கின்றார்.

"தமிழர் என்ற ஒரு இனம் உண்டு தனியே அவர்க்கொரு குணம் உண்டு என்று முன்பு கூறி வைத்தார்கள்." என்று அவர் எடுத்துக் காட்டும் அந்த தமிழன் குணம் என்ன? சுற்றிச் சுற்றி "சுப்பர் கொல்லைக்குள்ளே" தேடினாலும், அது ஒடுக்கும் சாதிக் "குணத்தை" பற்றியதாக இருப்பதும் இதைத் தாண்டி எதையும் கண்டடைய முடியவில்லை. தமிழன் என்றும் இனம் என்றும் அடையாளப்படுத்துகின்ற எல்லாவிதமான அடையாளங்களும், சாதியைக் கடந்து நின்று அடையாளப்படுத்துவதில்லை. சாதியை தக்க வைக்கும் தமிழனின் அடையாளமும், அதற்கு "குணம்" உண்டு என்றால், ஒடுக்கும் சாதிக் குணத்தையே குறிக்கின்றது. அதைத் தான் தமிழனின் பண்பாடாகவும், ஒழுக்கமாகவும், உயர்நிலை சமூக அடையாளமாகவும் முதலமைச்சர் முன்வைக்கின்றார்.

அவர் தன் உரையில் "தமிழ் இனம் தனக்கே உரிய ஒரு தனித்துவத்துடன் சட்டத்தை மதிப்பவர்களாக நாட்டின் நற்பிரஜைகளாக ஏனையோருக்கு முன்மாதிரியானதாகவுமுள்ள ஒரு சமூகமாக வாழ்ந்த காலம் மாறி இன்று மிகப் பின்தங்கிய ஒரு சமூகமாக மாற்றப்பட்டிருப்பது மிகவும் வேதனைக்குரியது. அன்று கல்வியால் உயர்ந்த சமூகம் இன்று காடைத்தனத்தில் உயர்ந்திருக்கின்றது." என்கின்றார்.

விக்கினேஸ்வரனின் இக் கூற்று, சாதியப் பிரதிநிதியின் எடுப்பான வெளிப்பாடு. இங்கு தமிழன் "சட்டத்தை மதிப்பவர்களாக" என அவர் கூறும் போது, நாட்டின் பொது சிவில் சட்டத்தை மதிப்பவனாகக் கூறவில்லை. மாறாக "தமிழ் இனம் தனக்கே உரிய ஒரு தனித்துவத்துடன் சட்டத்தை மதிப்பவர்களாக.." இருந்தனர் எனக் கூறுகின்றார். இங்கு "தனக்கே உரியது" எது? ஒடுக்கும் சாதிய சட்ட "தனித்துவத்தை"யும், அதற்குரிய அடிப்படையை மதிப்பதையுமே சமூகமாகவும், அதுவே சமூக ஒழுக்கமாக இருந்ததாகவும் முன்வைக்கின்றார். இன்று ஒடுக்கும் சாதிய அறங்கள் தகர்ந்து "பின்தங்கிய ஒரு சமூகமாக" மாறி, "காடைத்தனத்தில்" ஈடுபடுவதாக அங்கலாய்க்கின்றார்.

ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக அல்லாது, ஒரு வர்க்கத்தினதும், இந்த வெள்ளாள ஒடுக்கும் சாதியினதும், அதிலும் உயர் அந்தஸ்து கொண்ட சிலரினதும் பிரதிநிதியாக நின்று சிந்திக்கின்றார். அந்த சிந்தனையின் வெளிப்பாடாக "பண்பாட்டு ஒழுக்கநெறியுடன் வாழ்ந்த பலரின் பிள்ளைகளும் குடும்பங்களும் இன்று ஒழுக்கநெறி தவறி போதைப் பழக்கங்களுடன் தமது போக்கில் வாழத்தலைப்பட்டதன் விளைவே எமது சமூகம் இவ்வளவு பின்னடைவுகளை சந்திக்க வழிவகுத்துள்ளது." என்று கூறுகின்றார். ஆக சமூக அவலங்களுக்கான காரணத்தை ஒடுக்கும் சாதிய "பண்பாட்டு ஒழுக்கநெறியுடன் வாழ்ந்த" சாதிய சமூகத்தின் பின்னணியில் இருந்து காணவும், காட்டவும் முற்படுகின்றார். வெள்ளாள இந்து ஒடுக்கும் சாதிய சிந்தனை முறையிலான இந்தக் கண்டுபிடிப்பு, "பண்பாட்டு ஒழுக்க நெறியுடன் வாழ்ந்த பலரின் பிள்ளைகளும் குடும்பங்கள்" குறித்ததாக இனம் கண்டு, அதை புலம்ப வைக்கின்றது.

வடக்கில் குற்றங்களும்;, சமூகரீதியான வாழ்க்கை முறைக்குள் ஏற்பட்டு இருக்கின்ற நெருக்கடிகளை தீர்க்க - பழைய சாதிய நிலப்பிரபுத்துவ வெள்ளாள ஒடுக்கும் அமைப்பு முறையையும், அதன் ஒழுக்கநெறியையும் மீள நிறுவுவதன் மூலம், தீர்வு காண முடியும் என்பதே முதலமைச்சரின் அரசியலின் சாரமாகும். ஒடுக்கும் சாதி அறங்களை போதிக்கக்கூடிய கோயில்களையும் அதற்கான சாதியக் கிராமங்களையும் கொண்ட சமூகமாக காணும் பார்வை. இது தான் அவர் முதன்மைப்படுத்தி நிற்கும் இந்துமதத்தின் பொது அறம் கூட.

வடக்கில் குற்றங்களும், சமூகரீதியான சிதைவுகளும்; ஏற்பட அடிப்படைக் காரணமாக இருப்பது எது? உழைப்பு பற்றி அதன் பொதுக் கண்ணோட்டத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி தான் காரணம். உழைத்து வாழ்ந்த சமூக அமைப்பு, உழைப்பு சார்ந்த பண்பாடு மீது தான் அறங்களும், மனிதத் தன்மைகளும் உருவாகின்றது. வடக்கில் ஒடுக்கும் சாதியம் இதன் மேல் அமர்ந்து இருந்ததே, கடந்த மனித வரலாறாகும்.

யுத்த பின்னணியில் உழைப்பு பற்றியும், உழைத்து வாழும் கண்ணோட்டமும் சிதைந்து விட்ட நி;லையில், உழைத்து வாழும் சமூகத்தை மீளக் கட்டி அமைப்பதன் மூலம் தான் தீர்வு காண முடியும். கைநீட்டியும், கையேந்தியும் வாழ்வதற்குப் பதில், சொந்தக் காலில் உழைத்து வாழும் சமூகத்தை உருவாக்குவதற்கான போராட்டத்தை நடத்த வேண்டும். இல்லாது பழைய ஒடுக்கும் சாதிய அமைப்பை தீர்வாக காண்பது, அது மனிதப் பண்பாட்டை உருவாக்கும் என்பது மாயை. அதேநேரம் "கல்வியால் உயர்ந்த சமூகம் தாழ்ந்து காடைத்தனத்தில் உயர்ந்திருப்பதாக" கூறி, ஒடுக்கும் சாதிய அமைப்பை உசுப்பேற்றுவது தீர்வல்ல.

இங்கு "கல்வியால் உயர்ந்த சமூகம்" பற்றி முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பீற்றிக் கொள்;வது எல்லாம், 1980 களில் வடக்கில் வாழ்ந்த 40 சதவீதமான ஒடுக்கப்பட்ட சாதிய மக்களிற்கு கல்வியை மறுத்த வக்கிரத்தை உள்ளடக்கியதே. வடக்கில் 40 சதவீதமான ஒடுக்கப்பட்ட சாதிய மாணவர்களின் கல்வி உரிமையை மறுத்த, "கல்வியால் உயர்ந்த சமூகம்" பற்றிய, ஒடுக்கும் சாதிய கண்ணோட்டமே இங்கு தொக்கி நிற்கின்றது.

ஒடுக்கும் சாதிய மற்றும் உயர் வர்க்க நடத்தைகளானது, யுத்தத்தைப் பயன்படுத்தி பிழைத்த சுரண்டும் வர்க்க மனவியல்பும், உலகமயமாதலில் வீங்கி வெம்பிய உதிரிப் பண்பாட்டின் மனவியல்பையும் அடிப்படையாக கொண்டதாகும். இன்று சாதிய கிராமங்களை தோற்றுவிக்கும் வண்ணம், கோயில்களை சுற்றி அணிதிரண்டு நிற்கும் மனிதவிரோதிகளும் இவர்கள் தான். யாழ் மையவாதத்தை பிரதிநிதித்துவம் செய்யும் இந்த ஒடுக்கும் கும்பல் தான், விக்கினேஸ்வரன் போன்ற சாதிய குலக் கொழுந்துகளை தங்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கின்றனர்.

போராட்டத்தை தோற்கடித்த பின் புலம்பியது போல் சமூகத்தின் இன்றைய நிலையை மாற்ற முடியாது "பண்பாட்டு ஒழுக்கநெறியுடன் வாழ்ந்த பலரின் பிள்ளைகளும் குடும்பங்களையும்" சொல்லி புலம்பத்தான் முடியும்.