Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

பிரிட்டனின் ஐரோப்பிய யூனியன் வாக்களிப்பு குறித்து

ஐரோப்பிய பொருளாதாரக் கட்டமைப்பில் பிரிட்டன் தொடர்வதா இல்லையா என்பதை தெரிவு செய்யுமாறு பிரிட்டிஸ் மக்களை, மூலதனம் கோருகின்றது. பாரிய சந்தையை, அதற்கு இருக்கின்ற தடைகளை அகற்றி, உள்நாட்டுக் கட்டுப்பாடுகளை அகற்றி, அகல விஸ்தரிப்பதை மையமாகக் கொண்டதே ஐரோப்பிய யூனியன் ஒன்றிணைவாகும். மீறி மனிதர்களை எல்லைகள் கடந்து ஓன்றிணைப்பதை குறிக்கோளாகக் கொண்டதல்ல. தேசியம், இனம், மதம், சாதி, நிறம் என்ற எல்லைகளைக் கடந்து, மனிதர்களை மனிதனாக ஒருங்கிணைக்கும் நோக்கத்தைக் கொண்டதல்ல.

மூலதன விஸ்தரிப்பின் மூலம் மனிதனை மனிதன் சுரண்டுவதற்கும்; உங்களை யார் சுரண்டுவதன் மூலம் அதிக லாபமானது என்பதை தெரிவு செய்யுமாறு, பிரிட்டிஸ் மக்களைக் கோருகின்றது. தனிமனிதர்களை தத்தம் சுயநலத்துடன் அணுகி, வாக்களிக்குமாறு நிர்ப்பந்திக்கின்றது.

சுரண்டுவதற்கான பொருளாக மனிதன் கருதப்படுகின்றான். எல்லைகள் கடந்து மனிதனைச் சுரண்டுவதன் மூலம் உலகையே சுரண்ட முடிகின்றது. இது தான் ஐரோப்பிய - பிரிட்டிஸ் மூலதனங்களினதும் அதை பாதுகாக்கும்  ஏகாபத்தியங்களின்  கொள்கையும் நடைமுறையுமாகும். இந்த ஏகாதிபத்திய சர்வதேச  மூலதன சுரண்டல் வலையமைப்பு, தான் சுரண்டிக்கொள்வதற்கு அமைவாக வாக்களிக்குமாறு இந்த வாக்களிப்பின் மூலம் வேண்டுகிறது.    

ஆம் அல்லது இல்லை என்ற தெரிவைத் தவிர வேறு எந்தத் தெரிவும் இன்றி, இதற்கான எதிர்ப்பை "எதிர்த்து" வாக்களிக்குமாறு வழிகாட்டி வேறு விளக்கத் தெரிவை இல்லாதாக்குகின்றது. ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதற்கான எதிர்ப்பானது தனது வாதத்தில் மனிதர்களை பிளக்கும் தேசியவாதம், நிறவாதம், பண்பாட்டு வாதம், பழைமைவாதம் என்பனவற்றை தூக்கிநிறுத்தி அவற்றை முதன்மையாகக் கொண்டு, எதிர்த்து வாக்களிக்குமாறு தூண்டுகின்றது. இன்னுமொரு புறத்தில் ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்திருப்பதால் பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்ட அனுகூலத்தைப் பெறுகின்ற மற்றைய வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளிகள் குறைந்த கூலியில் வேலைசெய்ய தயாராக இருப்பது தான், ஒரு பிரிட்டிஷ் தொழிலாளியினது வேலை இழப்புக்கும், முன்னர் கிடைத்த கூலி குறைந்தும் போனதற்கான காரணமாகும் என காட்டியும், தொழிலாளர்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக நிறுத்தி சுயநலம் சார்ந்த பொருளாதாரவாதத்தை முன்வைத்தும், எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என தனது சொந்த தொழிலாளர்களைக் கோருகின்றது. இவ்வாறு பலவகையான சக மனிதனுக்கு எதிரான கருத்துகள், நடைமுறைகள் முன்வைக்கப்பட்டு எதிராக வாக்களிக்கமாறு கோரப்படுகின்றது. இதன் அடிப்படையில் பிரிட்டிஸ் ஏகாதிபத்திய தேசியவாதமும் அதன் கூறாக நாசிய பாசிசமும் ஓருங்கிணைந்து எதிர்ப்பாக வெளிப்படுகின்றது.

மறுபக்கத்தில் ஐரோப்பாவின் ஒருங்கிணைந்த பெரு மூலதனத்துக்கான எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்ட "இடதுசாரிய" எதிர்ப்புவாதம் மற்றும் எதிரான வாக்களிப்பானது, தனித்த பிரிட்டிஸ் ஏகாதிபத்திய மூலதனத்தை எதிர்மறையில் முதன்மையாக முன்னிறுத்தி பாதுகாப்பதாக மாறிவிடுகின்றது.               

இங்கு ஐரோப்பிய ஒருங்கிணைந்த பெருமூலதனத்திற்கும், பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தின் தனித்த மூலதனத்துக்கும் எதிராக, சர்வதேசிய ஒருங்கிணைவை முன்வைத்து தனித்துவமாக அணிதிரள்வதை இந்த "இடதுசாரியம்" முன்வைப்பதில்லை. குறிப்பாக நாடுகளுக்கு இடையில் சர்வதேசிய ஓருங்கிணைவை முன்னிறுத்தி,

1.    மூலதனங்கள் இலாபங்களுக்காக மூலதனப் பெருக்கத்துக்காக இணைப்பதை எதிர்த்து - மக்களின் எல்லைகள் கடந்த ஒன்றிணைவை முன்வைக்க வேண்டும். ஆம் அல்லது இல்லை என்பது ஏதோ ஒருவகையில் இந்த அல்லது அந்த மூலதனத்தின் நலன்களுக்கானதே என்பதை முன்னிறுத்தி, மக்களை இந்த அல்லது அந்த மூலதனத்தை தெரிவுசெய்யும் போட்டிக்காக பிளவுபடுத்துகின்ற வாக்களிப்பை எதிர்த்து நிற்க வேண்டும்.

2.    மூலதனங்களைப் பிரிந்து தனி ஏகாதிபத்தியமாக தன்னை முன்னிறுத்துவதையும், அதற்காக பிற மக்கள் கூட்டத்தை எதிரியாக முன்னிறுத்துவதை எதிர்த்து, சர்வதேசிய ஐக்கியத்தை முன்னிறுத்தி நிற்;க வேண்டும்.

எதிர்ப்பு என்பது சர்வதேசிய அடிப்படையில் ஜக்கியத்தைக் கோருவதாகவும், மூலதன ஐக்கியம் மற்றும் பிரிவினையையும் பிளவையும் எதிர்ப்பதாகவும் இருக்கவேண்டும்.

மூலதன அடிப்படையில் ஐரோப்பிய திரள் மூலதனத்துக்கு நிகரானதே பிரிட்டிஸ் தனி மூலதனம். அதேநேரம் இவை ஏகாதிபத்தியங்களாகும். இங்கு தேசிய உள்நாட்டுப் பொருளாதாரமோ அதன் அடிப்படையில்  தேசிய தன்மையையோ இவை கொண்டு இருப்பதில்லை.

இன்றைய உலக ஒழுங்கில் கூட்டாக ஏகாதிபத்திய முரண்பாட்டை எதிர் கொள்வதா அல்லது தனித்து எதிர் கொள்வதா என்ற வாக்களிப்பில், உழைத்து வாழும் மக்கள் இதில் ஒன்றை தெரிவு செய்ய முடியாது.

அனைத்து வடிவிலானதுமான ஏகாதிபத்திய மூலதனத்துக்கும் எதிரான சர்வதேசிய ஒன்றிணைவை முன்வைத்து அணிதிரள்வது மட்டும் தான் ஒரேயொரு தெரிவாகும். ஆம் அல்லது இல்லை என்ற ஒன்றில் பேய்க்கு அல்லது பிசாசுக்கு புள்ளி போடுமாறு, மந்தை கூட்டமாக ஏகாதிபத்தியம் மக்களை வழிநடத்த முனைகின்றது. இதைத்தான் ஜனநாயகம் என்கின்றது. இதற்கு எதிராக தனிநபராக இருந்தாலும், சர்வதேசிய அடிப்படையில் அணுகுவதன் மூலம்  இரண்டுக்கும் எதிராக அணிதிரள்வது மட்டுமே தனித்துவமான மக்கள் சார்ந்த சுயாதீனமான ஜனநாயகத் தெரிவாகவும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான அணிதிரள்வாகவும் இருக்க முடியும்.